Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!

நன்றி குங்குமம் டாக்டர்

தலைமுடி வளர்ச்சியை பாதிக்கும் பொடுகுத் தொல்லை, முடி உதிர்வு, வறட்சியான கூந்தல் போன்ற பிரச்னைகளை சரிசெய்து அழகான மென்மையான பட்டு போன்ற கூந்தலை பெறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அர்கன் எண்ணெய். இந்த அர்கன் எண்ணெய் குறித்தும் அதை கூந்தலுக்கு பயன்படுத்தும் முறை குறித்தும்

தெரிந்துகொள்வோம்.

மொரோக்கா நாட்டில் அதிகளவில் காணப்படும் அர்கன் மரத்தின் பழங்களின் கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுவதே அர்கன் எண்ணெய் ஆகும். இந்த அர்தன் எண்ணெயை அந்நாட்டினர் திரவத் தங்கம் என்று அழைக்கின்றனர்.இந்த எண்ணெய் தயாரிக்கும் பணி சற்று கடினமானதும் அதிகப்படியானதும் என்பதால் இதன் விலையும் கூடுதலாகவே இருக்கிறது. இருந்தாலும் இதில் ஏராளமான பலன்கள் அடங்கியுள்ளது.

மொரோக்கா நாட்டில் பல ஆண்டுகளாகவே அழகுக்காகவும், கைவைத்தியத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்த அர்கன் எண்ணெய். தற்போது இந்த அர்கன் எண்ணெய் குறித்த விழிப்புணர்வு பல நாடுகளில் அதிகரிக்க தொடங்கியதால், பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கு இவை அதிகம் பயன்

படுத்தப்படுகிறது. இவை நன்மை தருவதாக ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சருமத்துக்கு மாய்சுரைசர் பயன்படுத்தினால் சருமம் மென்மையாகும் என்பது போன்று கூந்தலுக்கு மாய்சுரைசர் செய்ய அர்கன் எண்ணெய் சிறப்பாக உதவுகிறது. முடிக்கு சிறந்த கண்டிஷனராக இவை பயன்படுகிறது.மற்ற எண்ணெய்களைக் காட்டிலும் இந்த எண்ணெயில் இருக்கும் மூலக்கூறுகள் சிறியவை என்பதால் முடியில் எளிதாக ஊடுருவ முடியும். இதனால் கூந்தலின் மென்மைத் தன்மை கூடும். வறட்சியான கூந்தல் உருவாவது தடுக்கப்படும். கூந்தலை சுத்தம் செய்ததும் அதை தலையில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு அலசி எடுக்கவும்.

அர்கன் எண்ணெயில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள், ஒலிக் மற்றும் லினோலிக் அமிலம் முடியின் மென்மையை அதிகரித்து தலைமுடியை வறட்சியிலிருந்து காப்பாற்றும். மேலும் இதில் இருக்கும் வைட்டமின் இ ஸ்கால்ப் பகுதியில் இருக்கும் அழுக்கை நீக்கி முடியை பொலிவாக வைத்திருக்க உதவுகிறது.இவை தலை சருமத்தின் துளைகளை அடைக்காமல் உள்ளிருக்கும் அழுக்கை வெளியேற்றுகிறது. இதனால் ஒவ்வொரு முடியும் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகிறது.

பொடுகும் அரிப்பும் நீங்க உள்ளங்கையில் நான்கு சொட்டு அர்கன் எண்ணெய் விட்டு உச்சந்தலையில் இருந்து தலை முழுக்க மெதுவாக மசாஜ் செய்து ரத்த ஓட்டத்தை தூண்டினால் கூந்தலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் தலை குளியல் மேற்கொள்வதற்கு முந்தைய இரவில் இதை பயன்படுத்த வேண்டும். சிலருக்கு சாதாரணமாகவே சிறிது எண்ணெய் வைத்தாலும் கூட தலைமுடியில் எண்ணெய்ப்பசை ஒட்டிக்கொண்டு அடர்த்தியாக தெரியும். ஆனால், இந்த எண்ணெய் தலையில் தடவி இருந்தாலும், பார்க்க நன்றாகவே தெரியும். அதற்கு காரணம் எண்ணெயில் இருக்கும் லேசான அடர்த்திதான்.

ஆனால் அர்கன் எண்ணெய் அடர்த்தி குறைவு என்பதால் இவை முடி இழைகளில் ஊடுருவி அடர்த்தியை காண்பிக்காது. அதோடு அவை கூடுதலாக பிரகாசமான தோற்றத்தை கூந்தலுக்கு உண்டாக்கும். ஏனெனில் இந்த அர்கன் எண்ணெயில் இருக்கும் கொழுப்பு கூந்தலுக்கு பளபளப்பை கொடுக்க உதவும்.எனினும் அதிகம் பயன்படுத்தாமல் கூந்தலுக்கு வேண்டிய அளவு பயன்படுத்தினால் போதுமானது. குறிப்பாக உங்கள் கூந்தல் அலங்காரம் நீண்டு, சுருண்டு, ஸ்டைலாக என்று எப்படி இருந்தாலும் அதற்கு முன்பு இந்த எண்ணெயை சில துளி தடவினாலும் கூந்தலில் மென்மையும் ஜொலிப்பும் கூடும்.

கூந்தலின் நுனி பெரும்பாலும் எல்லோருக்குமே பிளவை கொண்டிருக்கும். இந்த நுனிபிளவு உண்டாகாமல் தடுக்க கூந்தலின் நுனியிலிருந்து இந்த எண்ணெயை பயன்படுத்த வேண்டும். இதை தொடர்ந்து செய்துவந்தால் கூந்தல் நுனி பிளவும் மறைவதை பார்க்கலாம்.சருமத்துக்கு சன்ஸ்க்ரீன் போன்று கூந்தலுக்கு அர்கன் எண்ணெய் பயன்படுகிறது. மேலும் இவை கூந்தலின் நிறமாற்றத்தை தடுத்து கருமையாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதனால் இளநரை பிரச்சனைகள் எட்டாமல் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.

அர்கன் எண்ணெயை தொடர்ந்து கூந்தலில் தடவிவருவதன் மூலம் அவை ஸ்கால்ப் பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. தொடர்ந்து தினமும் சில நிமிடங்கள் கூந்தலில் செய்யும் மசாஜ் ஆனது கூந்தலை மென்மையாக பட்டு போன்று பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. இது கூந்தல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், சருமப் பொலிவுக்கும், நகங்களை அழகாக பராமரிக்கவும் பயன்படுகிறது.

தொகுப்பு: தவநிதி