Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கடின உழைப்பும், தெளிவும் உரிய பாதைக்கு கொண்டு செல்லும்!

நன்றி குங்குமம் தோழி

கைவினைப் பொருட்களுக்கு என்றுமே தனிப்பட்ட ஈர்ப்பு மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. அதனை இன்றைய தலைமுறையினரின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்தால் கண்டிப்பாக எந்த பிசினசாக இருந்தாலும் அதை சக்சஸாக கொண்டு செல்ல முடியும். சிவகாசியில் பிறந்து சென்னைக்கு வந்தவர் மதிவதனா. தனக்குப் பிடித்த அந்த கலைத் துறையினரால் ஒரு தொழில்முனைவோராக மாறியுள்ளார். அவரின் கலைப் பயணம் குறித்து பகிர்ந்தார்.

‘‘நான் பிறந்து வளர்ந்தது சிவகாசியில். பள்ளி மற்றும் கல்வி படிப்பு முழுதும் சிவகாசியில்தான் படிச்சேன். என் அம்மா பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு சென்னைக்கு இடமாற்றம் கிடைத்ததால், நான் குடும்பமாக சென்னைக்கு குடிபெயர்ந்தோம். அப்பா சொந்தமா பட்டாசு சார்ந்த தொழில் செய்து வந்ததால், அவரும் சென்னையில் தன் பிசினசை தொடங்கினார். என் அக்கா ஹைவேஸ் துறையில் வேலைப் பார்த்து வருகிறாள். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு எம்.பி.ஏ, M.Phil மற்றும் PhD முடித்துவிட்டு பகுதி நேர பேராசிரியராக நான் மூன்று ஆண்டுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைப் பார்த்தேன். அதன் பிறகு பிரபல தனியார் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி வந்தேன்.

அந்த சமயத்தில்தான் எனக்கு சொந்தமாக தொழில் செய்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கு காரணம் 2015ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘என்த்ரா’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்வில் கைவினை சார்ந்த பொருட்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. அதில் பல்கலைக்கழகம் சார்பாக, நாங்க குழுவாக கலந்து கொண்டோம். எங்களின் ஸ்டாலில் பொருட்களும் விற்பனையானது.

உடனே அது குறித்து நான் என் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்தேன். அதன் மூலம் இந்தப் பொருட்களை மேலும் பலரிடம் கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது’’ என்றவர் அடுத்த வருடம் ‘லே கிஃப்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ்’ என்ற பெயரில் இன்ஸ்டாவில் ஒரு பக்கம் ஆரம்பித்து அதில் நான் என்னுடைய கலைப் பொருட்களை பதிவு செய்ய ஆரம்பித்தேன். அதன் மூலம் உலகம் முழுதும் எங்களின் கலைப் பொருட்கள் குறித்து மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது’’ என்றவர் தென்னிந்தியாவில் முதல் முறையாக கல்யாணங்களில் லைவ் பெயின்டிங்கை அறிமுகப்படுத்தியுள்ளார்.

‘‘பொதுவாக கல்யாணங்களில் நாம் செல்ஃபி அல்லது புகைப்படம் எடுப்பது வழக்கம். ஆனால் மேடையில் நடைபெரும் நிகழ்வுகளை அப்படியே தத்ரூபமாக லைவ் பெயின்டிங் செய்தால் அது பார்க்க இன்னும் அழகாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் அதை நாங்க அறிமுகம் செய்ய விரும்பினோம். இந்தியாவில் இது போல் பெயின்டிங் செய்பவர்களில் 7 பேர் மட்டுமே உள்ளனர். அந்தப் பட்டியலில் தமிழ்நாட்டில் முதல் முறையாக நாங்க அறிமுகம் செய்தது பெருமையாக இருந்தது. அதையும் என் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்த போது அதைப் பார்த்து பல பிரபலங்கள் எங்களைத் தொடர்பு கொண்டு ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் மற்றும் கலை வேலைப்பாடுகளை ஆர்டர் செய்ய துவங்கினார்கள்.

என் கணவர் பல நிறுவனங்களுக்கு மார்க்கெட்டிங் திட்டங்களை வழங்கியவர். எங்களின் திருமணத்திற்குப் பிறகு என்னுடைய இந்தத் தொழிலுக்கு அவர் முழு சப்போர்ட் செய்தார். என்னுடைய ஒவ்வொரு வளர்ச்சிக்கும் காரணம் அவர் தான். நான் ஒரு தொழில்முனைவோராக இருக்கவும் அவர்தான் காரணம். ஒரு பொருளை எப்படி மார்க்கெட்டிங் செய்து அதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வரை பார்த்துக் கொண்டார்’’ என்றவர் தமிழ்நாடு, ராஜஸ்தான், ஜெய்ப்பூர், கர்நாடகா, கேரளா மட்டுமில்லாமல் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என பல வெளிநாடுகளுக்கும் தன்னுடைய கைவினைப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

‘‘நான் செய்வது கைவினை சார்ந்த தொழில் என்றாலும், ஒருவரின் மனதில் அதனை நீங்காமல் இடம் பிடிக்க செய்ய முடியும். ஒருமுறை ஒரு தம்பதியினர் என்னை பார்க்க வந்தாங்க. அவர்களுக்கு பிறந்த குழந்தை சில மாதங்களில் இறந்துவிட்டதாகவும், அதன் புகைப்படம் தங்களிடம் இல்லை என்றனர். அந்த குழந்தையின் நினைவாக ஒரு ஓவியம் வேண்டும் என்று கேட்டனர். நாங்க அந்த தம்பதியினரின் முக அமைப்பைக் கொண்டு குழந்தையின் முகத்தை பென்சில் ஸ்கெட்ச் செய்து கொடுத்தோம். பார்த்துவிட்டு மனம் நெகிழ்ந்து அழுதுவிட்டார்கள். அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்.

என்னதான் என் குடும்பம் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தாலும், ஒரு பெண் தனியாளாக பிசினசில் ஈடுபடுவது சுலபமான விஷயம் கிடையாது. சில சமயம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வராது. அதனால் அந்த நிகழ்ச்சியினை கேன்சல் செய்திருக்கிறேன். பல எதிர்நீச்சல் அடித்துதான் நான் இந்த நிலையை அடைந்திருக்கிறேன்.

பலர் இது அவசியமா என்று எல்லாம் கேட்டிருக்கிறார்கள். வீட்டு வேலை செய்வது மட்டுமே பெண்களின் பொறுப்பு கிடையாது. என்னுடைய தொழில் மூலம் 25 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறேன். பெண்களுக்கு இந்த மாதச் சம்பளம் ஒரு அடையாளத்தினை கொடுக்கிறது. கடின உழைப்பும் தெளிவும் இருந்தால் பெண்களால் தனக்கே உரிய பாதையை உருவாக்க முடியும். பெண்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். கனவு சிறியதாக இருந்தாலும், அதில் உங்களின் தனித்தன்மை பிரதிபலிக்கும். அதுவே இந்த உலகத்தை மாற்றும் சக்தி’’ என்கிறார் மதிவதனா.

தொகுப்பு: திலகவதி