நன்றி குங்குமம் தோழி
பாலின பேதங்கள் ஒரு பார்வை
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்றொரு பழமொழி உள்ளது. இதற்கு அறிவியல் ரீதியான காரணமும் உள்ளது. கருவாக இருக்கும் போதே நம் மூளை, சுற்றியிருக்கும் பலவற்றை கவனிக்கத் தொடங்குகிறது. அப்படித் தொடங்கும் நம் மூளையின் கிரகிக்கின்ற தன்மை, உச்சத்தில் இருப்பது பிறந்தது முதல் ஐந்து வயது வரை. இந்த தன்மையில் இருந்தே சுற்றி இருப்பவையுடனான நம் தொடர்புகள் உருவாக்கம் கொள்கின்றன.
கருவாக இருக்கும் போதே நாம் கவனித்து கிரகிக்கும் தன்மைகள்தான், பொதுவாக நமது பிற்கால பார்வையை, திறமையை, செயலை நிர்ணயிக்கின்றன. இதற்கு பிறகு ஒன்றுமே கற்றுக் கொள்வதில்லையா என்றால், கண்டிப்பாக கற்றுக்கொள்கிறோம், கற்றுக்கொள்ளலாம். ஆனால் அப்படி கற்பவை இந்த ஐந்து வயதிற்குள் நம் மூளைக்குள் பதிவான அனுபவங்களை கொண்டே செயல்படுகின்றன. அதனால் கருவாகி, பிறந்தது முதல் ஐந்து வயதிற்கான பிள்ளைகளின் இக்காலம், அவர்களின் பார்வையை பிற்காலத்தில் நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
இங்கே நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது... இவ்வயதில் கிரகித்து கற்றவற்றை சுலபமாக அழித்துவிட்டு மீண்டும் கற்பதென்பது அத்தனை சுலபமில்லை. அதனால்தான் நம்மிடமே ஒரு சுய அலசல் செய்து பார்த்தால், நாம் முற்போக்காக எத்தனை சிந்தித்தாலும், சில விஷயங்களில், நம்மில் ஊறிப்போன சில எண்ணங்கள் அவ்வப்போது வெளிவரும், ஏன் அவ்வப்போது, எப்பொழுதுமே கூட அவை நம்மை விட்டு அகலாது. நாமே உணராமல் சிலவற்றை நாம் பிடித்து தொங்கிக்கொண்டிருப்போம்.
உதாரணமாக, காலாகாலம் தொட்டு, பெண் என்பவள் குடும்பத்தில் உள்ள அனைவரின் தேவைகளையும் கவனிக்க வேண்டும் என்றொரு எண்ணத்தை எடுத்துக்கொள்வோம். தொன்னூறு சதவிகிதப் பெண்களுக்கு, அவர்கள் என்னதான் வெளியில் சென்று வேலை செய்தாலும், பணம் ஈட்டினாலும், ஆணுக்கு நிகராக எத்தனை வேலை செய்தாலும், ஒரு நாள் மற்ற வேலை பளுவினால் சமையல் செய்ய இயலாமல் போய்விட்டால் ஒரு குற்ற உணர்வுடனேயே இருப்பார்கள். ஏனெனில் அது அவர்களுக்குள் ஊறிப்போன ஒரு விஷயம். நீ எத்தனை பெரிய வேலையில் இருந்தாலும், எத்தனை சம்பாதித்தாலும், உன் அடிப்படை வேலை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேளாவேளை உணவு சமைத்துப் போடுவதுதான். அதுதான் நீ எத்தனை தூரம் பெண்மையின் இலக்கணமாக வாழ்வதின் அடையாளம் என்று ஆழ்மனதில் நிறுவியாகிவிட்டது.
வீட்டில் தங்கள் வேலையை தானே செய்துகொள்ள இயலாதவர்களான, வயதானவர்கள், குழந்தைகள், நோயுற்றவர்கள் என்றால் கூட, இந்த குற்ற உணர்வை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் திடகாத்திரமாக வளர்ந்து நிற்கும் ஆண்களோ, பிள்ளைகளோ, பெரியவர்களோ இருந்தாலும், ஏதோ அவர்களுக்கான உணவை அவர்களால் சமைத்துக்கொள்ள இயலாது என்பது போல் குற்ற உணர்வு கொள்வது எத்தனை மடமையான செயல்? ஆனால் ஏன் இப்படி இருக்கிறோம்? ஒரு பெண் வெளியில் வேலைக்கு செல்வதை சாதாரணமாக ஆக்கிவிட்ட நாம்தான், இன்னும் என்றாவது ஒருநாள் வீட்டில் சமைக்கும் ஆணை மிகவும் பாராட்டி பேசுகிறோம். ஏனெனில் முற்போக்கு மனங்களில் கூட இன்னும் இவை சாதாரண மாக்கப்படவில்லை. ஏனெனில் பிறந்ததிலிருந்து நாம் கவனித்து உள்வாங்கிக் கொண்டவை இவை.
பாட்டி மற்றும் அம்மாக்களின் முழுநேர வேலை வீட்டில் இருப்பவர்களை கவனிப்பது. அப்பாக்களுக்கும், தாத்தாக்களுக்கும் சேவை செய்வது. இன்று என்னதான் அது நமக்கு முழுநேர வேலையில்லை என்றாகிவிட்டாலும், அவர்களுக்கு இணையாக பெண்கள் வெளியிலும் பொறுப்புகள் ஏற்றாலும், அவளின் அடிப்படை பொறுப்பு சமைப்பதும், மற்றவர்கள் தேவைகளை கவனிப்பது என்பது ஆணித்தரமாக உள்ளே இறங்கிவிட்டது. இப்படியாக சிறுவயதில் கிரகித்தவை எத்தனை முற்போக்காக சிந்திக்கத் தொடங்கி, அவ்வழி செயல்படத் தொடங்கிவிட்டாலும், இம்மாதிரி விஷயங்கள் ஆண்/பெண் பேதமில்லாமல் இன்னும் பின்பற்றப்படுகின்றன.
வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் ஆணும் அவன் எத்தனை வீட்டு வேலைகள் செய்தாலும், ஒன்றுக்கும் உதவாதவன் என்ற நோக்கிலேயே பார்க்கப்படுகிறான். ஏனெனில் உத்தியோகம் புருஷலட்சணம் என்று ஆணித்தரமாக அடித்தாகிவிட்டது. ஆக, பாலின சமத்துவம் முழுமையடைய வேண்டுமெனில் பிள்ளை வளர்ப்பில் மறுபரிசீலனை அவசியம் தேவைப்படுகிறது.நாம் என்ன சொல்லிக்கொடுக்க முயல்கிறோம் என்பது முக்கியமல்ல, அவர்கள் கவனிக்கும்படி நாம் எப்படி நடக்கிறோம் என்பதுதான் முக்கியம். அதற்கு முன் ஆழ்ந்த சுய சிந்தனையும், நம்மில் புரையோடியிருக்கும் பாலின பேதங்களை களைந்து அவற்றை செயல்படுத்துவது மிகமிக அவசியம்.
பெண்கள் அலுவலகம் செல்வது எப்படி சாதாரணமயமாக்கப்பட்டுவிட்டதோ அது போல் ஆண்கள் வீட்டு வேலைகள் செய்வதும் சாதாரணமயமாக்கப்பட வேண்டும். அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை, அம்மா வீட்டில் இல்லை என்றால் மட்டுமே அப்பா வீட்டு வேலைகள் செய்வது பிரயோஜனமில்லை. இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில், வீட்டிற்கான அத்தனை வேலைகளும் பகிர்ந்து செய்தலும், வீட்டில் இருக்கும் நபர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், ஒருவர் சம்பாதிப்பதும் மற்றவர் குடும்பத்தை கவனிப்பது வேலை பகிர்வாக இருத்தல் வேண்டுமேயன்றி சம்பாதிப்பவர்கள் ஆளுமை உள்ளவர்களாகவும், வீட்டு வேலை செய்பவர்கள் அண்டிப்பிழைப்பவர்களாகவும் இருத்தல் மிகவும் ஆபத்தான மனநிலையை பிள்ளைகளுக்குக் கடத்தும்.
மேலும், நிறைய நிறைய விஷயங்களில் நாம் கவனமாக நடத்தல் அவசியமாகிறது. வேலைகள் மட்டுமில்லாமல், உடை, விளையாட்டு, படிப்பு என பல விஷயங்களில் நமக்கான செயல்கள் மாறவேண்டும். பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாக திகழ்வது வீட்டில் இருக்கும் பெற்றோரும், மற்ற பெரியவர்களும்தான். அதனால் நம் சொற்களிலும், செயல்களிலும் மிகுந்த கவனம் தேவைப்படும். நம்முடைய முன்சிந்தனையற்ற சொற்களால், செயல்களால் நாமே பல பேதங்களை பிள்ளைகளிடம் கடத்திவிடுகிறோம்.என் மகனின் நண்பன் ஒருவன், தன் நான்கு வயது மகனை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தான். அவனும் அவன் மனைவியும் மிகவும் முற்போக்கு சிந்தனையுடன் வாழ்பவர்கள்தான்.
ஆனால், என்னை தன் மகனுக்கு அறிமுகப்படுத்தும் போது, “ஹாய் சொல்லுடா பாட்டிக்கு” என்று சொன்னான். அந்தப் பிள்ளை சொல்லவில்லை. அதற்குக் காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருந்திருக்கலாம், புது இடம், புது மனிதர்கள், தயக்கம் கூட காரணமாக இருந்திருக்கலாம். நகைச்சுவை என்ற பெயரில் அவன் மகனிடம், “என்னடா தாத்தாவா, பாட்டியானு சந்தேகமா இருக்கா?” என்று கேட்டான்.
இதற்கு காரணம் நம் சமுதாயத்தில் ஆண்களின் இலக்கணமாக வகுக்கப்பட்டிருக்கும் கிராப்பு முடியுடனும், அந்த உடையுடனும் நான் இருப்பதுதான். “எதற்கு ஆண் என்றால் இப்படி, பெண் என்றால் இப்படித்தான் முடியும், உடையும் இருக்க வேண்டும் என்ற பார்வையை அந்தக் குழந்தையிடத்தில் திணிக்கிறாய்” எனக் கேட்டதற்கு “விளையாட்டுக்குதான் சொன்னேன். தப்பா நினைச்சுக்காதீங்க” என்ற பதில் வந்தது.
“இதை நான் தப்பா நினைக்கிறேனா இல்லையா என்பது பிரச்னை இல்ல....நான் உன் வார்த்தையெல்லாம் பெருசா எடுத்துட்டு கவலைப்படப்போறதுமில்ல. அவன் குழந்த.... அவன் மனசுல நீ எத விதைக்கிறேனு யோசிச்சு பேசு, உனக்கு இது விளையாட்டு, அவனுக்கு இது ஒரு முக்கியமான சிந்தனை” என்றேன். இதை கூறியதும்தான் அவனுக்கு தான் செய்த காரியத்தின் ஆழம் புரிந்தது. இப்படி எத்தனையெத்தனையோ அன்றாட வேலைகளை நாம் சிறிதும் சிந்திக்காமல் செயல்படுத்துகிறோம். இதை குறித்து ஆஸ்திரியாவில் இருக்கும் என் தங்கையுடன் பேசிக்கொண்டிருந்த போது, அவள், “ஆமாம்கா, இவ்ளோ பேசுற நமக்குள்ளேயே இன்னும் பேதங்கள் முழுசா குறையலக்கா.
இங்க பெண்களின் ஆடைனு நாம் நினைக்கிற ஹாப் ஸ்கர்ட் போட்டு போற ஆண்கள ஒரு நாளைக்கு மூணு, நாலு பேர கண்டிப்பா பார்த்துடுவோம். ஆனா, ஒவ்வொரு வாட்டி பார்க்கும் போதும் நமக்குள்ள ஒரு ஆச்சரியமும், சுவாரஸ்யமும் வரும். அத சாதாரணமா இங்க இருக்குறவங்க கடந்து போய்டறாங்க. ஆனா, நமக்குள்ள இப்படிப்பட்ட பேதங்கள் ஊறிப்போயிருக்குறதுனால, அப்படி சாதாரணமா கடக்க முடியல” என்றாள். ஆமாம் தானே?நமக்குள்ளேயே களைய வேண்டிய விஷயங்கள், அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட வேண்டாத விஷயங்கள் என பல மண்டிக்கிடக்கிறது. கவனத்துடன் வாழவேண்டிய (Consious living) கட்டாயம் இருக்கிறது. இதை கவனத்தில் கொள்வோம்.
(தொடர்ந்து சிந்திப்போம்!)
தொகுப்பு: லதா