Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தை வளர்ப்பில் பாலின பேதங்கள்!

நன்றி குங்குமம் தோழி

பாலின பேதங்கள் ஒரு பார்வை

ஒரு காலத்தில் பிறக்கப் போகும் பிள்ளை பெண்பிள்ளை என்று தெரிந்துவிட்டாலே கருவையே அழித்துவிடும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. இப்படிப்பட்ட கொடூரங்கள் நடக்கக்கூடாது என்பதினால்தான் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தக்கூடாது என்ற சட்டம் வந்தது. பிறந்த பின்னும் பெண் சிசு கொலைகள் நடந்துகொண்டேதான் இருந்தன. இன்றும் இவை முற்றிலும் நடப்பதில்லை என்று ஆணித்தரமாக சொல்ல இயலாவிட்டாலும் ஓரளவு முதிர்ச்சிப் பெற்றுவிட்ட சமுதாயங்களில் இவை பெரும் சதவிகிதத்தில் குறைந்துவிட்டது என்பது உண்மை. ஒரு பக்கம் சட்டம், இன்னொரு பக்கம் ஆண், பெண் யாராக இருந்தாலும் நம் குழந்தை தானே என்ற ஆண், பெண் பேதங்கள் நிறைய அளவிற்கு குறைந்திருப்பதும் காரணிகளாக இருக்கலாம்.

பேதங்கள் குறைந்திருப்பதற்கு காரணம் பெண்களுக்கு கிடைத்திருக்கும், அக்காலத்தில் கிடைத்திராத சுதந்திரம். பெண் குழந்தைகளும் பெருவாரியாக பள்ளிக்கு செல்வதும், மேல் படிப்புகளில் சேர்வதும், பல தொழில்களில் அவர்களும் உயர்ந்து செயல்படவும் முடிகிற சூழலும், பெண் என்றாலே பாரம், அவளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும், ஓர் ஆணின் கையில் பிடித்து கொடுக்க பணம் வேண்டும், என்ற பயங்களும், ஓரளவிற்கு முதிய வயதில் தன் மகனைத்தான் அண்டி வாழவேண்டும், மகளை அண்டி வாழக்கூடாது என்ற எண்ணமும் மாறிவருவதும் காரணம். இப்படி பல காரணங்கள் இன்று ஆண் குழந்தைதான் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள் குறைந்துவருகிறார்கள். இது ஒரு நல்ல மாற்றம் தான் என்றாலும், இன்னும் பிள்ளைகள் வளர்ப்பில் பேதங்கள் பெருவாரியான குடும்பங்களில் இருந்துகொண்டுதான் இருக்கின்றது.

என்னதான் முற்போக்காக சிந்தித்தாலும், நம்மிடம் திணிக்கப்பட்ட சில எண்ணங்கள், பார்வைகள் அத்தனை எளிதாக நம்மைவிட்டு நீங்குவதில்லை. அப்படியே நீங்கிவிட்டாலும், அந்த நாலுபேர் என்ன சொல்வார்கள் என்ற பயமும் சில எண்ணங்கள் அழுத்தமாக நம்மிடம் தங்கிவிடுவதற்கு காரணமாகிறது. பல நேரங்களில் நாம் உணராமலேயே, பல பேதங்களை, நம்மிடையே ஊறிவிட்ட பழக்கங்களால் நாம் கடைபிடித்துக்கொண்டே தான் இருக்கிறோம். நாம் உணராமல் செய்யும் அக்காரியங்கள், குழந்தைகள் மனதில் ஆழமாக வேறூன்றி நிற்கின்றன.

இது அடுத்தடுத்த சந்ததிகளுக்கு பாலின பேதங்களை கடத்திக்கொண்டே தான் இருக்கின்றன. இதுதான் பிற்காலத்தில், தன் இணையரும் வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருந்தாலும், அப்பெண் சமைப்பதை கடமையாகவும், தான் என்றாவது சமையல் செய்வதை தன் இணையருக்கு தான் செய்யும் உதவியாகவும் பார்க்க வைக்கிறது ஆண்களை.

பெண்களுமே, தங்கள் வீட்டு ஆண்கள் சமையலறையில் செய்யும் வேலைகளை சிலாகித்து பேசும் நிலையும் இருக்கிறது. பெண்கள் வெளியில் வேலைக்கு செல்வது சாதாரண விஷயமாக ஆகிவிட்ட காலத்திலும், இன்னும் ஆண்கள் வீட்டு வேலை செய்வது சாதாரண விஷயமாக ஆகாததற்கு காரணம் நாம் குழந்தை வளர்ப்பில் மிகவும் சிந்திக்காமல் செய்யும் சில செயல்கள்தான். பெண்கள் வளர்ப்பில், அவர்கள் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, படிக்க வைக்கிறோம், வேலைக்குச் சென்று பணம் ஈட்டும் அளவோ, இல்லை பெரிய பதவியில் பொறுப்பேற்று ஆண்களுக்கு நிகராக சவால்களை சந்தித்து வாழும் அளவிற்கோ கூட துணை நிற்கிறோம்.

ஆனால், வீட்டில் இருந்துகொண்டு பிள்ளைகளையும், வீட்டையும் மட்டுமே பராமரித்துக்கொண்டு வாழ்ந்திருந்த அம்மாக்களையும், அத்தைகளையும், சித்திகளையும், பாட்டிகளையும் பார்த்து வளர்ந்த ஆண்மகன்களுக்கு, சுயமாக சிந்தித்து செயல்பட்டு, முன்னேறும் பெண்களுடன் வாழ்வதற்கான வளர்ப்பு முறைகளை கையாள்கிறோமா என்றால் இல்லை என்றே சொல்லும் அபாயகரமான நிலையில்தான் உள்ளோம்.

ஒரு பக்கம் பெண்களின் அபார வளர்ச்சியும், மறுபக்கம் இன்னும் தன் அம்மாக்கள், பாட்டிகள் போலவே தன் இணையரும், தனக்கான எல்லா தேவையையும் கவனிக்கும் பெண்ணாகவே இருக்க விரும்பும் ஆண்களுமாக இணையர்களின் உறவுகள் அபாயகரமான குழப்பங்களில் மாட்டிக்கொண்டு தத்தளிக்கத் தொடங்கி சில ஆண்டுகளாக திருமணம் என்றாலே காத தூரம் ஓடும் இளைஞர்களை உருவாக்கி வைத்திருக்கிறோம்.

பாதுகாப்பாக வளர்க்கிறோம் என்று, வீட்டில் அடைத்துவைத்து வளர்த்திருந்த காலங்களிலும் சரி, இன்று அவளை படிக்க வைத்து முன்னேற உதவும் வகையில் வளர்க்கும் காலத்திலும் சரி, பெற்றோர்களின் கவனம் பெண் குழந்தைகள் மீது மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது. ஆண்குழந்தைகளின் வளர்ப்பு என்றால், அவர்களின் படிப்பும், பொருளாதார முன்னேற்றமும் மட்டுமே என்றாகி, மற்றபடி அவர்களே வளர்ந்துகொள்வார்கள் என்ற முறையில்தான் அன்றிலிருந்து இன்றுவரை வளர்க்கப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட வளர்ப்பினால் தான் இன்றைய இளைஞர்களினால் கூட தன்னுடன் சேர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு ஈடுகொடுத்து வாழ இயலாமல், இன்னும் தங்கள் கற்பிதங்களால் பின்தங்கியே வாழும் நிலையில், பெண்கள் எத்தனை தான் வெளி உலகில் பிரகாசித்தாலும், உழைத்தாலும், வீட்டிலும் எல்லாம் அவள் பொறுப்புதான் என்ற எண்ணத்திலும், அவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறா இடங்களில், பெண் சம்பாதிக்க ஆரம்பித்ததால், திமிர் பிடித்தவள் ஆகிவிட்டாள், அதனால் தான் குடும்பங்கள் சீர்குலைகின்றன என்ற தவறான குற்றச்சாட்டை அவள் மீது வைத்து தான் வளர்வதற்கான முயற்சியை அவர்களே முறியடித்துக்கொண்டு வாழ்கிறார்கள்.

ஆணும் பெண்ணும் இணைந்தால்தான் அடுத்த சந்ததிகளை உருவாக்க இயலும் என்பதுதான் இயற்கை. ஆறறிவுள்ள மனிதர்களாகிய நமக்கு அது விளங்கிய அளவு, அதே ஆணும் பெண்ணும் இணைந்து வளர்ந்தால்தான் அடுத்த சந்ததிகளை சரியாக வளர்க்க இயலும் என்பது மட்டும் ஏனோ விளங்கு வதில்லை. இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தாலும், அதில் ஒருவர் பின்தங்கியும், ஒருவர் முன்னேறியும் பயணித்தால், இருவரும் ஓரிடம் போய் சேர இயலுமா? இருவரின் பயணமுமே தடைபடும் அல்லவா? இந்தப் பிரச்னையை எப்படி சரிசெய்வது? குழந்தைகள் வளர்ப்பின் மூலம்தான்.

பெண்களுக்கு முன்னேற்றத்தை கற்றுத்தரும் நாம், ஆண்கள் ஏற்கனவே முன்னேறித்தான் இருப்பதாக நினைத்து அவர்களின் வளர்ப்பில் கவனம் செலுத்துவதை என்றோ விட்டுவிட்டோம். முன்னேற்றம் என்பது வெறும் பதவியிலும் பணத்திலும் மட்டும் இல்லை. வாழ்வை பார்க்கும் பார்வையில், பெண்களின் முன்னேற்றத்தை ஏற்று, மேலும் ஊக்குவித்து அவர்களுடன் இணைந்து பயணிக்கும் மனநிலையில்தான் ஓர் ஆணின் முன்னேற்றம் இருக்கிறது. பெண்கள் இன்று திருமணம் வேண்டாம் என்று ஒதுங்குகிறார்கள், பிள்ளைகள் வேண்டாம் என்று பொறுப்பெடுக்க தயங்குகிறார்கள் என்று கவலை கொள்ளும் நாம், அவள் அப்படியாவதற்கு என்ன காரணம் என்று சிந்திப்பதில்லை.

ஒரு திருமணம் அந்த ஆணின் முன்னேற்றத்தை பொதுவாக தடுப்பதில்லை. ஏனெனில், குழந்தை வளர்ப்பிலோ வீட்டை நிர்வகிக்கும் பொறுப்பிலோ அவன் பங்கு பெரிதாக இருப்பதில்லை. அவன் நேரம் முழுவதும் அவன் கையில். ஆனால் ஒரு பெண்ணிற்கு இயற்கையாக கொடுத்திருக்கும், பிள்ளைபேறு, மாதவிடாய் என்ற பொறுப்புகள் தாண்டி, பிள்ளைகளை வளர்க்கவும், வீட்டை நிர்வகிக்கவுமான பொறுப்புகளும் சேர்ந்து கொள்வதால், அவள் நேரம் அவள் கைகளில் இல்லாமல் போகிறது.

வெளி உலகில், தன் வேலைகளுக்கு, அதற்கான பொறுப்புகளுக்கு அவளால் தேவைப்படும் நேரத்தை அவளால் எடுத்துக்கொள்ள இயலவில்லை. அதனால் அவளின் முன்னேற்றம் தடைபடும் வாய்ப்புகள் மிக அதிகம். அவளின் இந்த இழப்பை இணையறோ இல்லை குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களோ இல்லை, இந்த சமூகமோ கூட பெரிதாக மதிப்பதில்லை. ஒரு பெண்ணுக்கு குடும்பத்தைவிட என்ன பெரிய முக்கியம் மற்ற விஷயங்கள் என்ற ரீதியில்தான் உலகம் இயங்குகிறது.

எப்படி ஒரு ஆணுக்கு தனக்கான ஒரு குடும்பத்தை உருவாக்கும் ஆசைகள் இருக்கிறதோ அதே போல் ஒரு பெண்ணிற்கும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவள் ஏன் அந்த ஆசையை நிராகரிக்கிறாள் என்றால், ஒரு திருமணத்தால், அது உடன் கொண்டுவரும் பொறுப்புகளால், ஒரு பெண்ணின் இழப்புகள் எண்ணிலடங்காதவை. ஆணோ, பெண்ணோ, எந்த பாலாராக இருந்தாலும், தங்கள் தொழிலில் முன்னேற சிறுவயதிலிருந்து, முயற்சி எடுத்து, நேரம் எடுத்து, படித்து, தொழில் கற்று எனத் தன் இளவயது முதல் போராடித்தான் வருகிறார்கள். ஆனால் அதில் ஒரு பாலினத்தை சேர்ந்தவர் மட்டும், ஒரு கட்டத்தில் அத்தனையையும் மதிக்காமல் தூக்கியெறிந்துவிட்டு குடும்பத்தை பார்ப்பது மட்டுமே வேலையாக இருக்க வேண்டும் என்றால், அது நியாயமற்ற செயலல்லவா? அந்த அநியாயத்தின் மீதான எதிர்ப்புதான் திருமணம், பிள்ளைபேறு என்பதில் மீதானஎதிர்ப்பாக உருவெடுக்கிறது.

ஆண்களும் திருமணத்தினால் நிறைய சுதந்திரங்களை இழக்கிறார்கள் என்று வாதிடலாம். உண்மைதான். ஆனால், பொறுப்புகள் கூடக்கூட இருவருமே சிலவற்றை இழந்துதான் ஆகவேண்டும். ஆனால், அது ஒருபட்சமாக இருக்க இயலாதல்லவா? தன் சுதந்திரங்களை தாங்களே அறியாமல். இந்த சமூக, குடும்ப நிர்பந்தங்களால், பெண்களின் வாழ்வென்றால் அப்படித்தான் என்ற வளர்ப்பின் காரணங்களால், இழந்த பெண்கள்தான் தன் இணையர்களின் சிறுசிறு சுதந்திரங்களிலும் தலையிடும் பெண்களாக மாறிவிடுகிறார்கள். பாலின பேதங்களின்றி பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்களால் இந்த சமூகம் நிறைந்தால், இத்தனை பிரச்னைகளையும் களைந்துவிடலாம். மேலும் பேசுவோம் எப்படி அப்படி வளர்ப்பது என்று! (தொடர்ந்து சிந்திப்போம்!)

தொகுப்பு: லதா