Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மறந்து போன மரச்சொப்புகள்!

நன்றி குங்குமம் தோழி

குழந்தைகளின் அடையாளமே பொம்மைகள்தான். ஒரு வீட்டில் குழந்தை இருந்தால், அந்த வீடு முழுக்க பொம்மைகள் சிதறிக் கிடக்கும். இப்போது குழந்தைகளுக்கான பொம்மைகள் என்று பார்த்தால் ஏராளமாக உள்ளன. சாஃப்ட் டாய்ஸ், மார்வல் பொம்மைகள், பல வகை கார்கள், மாடர்ன் சொப்புகள், பார்பி பொம்மைகள் என சொல்லிக் கொண்ேட போகலாம். ஆனால், நம் முன்னோர்கள் இருந்த காலத்தில் மரப்பொம்மைகள் கொண்டுதான் குழந்தைகள் விளையாடினார்கள். அந்த மரங்களை அவர்கள் வாயில் வைத்து கடித்தாலும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் உடலுக்கு எந்தவித தீங்கினையும் ஏற்படுத்தாது.

மேலும், உடல் வலுவை கூட்டவும், வினை விளைவுகளை அறிந்து தொடர்பு படுத்தி புரிந்துகொள்ளவும் இந்த மரப்பொம்மைகள் உதவின. கேளிக்கை விளையாட்டு என்பவற்றைத் தாண்டி பொம்மைகளை நாம் பயன்படுத்தும் முறைகளால் வாழ்வின் பல கூறுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த மரப்பொம்மைகளை விற்பனை செய்து வருகிறார் ஜெயலட்சுமி. சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த இவர் ‘லாரா வுட்டன் டாய்ஸ்’ என்ற பெயரில் மரப்பொம்மைகளை நேரடியாக பட்டறையிலிருந்து தருவித்து விற்பனை செய்கிறார்.

‘‘இன்று மார்க்கெட்டில் பிளாஸ்டிக் பொம்மைகள்தான் அதிகளவில் விற்பனையில் உள்ளன. உயர்ரக பிளாஸ்டிக் என்றாலும் அவை குழந்தைகளின் உடலுக்கு தீங்கினைதான் ஏற்படுத்தும். அதனை கருத்தில் கொண்டுதான் மரத்தால் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பொருட்களையே விற்பனை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். இவை சுற்றுச்சூழலை பாதுகாப்பது மட்டுமில்லாமல் உடல் நலத்திற்கு எந்தவித தீங்கினையும் ஏற்படுத்தாது. அதற்கு முக்கிய காரணம் என்னுடைய குழந்தைப் பருவம்.

நான் சின்னப் பெண்ணாக இருக்கும் போது என் பெற்றோர் எனக்கு மரத்தாலான பொம்மைகளைதான் வாங்கிக் கொடுப்பார்கள். மரச்சொப்புகளை வைத்து விளையாடி இருக்கிறேன். பார்க்க அழகாகவும் வண்ண வண்ண நிறங்களில் இந்த சொப்புகள் வரும். அது என் மனதில் மிக ஆழமாக பதிந்துவிட்டது. அதனால் தான் என்னுடைய குழந்தைகளுக்கும் அவர்கள் விளையாடுவதற்கு மரச் சொப்புகளையே வாங்கிக் கொடுத்தேன்.

என் குழந்தைகளின் நண்பர்கள் அல்லது என் தோழியின் குழந்தைகளின் பிறந்தநாள் விழாவிற்கும் என்னுடைய தேர்வு மரத்தால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களாகத்தான் இருக்கும். இன்றும் என்னிடம் என் பாட்டி அவர் காலத்தில் பயன்படுத்திய சுமார் 90 வருடம் பழமையான மர வேலைப்பாட்டுடன் கூடிய அஞ்சறை பெட்டி உள்ளது. அதை பொக்கிஷமாக பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அது மட்டுமில்லை நான் ஷாப்பிங் அல்லது கண்காட்சி போன்ற இடங்களுக்கு செல்லும் போது மர வேலைப்பாடுகள் கொண்ட பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி வருவேன். அதுவே என்னுடைய தொழிலாக பிற்காலத்தில் மாறும் என்று நான் அப்போது நினைத்து பார்க்கவில்லை’’ என்றவர் தொடர்ந்தார்.

‘‘என்னுடைய பூர்வீகம் திருநெல்வேலி. வளர்ந்தது, படிச்சது எல்லாம் அங்கு தான். முதுகலைப் பட்டப்படிப்பு முடித்தவுடன் தையல் பயிற்சிப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தேன். தையல் மேல் ஆர்வம் இருந்ததால், அதை முறையாக பயின்று பயிற்சியும் அளிக்க துவங்கினேன். அதில் பிளாக் பிரின்டிங் முறையில் டிசைன் செய்து என் குழந்தைகளுக்கு அழகான உடைகளை வடிவமைப்பேன். மேலும் என் வாடிக்கையாளர்கள் விரும்பும் டிசைன்களையும் செய்து அழகான உடைகளை தைத்து கொடுப்பேன். நான் டிசைனிங் செய்வது மட்டுமில்லாமல், இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்று என்னிடம் பயிற்சி பெறுபவர்களுக்கும் சொல்லிக் கொடுத்தேன்.

ஜாக்கெட், சுடிதார், புடவைகள் என அனைத்து துணிகளிலும் எவ்வாறு டிசைன் செய்யலாம் என்று சொல்லிக் கொடுத்து வந்தேன். அப்போதுதான் நண்பர் ஒருவர் மூலம் மரப்பட்டறை வைத்து நடத்துபவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் மரப்பொம்ைமகள் செய்து தருவது பற்றி தெரிய வந்தது. இதையே ஏன் என் அடுத்தக்கட்ட பிசினஸாக செய்யக்கூடாது என்று எண்ணம் ஏற்பட்டது. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த மரப்பொம்மை பிசினஸ்.

நான் விற்பனை செய்யும் பொம்மைகள் அனைத்தும் மரத்தைக் கொண்டு மட்டுமே தயாரிக்கப்படுகிறது. பொம்மைகள் மட்டுமில்லாமல் வீட்டை அலங்கரிக்கும் பொருட்களையும் நாங்க விற்பனை செய்து வருகிறோம். முக்கியமாக குழந்தைகளின் ஆரோக்கியமான உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் விற்பனை செய்கிறோம். இன்று எல்லோரும் குழந்தைகள் நடை பழக வாக்கர் என்ற உபகரணத்தை பயன்படுத்துகிறார்கள். நம் முன்னோர் காலத்தில் வீட்டில் குழந்தை பிறந்துவிட்டால் முதலில் வாங்குவது மரப்பாச்சி பொம்மையும், நடை வண்டியும் தான். மரப்பாச்சி பொம்மைகள் மருத்துவ குணம் கொண்ட செஞ்சந்தனம், முள்ளிலவு, ஊசியிலை போன்ற மரங்களில் இருந்து செய்யப்படுகின்றன.

குழந்தைகள் இதனை வாயில் வைத்தாலும் தீங்கு ஏற்படுத்தாது. அதே போல் குழந்தையின் இடுப்பு எலும்பை பலப்படுத்த மரத்தால் செய்யப்பட்ட நடை வண்டிகள் மிகவும் உதவும். இவை தவிர அழகான வண்ணங்கள் தீட்டிய வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள், பூஜையறை மற்றும் கொலுவில் வைக்கக்கூடிய பொம்மைகள், மஞ்சள் கடம்ப மரத்தால் செய்யப்பட்ட நகைப் பெட்டி, பம்பரம், கிலுகிலுப்பை, விசில், கீச்செயின், ஒரிஜினல் கருங்காலி மாலைகளும் உள்ளன.

நேரடியாக பட்டறையில் இருந்து தருவித்து விற்பனை செய்வதால் குறைந்த விலையில் தருகிறோம். எங்களின் பெரும்பாலான பொம்மைகள் யூகலிப்டஸ் மரத்திலானது. ஒரு சிலர் குறிப்பிட்ட மரத்தினை கொண்டு செய்து தரச்சொல்லி கேட்பார்கள். அவர்களுக்கு ஏற்ப கஸ்டமைசும் செய்து தருகிறோம்’’ என்றவர், கடந்த 10 வருடங்களாக இயற்கையான முறையில் பெருங்காயப் பவுடரை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

தொகுப்பு:ஷன்மதி