Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மன்னிப்பு நீங்கள் நினைப்பதை விட எளிதானது!

நன்றி குங்குமம் தோழி

- பார்வதி நாயர்

2000 வருடங்களுக்கு முன் பாண்டிய நாட்டின் இளவரசி கடல் மார்க்கமாக தமிழ்நாட்டில் இருந்து கொரியா சென்றார். அங்கு கொரியா கயா நாட்டு மன்னரை மணந்தார். இந்தப் பயணம் கொரியா மற்றும் இந்தியாவிற்கு இடையே அரசியல் மற்றும் பொருளாதார உறவினை மேம்படுத்திஉள்ளது. இது புராணக் கதை என்றாலும் அதே போல் ஒரு கடல் பயணம் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியா கொரியாவிற்கு இடையே நடைபெற்றுள்ளது. இந்தப் பயணம் இரு நாடுகளுக்கு இடையே ஒரு முக்கிய வரலாற்றுப் பயணம்.

அதனை இன்றும் கொரியா மக்கள் நினைவில் கொண்டு கவுரவித்து வருகிறார்கள். மிகவும் முக்கியமான இந்த வரலாற்றுப் பயணத்தை அழகான கதை அருங்காட்சியகமாக சித்தரித்துள்ளார் கலைஞர் பார்வதி நாயர். இந்த அருங்காட்சியகம் கடந்த வாரம் சென்னையில் மூன்று நாட்கள் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. வரலாற்று மிக்க அந்த உண்மை பயணம் குறித்து மனம் திறந்தார் பார்வதி நாயர்.

‘‘இந்தப் பயணம் பற்றி எனக்குத் தெரிய காரணம் என் அப்பா மேஜர் ஜெனரல் நாயர் அவர்கள்தான். நான் ரொம்ப சின்னப் பெண்ணாக இருக்கும் போதே அப்பா தவறிட்டார். எனக்காக அவரின் சில அனுபவ குறிப்புகளை விட்டுச் சென்றிருந்தார். அவர் இந்திய ராணுவத்தில் கொரியா, பர்மா, பூடான், ஹாங்காங் போன்ற இடங்களில் பணியாற்றிய காலத்தில் நடந்த சம்பவங்களை புகைப்படங்கள், வீடியோக்கள், கட்டுரைகள், கடிதங்களாக பதிவு செய்து வந்துள்ளார்.

அதில் என்னை மிகவும் கவர்ந்தது கொரியாவிற்கு அவர் சென்றிருந்த காலக்கட்டம்.

இந்தியா ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலைப் பெற்ற பிறகு 1953ல் இந்திய ராணுவத்தை சேர்ந்த 6000 ராணுவ வீரர்கள் சென்னையில் இருந்து முதல் முறையாக வெளிநாடான கொரியாவிற்கு அமைதியை நிலைநாட்ட பயணித்துள்ளார்கள். கொரியாவில் போர் முடிந்த காலக்கட்டம். அதில் கைதிகளாக பிடிபட்ட 23 ஆயிரம் வட கொரிய மக்கள் தங்களின் தாயகம் செல்ல முடியாது என்று போர்க்கொடி உயர்த்தினர்.

அவர்களிடம் அமைதியாக பேசி தாய் நாட்டிற்கு திரும்ப செல்ல வைப்பதற்காக வட மற்றும் தென் கொரியாவின் எல்லை இணையும் பகுதிக்கு இந்திய ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். அந்த 6000 ராணுவ வீரர்களில் என் அப்பாவும் ஒருவர். அவர் அங்கிருந்த ஒரு வருட காலம் கைதிகளுக்கு மத்தியில் நடந்த சம்பவம், அவர்களின் மனமாற்றம் குறித்து புகைப்படங்கள், வீடியோக்கள், கடிதங்கள் அனைத்தும் பதிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட ஒரு வரலாற்று சம்பவம் அதுவும் சென்னையில் துவங்கி சென்னையில் முடிவு பெற்றிருக்கிறது என்று நான் அதை படித்த போது தெரிய வந்தது. அந்த நிகழ்வினை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அப்போது என்னால் அதை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. காலமும் கடந்தது. ஒரு நாள் என் சகோதரரின் மகளான நயன்தாரா நாயர், இந்த சம்பவத்தை ஏன் அழகான கதையாக வடிவமைக்கக்கூடாதுன்னு கேட்டாள். பொதுவாக வரலாற்றில் போர்கள் குறித்துதான் நாம் படித்திருப்போம். முதல் முறையாக அமைதிக்காக ராணுவம் அமைக்கப்பட்டிருப்பது குறித்து நாம் அறிந்திருக்க மாட்டோம்.

என் அப்பா அமைதியை விரும்புபவர். நாடுகளுக்கு இடையே போர் அவசியமில்லை என்று நினைப்பவர். அவர் அமைதிக்காக பயணம் செய்ததை ஒரு கலை வடிவமாக கொடுக்க விரும்பினேன். இதை நான் வீடியோ டாக்குமென்டாக வெளியிட்டு இருக்கலாம். நான் அப்படி செய்யவில்ைல. ஒரு கதையை அமைத்து அதற்குள் உண்மை சம்பவங்களை புகுத்தி, அதை நடிப்பு மற்றும் சித்திரங்கள் என பல்வேறு கலையம்சங்கள் கொண்டு இந்த சம்பவத்தை வெளிப்படுத்த விரும்பினேன்.

அதன் உருவாக்கம்தான் ‘லிமிட்ஸ் ஆஃப் சேஞ்ச்’ என்ற கதை அருங்காட்சியகம். இதற்காக நான் ஆறு வருடம் ஆய்வில் ஈடுபட்டேன். கொரியாவிற்கு சென்றேன். அங்கு அப்பா இருந்த இடத்திற்கு சென்றேன். அந்தப் பகுதி தற்போது முற்றிலும் மாறுபட்டு இருந்தாலும், என்னால் அப்பாவின் எழுத்து மூலம் அந்த இடத்தில் நடைபெற்ற சம்பவங்களை உணர முடிந்தது’’

என்றவர், தன் கதை அருங்காட்சியகம் குறித்து விவரித்தார்.

‘‘இந்த அருங்காட்சியகத்தை அமைக்க நாங்க குழுவாக செயல்பட்டோம். முதலில் இந்தியா மற்றும் கொரியாவின் கலாச்சார மையமான இன்கோ மையத்தின் இயக்குனரான ரதி அவர்களை சந்தித்தேன். அவரிடம் இது குறித்து சொன்ன போது கண்டிப்பாக உதவுவதாக கூறினார். அதன் பிறகு நான் அதற்கான செயல்பாட்டில் இறங்கினேன். நான் ஏற்கனவே சொன்னது போல் இந்த வரலாற்று சம்பவத்தை பல கலைகளில் சித்தரிக்க விரும்பியதால், இயக்குனர், நடிகர் மற்றும் கலை பயிற்சியாளரான யோக் அவரை சந்தித்தேன். நான், யோக் மற்றும் என் சகோதரரின் மகள் மூவரும் இணைந்து இந்த அருங்காட்சியகத்தை எவ்வாறு அமைக்கலாம் என்று திட்டமிட்டோம்.

ஒன்பது அறைகளில் இந்த வரலாற்று சம்பவத்தை நிகழ்த்தினோம். ஒவ்வொரு அறையிலும் அது குறித்த புகைப்படங்கள், இரும்பு வேலிகள், டாட்டூ டிசைன்கள், 3டி மாடலில் அந்தப் பகுதியின் கடந்த மற்றும் இன்றைய தோற்றம், சம்பவம் குறித்த செய்திகள், அதை பறைசாற்றும் வகையில் என் ஓவியங்கள் போன்றவற்றை அமைத்தோம். பார்வையாளர்கள் அதை பார்த்து சென்றால் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதால், நடந்த சம்பத்தை கலைஞர்கள் மூலம் நாடக வடிவில் செய்முறை படுத்தினோம்.

இதன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவத்தை பார்வையாளர்களின் கண் முன் கொண்டு வர முடிந்தது. வரலாற்றை எழுத்தாக படிப்பதை விட கதையாக கேட்கும் போது அது நம் மனதில் எளிதாக பதியும். அதில் குறிப்பாக ‘மன்னிப்பு என்பது நீங்கள் நினைப்பதை விட எளிதானது’ என்று என் அப்பா சொன்ன அந்த வரியினை நாம் புரிந்துகொள்ள சிறிது நேரமெடுக்கும். ஆனால் கண்டிப்பாக உங்களின் ஆழ்மனதில் அது எதிரொலிக்கும். அதை என் கலை வடிவங்கள் மூலம் அடைய முயற்சித்து இருக்கிறேன்’’ என்றார் பார்வதி நாயர்.

இரண்டு நாடுகளுக்கு இடையே கலாச்சார பந்தம்!

- ரதி, இயக்குனர், இன்கோ மையம்

இந்த மையம் கடந்த 18 வருடமாக செயல்பட்டு வருகிறது. எங்களின் மையம் மூலமாக இரண்டு நாடுகளுக்கு இடையே ஒரு கலாச்சார பந்தத்தை ஏற்படுத்தி வருகிறோம். பார்வதி என்னை சந்தித்த போது, அந்த வரலாற்றினை கலை சார்ந்து பதிவு செய்ய விரும்பினேன். தென் தமிழகத்தில் இருந்து சென்ற போதி தர்மர் மற்றும் பாண்டிய நாட்டு இளவரசி இவர்களால் பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே ஒரு நெருங்கிய பந்தம் உள்ளது.

இன்றும் அங்குள்ள அனைத்து ேகாயில்களிலும் போதி தர்மரின் புகைப்படம் வழிபடப்பட்டு வருகிறது. மேலும் பார்வதி கூறிய வரலாற்று சம்பவத்தினை நினைவுகூரும் வகையில் இன்றும் அங்கு மலர்கள் செலுத்தி அமைதிக்காக வந்திருந்த இந்திய ராணுவத்தினருக்கு ஒவ்வொரு வருடமும் மரியாதை செலுத்தி வருகிறார்கள். கொரியா மக்களின் தோற்றம் மங்கோலியா, சீனா என்று கூறினாலும் தென் தமிழகத்துடன் ஒரு நல்ல பந்தம் கடல் வழியாக ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தொகுப்பு: ஷம்ரிதி