Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நம் நாட்டில் காய்த்துக் குலுங்கும் வெளிநாட்டுப் பழங்கள்

நன்றி குங்குமம் தோழி

“தம்பி, எனக்கு வயசு இப்ப எழுபது ஆகுது. இனி நான் ஒரு செடிய வச்சு... வளர்த்து... அதில் வரும் பழத்தை சாப்பிட்டுறுவேனா? சொல்லுங்க. காசு எனக்கு பிரச்னை இல்லை தம்பி. பழத்தோட இருக்குற மரமா தாங்க. அதுவும் இப்பவே நிழல் தரணும்” என்பார்கள் எனப் புன்னகைத்தபடி பேச ஆரம்பித்தவர்கள் ஜெயகல்யாணி-அன்பரசு தம்பதியர்.‘‘ரெண்டு பேருக்குமே மரம், செடிகள் மேல ஆர்வம் என்பதால், சொந்தத் தோட்டத்தில் இருந்தே எங்களின் இந்த கெரியர் தொடங்கியது. இது முழுக்க முழுக்க வெளிநாட்டுப் பழ மரங்களின் விற்பனை என்பதால், சமூக வலைத்தளத்தில் எங்கள் ஜே.கே. நர்ஸரிக்கு ஃபாலோவர்ஸ் அதிகம்’’ என்கின்றனர் புன்னகைத்தபடி.

‘‘கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுள்ள புவியூர்தான் எங்களுக்கு ஊர். உயரம் உயரமாக வளர்ந்து நிற்கும் தென்னை மரம், பலா மரம், வாழை மரங்களுக்கு இடையில் மெதுவாக எட்டிப் பார்க்கும் அதிகாலைச் சூரியனையும், இதமான காற்றையும், சுத்தமான நீரையும் அனுபவிக்க ஆசைப்படுறவுக கண்டிப்பாக எங்க ஊருக்கு வரலாம்’’ என மீண்டும் புன்னகைத்தவர்கள், ‘‘வீட்டைச் சுற்றிலும் தோட்டம் தொரவு, பம்பு செட்டுன்னு பச்சை பசேல்னு, மொத்த பூமியும் பட்டுக் கம்பளம் போர்த்திய மாதிரிக் கிடக்கும் வளமான மண் இது. எங்கள் நர்ஸரியும் இங்குதான்.

பிரபல நடிகை சீதாவில் தொடங்கி, நடிகர்கள் கருணாஸ், ராஜ்கிரண், நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி, திரைப்பட இயக்குநர்கள், சின்னத்திரை பிரபலங்கள், பிரபல அரசியல் புள்ளிகள், தொலைக்காட்சி உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் எனப் பலரும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள்’’ என முதலில் பேச ஆரம்பித்தவர் பிரபல எஃப்.எம். ஒன்றில் முக்கிய பொறுப்பில் பணியாற்றிய RJவான ஜெயகல்யாணி.‘‘பிரேசிலின் ஜபோட்டிகா, மலேசியன் ஆரஞ்சு, தாய்லாந்து சிவப்பு பலா, பிரேசில் திராட்சை, அமெரிக்கன் ரெட் பால்மர் மேங்கோ, பங்களாதேஷ் க்ரீன் வாட்டர் ஆப்பிள், பிலிப்பைன்ஸ்

பென்கன் லிங் மேங்கோ, கம்போடியன் ஆரஞ்சு, சீனா 3 லிச்சி பழம், ஜப்பானின் மியாசாகி மாம்பழம், தென் அமெரிக்காவின் 2 கிலோ சப்போட்டா, நாசிக்பசந்த் மேங்கோ, வொயிட், ரெட் மல்பரி, ப்ளூபெர்ரி பழ மரங்கள், சர்க்கரை நோய் தீர்க்கும் மக்கோடா தேவா... இதெல்லாம் என்னன்னு கேட்குறீங்களா? எல்லாமே வெளிநாட்டுப் பழங்கள். ஆனால் நம் நாட்டில் காய்ச்சு குலுங்குது’’ என்றவர், ‘‘பெரும்பாலும் தாய்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் மரங்கள் நம் தட்பவெப்ப நிலைக்கு பொருந்திப் போகுது’’ என்கிறார் உறுதியாக.

‘‘பிரேசில் நாட்டின் அமேசான் ரெயின் பாரஸ்ட்டில் விளைகிற ஜபோட்டிகாவை, மர திராட்சை என்பார்கள். ஜபோட்டிகாவில் 10 விதமான வெரைட்டிகள் எங்களிடம் உண்டு. வெளிநாட்டு ஒயின், பிராந்தி, விஸ்கி என அனைத்துமே ஜபோட்டிகா பழங்களில் இருந்தே தயாராகிறது என்பதால் இந்த மரத்தின் விலை 1 லட்சம் ரூபாய் வரை விலை போகும். அதேபோல் பிரேசில் நாட்டின் ரெயின் பாரஸ்ட் பிளெம்ஸ் மரமும் 1 லட்ச ரூபாய். இது நாவல் பழம் சைஸில் இருக்கும். இரண்டுமே அமேசான் ரெயின் பாரஸ்ட் காடுகளில் கிடைக்கும் மரம் என்பதால், அசால்டாக 1 லட்சம் வரை விலை போகிறது’’ என்கிறார் நம்பிக்கையுடன்.

‘‘மா மரத்தில் R2E2, தாய் ரெட்பொமிலோ, தாய் ஜம்போ ரெட் மாங்கோ, தாய் வொயிட் மேங்கோ, ஜப்பானின் மியாசாகி, நாம்டாக் கோல்ட், நாம்டாக் பர்பிள், பிலிப்பைன்ஸ் பென்கன் லிங் என பழத்தோடு வருகிற இம்மரங்கள் 25 ஆயிரம் ரூபாய் விலை போகிறது. ஜப்பான் நாட்டின் மியாசாகி மரங்கள் 75 ஆயிரம் ரூபாய் விலை போகும். R2E2 என்பது ஆஸ்திரேலியா வகை மேங்கோ. இது பார்க்க பெரிய ஆப்பிள் மாதிரி இருக்கும். வாழைப்பழம் மாதிரியே இருக்கின்ற தாய் நாட்டின் பனானா மேங்கோ, பாகிஸ்தானி கிரேப் மேங்கோ தவிர்த்து, பங்களாதேஷ் கோர்மெட்டி மேங்கோ, இமான்பசந்த, பங்கனபள்ளி என கிட்டதட்ட 300 வெரைட்டிகள் எங்களிடம் இருக்கிறது. அதில் 150 வெளிநாடு ரக பழ மரங்கள்.

தாய்லாந்து ஜம்போ நாவலில், ஒரு பழம் மட்டுமே 300 கிராம் எடை இருக்கும். பிரேசில் வெரைட்டியான செரியா பிரியோ. பெரி நாவல், ஒயிட் நாவல், நாட்டு நாவல்னு 7 வெரைட்டி நாவல்கள் எங்களிடம் உள்ளது. பிரேசில் நாட்டின் லிப்போட்டின் மரம், தாய்லாந்து பிங்க் கொய்யா, ஜப்பான் கொய்யா, பாகிஸ்தானி ஆரஞ்சு, நேபாள் ஆரஞ்சு, மலேசியன் க்ரீன் கோக்கனெட், ஆரஞ்சு கோக்கனெட், தாய் ஐஸ்க்ரீம் கோக்கனெட் மரங்களும் எங்களிடம் கிடைக்கிறது.

ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து வருகிற 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மிராக்கிள் ஃபுரூட்ஸ் மரங்களும் உண்டு. இந்தப் பழத்தை சாப்பிட்ட பிறகு எதைச் சாப்பிட்டாலும் சுவை இனிப்பாகவே தெரியும்.அமெரிக்கன் ரெட் பால்மர் மரம், வியட்நாம் பலா மரம், ஒன்றரை ஆண்டில் காய்க்கும் ஜே 33 சிங்கப்பூர் பலா மரங்களும் எங்களிடத்தில் இருக்கிறது. தாய் பேரிக்காய் மரம், செர்ரி, பெர்ரி, மல்பரி பழ மரங்களும் தாய்லாந்து நாட்டில் இருந்து வருகிறது. இதில் தாய் ஆப்பிள் என்பது பச்சை நிறத்தில் இருக்கும். தாய் கிங் மேங்கோ, புர்னோ கிங் மேங்கோ போன்றவை ஒரு பழம் மட்டுமே 4 கிலோ அளவில் காய்க்கும்.

அதேபோல் ஆப்பிரிக்கன் முள் சீத்தா, அமெரிக்கன் முள் சீத்தா, நோனி மரம் போன்றவை கேன்சருக்கு அருமருந்து. மக்கோடா தேவா பழம் டயபட்டீஸ் நோயாளிகளுக்கு மருந்து. மலேசியாவில் இருந்து வரும் கெப்பல் எனப்படும் பெர்ஃப்யூம் பழத்தை உண்டால், உடலில் உள்ள வியர்வை நாற்றம் சுத்தமாகத் தெரியாது’’ என்றவரைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தவர் அவரின் கணவரான அன்பரசு.

‘‘எங்களிடத்தில் பழங்களோடு உள்ள மரங்களை விரும்பி வாங்குபவர்களே பெரும்பாலும் இருக்கிறார்கள் என்றாலும், 9 ஏக்கர், 10 ஏக்கர் என பெரிய பெரிய பண்ணைகளை வைத்திருப்பவர்கள், சின்னச் சின்ன செடிகளையே வாங்கி, நட்டு வைத்து பெரிதாக வளர்க்க நினைக்கிறார்கள். வாடிக்கையாளர் விருப்பம் எதுவாயினும் அதை நிறைவேற்றுவதுடன், வெளிநாட்டு மரங்கள், அவர்களின் தோட்டத்தில் வளர்வதற்கான மண்ணையும், தட்பவெப்ப சூழலையும் நாங்கள் உருவாக்கி கொடுக்கிறோம்.

ஏற்கனவே 5 வருடங்கள், 10 வருடங்கள் காய்த்துக் குலுங்கிய மரங்களை மீண்டும் வேறொரு மண்ணில் கொண்டுவந்து நட்டு வைக்கும்போது, வேர்கள் சேதமாகாமல் இருக்க, மரங்களை டோர் ஸ்டெப் டெலிவரி செய்வதோடு நிறுத்திவிடாமல், நாங்களே மரங்களை ஊழியர்களை வைத்து பிளான்டேஷன் செய்தும் கொடுக்கிறோம்.மரங்கள் குறித்த விபரங்களை தெளிவுபடுத்தி, ஆன்லைன் ஆர்டர்களை எடுப்பதற்காக எங்களிடம் படித்த பெண்கள் சிலரும் ஆன்லைன் வழியாகப் பணியாற்றுகிறார்கள். மரங்கள் வந்ததுமே, சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிற காணொளிகளைப் பார்த்து, எந்தெந்த மரங்கள் தேவையென வாடிக்கையாளர்கள் உறுதி செய்துவிடுவார்கள். டோர் டெலிவரி செய்ய கர்நாடகா, தெலுங்கானா, ஹைதராபாத், கேரளா வரை எங்களின் டிரக், தோட்ட வேலைகளில் தேர்ந்த நபர்களுடன் பயணிக்கிறது.

அதிக உயரமான மரங்களை தனியாக லாரிகளில் வைத்து அனுப்பி வைக்கிறோம்.வெளிநாட்டு மரங்களைத் தேடி நாங்கள் இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கு தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருக்கின்றோம். இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு ரக மரங்கள், பங்களாதேஷ்வரை கப்பலில் வந்து, அங்கிருந்து வெஸ்ட் பெங்கால் வழியாக டிரக் மூலம் எங்கள் தோட்டத்தை வந்தடைகிறது.எங்களிடம் இருக்கும் மரங்கள் மட்டுமே கோடிகளில் தேரும். இன்று எங்கள் நர்ஸரியில் 1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் வரை உள்ள மரங்களை வாங்கவும் வாடிக்கையாளர்கள் தயாராக இருக்கிறார்கள்’’ என்றவாறு விடைபெற்றனர் இந்தத் தம்பதியர்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

படங்கள்: மணிகண்டன்