Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஃபேஷன், அழகுக்கலை எப்போதுமே எவர்கிரீன்தான்!

நன்றி குங்குமம் தோழி

- ஜோதி நந்தினி

‘‘உணவு, அழகுக்கலை மற்றும் ஃபேஷன்... மூன்று துறைகளும் என்றுமே நிலைத்திருப்பவை. காலத்திற்கு ஏற்ப இதில் மாற்றங்கள் வந்தாலும், நம்மை அப்கிரேட் செய்து கொண்டால் இந்த பிசினஸ் என்றுமே நமக்கு கை கொடுக்கும். அதனால்தான் நான் ஃபேஷன் துறையில் என்னை ஈடுபடுத்த முடிவு செய்தேன்’’ என்றார் சென்னையை ேசர்ந்த ஜோதி நந்தினி. இவர் ஜோஸ் ஃபேஷன் டிசைனிங் என்ற பெயரில் ஃபேஷன் மற்றும் தையல் பயிற்சி மையம் ஒன்றை நிறுவி அதன் மூலம் பலருக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘நான் பிறந்தது ஈரோடு என்றாலும், படிச்சது, வளர்ந்தது சென்னையில்தான். பள்ளிப் படிப்பை முடிச்ச பிறகு பொறியியல் சேர்ந்தேன். அதன் பிறகு நிறைய வேலை வாய்ப்பு கிடைச்சது. ஆனால், எனக்கு சொந்தமா தொழில் செய்யணும் என்பதுதான் விருப்பமாக இருந்தது. அதற்கு காரணம் என் அப்பா. அவர்தான் என்னுடைய ரோல் மாடல்னு சொல்வேன். அப்பா உணவுத் துறை சார்ந்த தொழிலில் கடந்த 35 வருடமா இருந்து வருகிறார்.

அவரைப் பார்த்துதான் எனக்கும் சொந்தமா ஏதாவது தொழில் செய்ய வேண்டும்னு விருப்பம் ஏற்பட்டது. நானும் அப்பா சார்ந்த தொழிலில் ஈடுபடலாம்னுதான் முதலில் நினைத்தேன். ஆனால், அப்பா அதில் ஏற்கனவே இருப்பதால், ஏன் ஃபேஷன் துறையை ட்ரை செய்யக்கூடாதுன்னு எனக்கு தோன்றியது. ஃபேஷன் மற்றும் அழகுக்கலை குறித்து நிறைய எக்ஸ்ப்ளோர் செய்ய ஆரம்பிச்சேன். ஃபேஷன் டிசைனிங்கில் இளங்கலை மற்றும் முதுகலை டிப்ளமோ பட்டம் பெற்றேன். மேலும், ஒரு தொழில் துவங்கும் முன் அந்த துறையின் சந்தை நிலவரம் எப்படி இருக்குன்னு தெரிந்து கொள்ள விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறையில் சில காலம் வேலை பார்த்தேன். அதில் கிடைத்த அனுபவங்களை வைத்துதான் என்னுடைய பயிற்சி மையத்தினை துவங்கினேன்’’ என்றவர் பயிற்சி மையம் ஆரம்பித்த காரணத்தையும் விவரித்தார்.

‘‘பொதுவா ஃபேஷன் துறையில் செயல்முறை அனுபவம் ரொம்ப முக்கியம். நான் படிச்ச இடத்தில் அந்த அனுபவம் எனக்கு கிடைக்கவே இல்லை. ஆனால், தியரி பாடங்கள் மட்டும் நல்லா சொல்லிக் கொடுத்தாங்க. இந்த துறையில் பட்டமே பெற்றிருந்தாலும், பலருக்கு சரியான முறையில் துணிகளை தைக்க ெதரியலன்னு தெரிந்து கொண்டேன். அதையே நாம ஒரு பிராண்டாக ஏன் உருவாக்கக் கூடாதுன்னு எனக்குள் எண்ணம் ஏற்பட்டது. குறிப்பாக இந்த துறையில் உள்ள ெநகடிவ்வினை பாசிடிவ்வா மாற்ற விரும்பினேன். அதன் அடிப்படையில்தான் இந்தப் பயிற்சி மையத்தினை 2023ல் துவங்கினேன்.

ஆரம்பித்த போது நான் மட்டும்தான் மையத்தில் இருந்தேன். மூன்று மாதம் கழித்துதான் மாணவர்கள் சேர ஆரம்பித்தார்கள். அதன் பிறகு ஆன்லைனிலும் பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானதும், பயிற்சியாளர்களை நியமித்தேன். இப்போது என்னிடம் ஆறு பயிற்சியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இதுவரை 2000த்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறேன். இங்கு பயிற்சி பெற பள்ளி அல்லது கல்லூரியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. என்னிடம் கல்லூரிப் பெண்கள், வேலைக்கு செல்பவர்கள், இல்லத்தரசிகள்... ஏன் 55 வயதான ஒரு பெண்மணியும் பயிற்சி எடுத்து வருகிறார்.

கற்றுக் கொள்ள வேண்டும்... அதன் மூலம் தங்களுக்கான ஒரு பாதை அமைக்க விரும்புபவர்கள் அனைவருக்கும் இங்கு வாய்ப்பினை அளிக்கிறோம். என்னிடம் பயிற்சி முடித்த பலர் தற்போது சொந்தமா சிறிய அளவில் பிசினஸ் செய்து வராங்க. நாங்க மூன்று மாதம் முதல் ஒரு வருடம் என பேசிக் மற்றும் டிப்ளமோ பயிற்சிகள் அளிக்கிறோம். பயிற்சி முடிச்சவங்க அந்த துறை சார்ந்த நிறுவனங்களில் வேலை பார்க்கலாம் அல்லது சொந்தமா பிசினஸும் துவங்கலாம். எங்களிடம் உள்ள ஒரு வருடப் பயிற்சியில் அடிப்படை டிசைனிங்கில் ஆரம்பித்து சாஃப்ட்வேர் மற்றும் மேனுவல் டிசைனிங் முறை குறித்தும் சொல்லித் தருகிறோம். மேலும், பேட்டர்ன் மேக்கிங், தையல் என டிசைனிங் சார்ந்த கம்ப்ளீட் பேக்கேஜ் கொண்ட பயிற்சி என்பதால், அவர்கள் உடனே வருமானம் பார்க்க முடியும்’’ என்றவர் டெக்னாலஜியும் இதில் புகுத்தி மாணவர்களுக்கு காலத்திற்கு ஏற்ப பயிற்சி அளித்து வருகிறார்.

‘‘டெக்னாலஜி நுழையாத துறையே இல்லை. இந்த துறைக்கு மிகவும் முக்கியம் என்பதால், அதற்கான பயிற்சியும் அளிக்கிறோம். ஃபேஷன் துறையில் பல ஆண்டு காலமாக CAD பயன்படுத்தப்படுகிறது. தற்போது AIயும் அதில் இணைத்து நாங்க செயல்படுத்தி வருகிறோம். இதனால் டிசைனிங் செய்வது எளிதாக உள்ளது. ஒரு படத்தினை உள் செலுத்தினால் போதும் அதை அப்படியே முழுமையாக AI கொடுக்கிறது. அதேபோல் குறிப்பிட்ட டிசைன் உடையில் வாடிக்கையாளர் எவ்வாறு இருப்பார் என்பதையும் AI மூலம் தெரிந்து கொள்ளலாம். அதில் நிறங்கள் மற்றும் டிசைன்களை மாற்றி காண்பிக்கும் போது, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான டிசைன்களை தேர்வு செய்ய எளிதாக இருக்கிறது.

எனக்கு ஃபேஷன் மற்றும் அழகுக்கலை என இரண்டு பிசினஸிலும் ஈடுபட வேண்டும் என்பதுதான் விருப்பம். தற்ேபாது ஃபேஷன் துறையில் கால் பதித்து சக்சஸ் பார்த்து வருகிறேன். அடுத்து என்னுடைய போக்கஸ் முழுக்க முழுக்க அழகுக்கலையில் செலுத்த இருக்கிறேன். அதன் முதல் கட்டமாக சலூன் ஒன்றினை பிரான்சைசி எடுத்திருக்கிறேன். அந்த துறையிலும் என்னுடைய சக்சஸினை பதிவு செய்ய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறேன்’’ என்றார் ஜோதி நந்தினி.

தொகுப்பு: ஷன்மதி