நன்றி குங்குமம் தோழி
தன்னம்பிக்கை பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், எழுத்தாளர், வாழ்வியல் பயிற்சிகள் வழங்குபவர், பட்டிமன்ற நடுவர், கருத்தரங்கம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், கல்லூரிப் பேராசிரியர் என பல முகங்களை கொண்டவர்தான் சென்னையில் வசித்து வரும் முனைவர் எஸ்தர் ஜெகதீஸ்வரி. உங்கள் பெயருக்குப் பின்னிருக்கும் 6 பட்டங்கள்!
நான் 6ம் வகுப்பு படிக்கும் போது, என் தாத்தா திமுக-வின் கொடியேற்று விழாவில், கலைஞரைப் பற்றி என்னை பேச சொன்னார். அதுதான் என்னுடைய முதல் மேடை. அன்று முதல் பள்ளி களில் நடக்கும் அனைத்து இலக்கியம் சார்ந்த போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றிருக்கேன். இதுவரை பேச்சுப் போட்டி, கட்டுரை, கவிதை, ஓவியம் வரைதல் என பல போட்டிகளில் பங்கு பெற்று 200-க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்றிருக்கிறேன். 30-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியீடு செய்துள்ளேன்.
12ம் வகுப்புக்கு பிறகு வீட்டின் சூழல் காரணமாக என்னால் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியவில்லை. ஆனால், உயர் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எனக்குள் இருந்தது. வேலூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து, தோல் பதனிடும் தொழிற்சாலையில் கணக்கராக வேலைக்குச் சேர்ந்தேன். இரண்டு வருட என் சம்பளத்தை சேமித்து வைத்து, இளங்கலையில் வேதியியல் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து படித்து முதல் பட்டம் பெற்றேன். இன்று என் பெயருக்குப் பின்பு ஆறு பட்டங்கள் இருக்கிறது என்றால், நான் கல்வியை நேசித்ததுதான் காரணம். மேடை அனுபவங்கள்!
கல்வியை நான் நேசித்த காரணத்தால், நான் படிப்பினை தாண்டி இலக்கியம் மேல் கவனம் செலுத்தினேன். அதன் மூலம் பட்டிமன்றங்களில் பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு நாளும் பட்டி மன்ற மேடையினை ஏறும் போது தலைப்புக்கு ஏற்ப, நகைச்சுவை உணர்வு சார்ந்த கருத்துகளை என்னுடைய உரையில் வழங்குவேன். ஒவ்வொரு மேடை ஏறும் முன் பல புத்தகங்களை படிப்பேன். உதாரணமாக, கம்பன் கழகப் பேச்சுப் போட்டியில் பங்கு பெற்ற போது, 42 புத்தகங்களை படித்து குறிப்பு எடுத்தேன்.
அதற்கு முதல் பரிசு கிடைத்தது. ஒவ்வொரு மேடையிலும் புதிய கருத்துகளை வெளிப்படுத்துவது தான் எனக்கான அடையாளத்தை தேடித் தந்தது. கல்வியும், மேடையும் என்னுடைய இரண்டு கண்கள். கல்வி மிகவும் அவசியமானது என்பதால், மூன்று குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை படிக்க உதவி செய்கிறேன்.
மாணவ சமூகத்திற்கு நீங்க சொல்ல நினைப்பது?
கொரோனா தொற்றுக்குப் பின் மாணவர்களின் கற்றல் தரம் குறைந்துவிட்டது. இன்றைய போட்டி நிறைந்த உலகில் மாணவர்கள் தங்களை அனைத்து துறைகளிலும் கற்க வேண்டியவற்றைக் கற்க வேண்டும். படித்த பாடங்கள் பயன்தரும் வகையில் தங்களின் கவனத்தைச் செலுத்துவது நல்லது. கல்வி ஒருவரின் வாழ்க்கை மட்டுமில்லை அவரின் குடும்பம் முன்னேறவும் ஒரு ஆயுதமாக செயல்படும் என்பதால், மாணவர்கள் அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கல்வி மட்டுமில்லாமல் ஒரு கைத் தொழிலையும் காலத்திற்கு ஏற்ப கற்றுக் கொள்வது அவசியம். பெற்றோர்களின் உழைப்பை வீணாக்காமல் கல்வியைத் தேடி பயணித்தால் கண்டிப்பாக வெற்றி அவர்களை நிச்சயமாகத் தேடி வரும்.மாணவர்களுக்கு இன்றைய நவீன காலகட்டத்தில் நிறைய கவனச் சிதறல்கள் ஏற்படுத்துவதற்கான சாதனங்கள் இருக்கின்றன. மனதை பக்குவப்படுத்துவதற்கும், பழக்குவதற்கும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்ட அவர்களிடம் தன்னம்பிக்கையுடன் பேச வேண்டும்.
ஆராய்ச்சிக் கட்டுரைகள்!
ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைக்கு குறைந்தபட்சம் 100 புத்தகங்களையாவது படிக்க வேண்டும் என்று நினைப்பேன். நூலகம் திறக்கும் நேரத்தில் உள்ளே சென்றுவிடுவேன். அவர்கள் மூடும் நேரம்தான் வெளியே வருவேன். ஓவியன் தான் வரைந்த ஓவியத்தின் அழகைப் பார்த்து ரசித்துக்கொண்டு இருப்பது போல் நானும் எனது ஆய்வுக் கட்டுரைகளை எழுதி முடித்துவிட்டு, அதை மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்து ரசிப்பேன். இதுவரை 75 ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இங்கிலாந்தில் உள்ள லிவர் பூல் ஹோப் பல்கலைக்கழகத்தில், 2018ம் ஆண்டு ‘வள்ளுவரும்-வீரமாமுனிவரும்’ என்ற தலைப்பில் 50 பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி சமர்ப்பித்தேன்.
மாநில அளவில் பேராசிரியர்களுக்கு ‘இருபதாம் நூற்றாண்டிலும் காமராஜர்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி நடைபெற்றது. அதில் 2வது இடம் கிடைத்தது. பேச்சு வந்தால் எழுத்து வராது, எழுத்து வந்தால் பேச வராது என்பார்கள். எனக்கு பேசுவது எப்படி பிடிக்குமோ, அதே போன்று எழுதவும் பிடிக்கும். சமீபத்தில் தமிழ்நாடு கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கில் ‘திருவள்ளுவரும்- வேமனரும்’ ஒப்பாய்வு தலைப்பை வாசித்தேன். ஐந்து நூல்கள் எழுதியுள்ளேன்.
தொகுப்பாளினியாக பணியாற்றிய அனுபவம்!
தமிழ்த்துறைப் பேராசிரியர் என்பதால், எங்க கல்லூரியில் நடைபெறும் பெரும்பான்மையான நிகழ்ச்சிகளை நான் தொகுத்து வழங்கியுள்ேளன். அந்த அனுபவங்கள்தான் எனக்கு பொதிகை தொலைக்காட்சியில் எதிரும்-புதிரும், நூல் நயம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. அகில இந்திய வானொலியில் முன்னாள் பிரதமர் நேரு, வாஜ்பாய், இந்திரா காந்தி என தலைவர்களின் பிறந்தநாள் விழாவில் உரை வழங்கியுள்ளேன்’’ என்றவர், அறிவுமலர், அறிவுத்தளிர், வளரும் தலைமுறை பேச்சாளர், கவிமுகில், கவிமாமணி, இலக்கியச் சூரியன், எழுத்துச் செம்மல், தமிழ்ப்பணிச் செம்மல், கவித்தென்றல் என 100-க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்றுள்ளார்.
முனைவர் எஸ்தர் ஜெகதீஸ்வரி
தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்