Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மண்புழு ராணி!

நன்றி குங்குமம் தோழி

அன்றாட வாழ்வில் நாம் உருவாக்கும் கழிவுகள் என்னவாகின்றன என்பதைப் பற்றி யோசித்திருக்கிறோமா? அவை பெரும்பாலும் நிலப்பரப்புக்கும் குப்பைக் கிடங்கிற்கும் செல்கின்றன. கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினை குறைக்க கழிவு மேலாண்மை போன்ற செயல்களில் ஒவ்வொரு தனி மனிதனும் ஈடுபடலாம். எல்லாவற்றையும் விட அதிகப்படியான

கழிவுகளை உருவாக்காமல் இருப்பதும் நம்முடைய கடமையே.

இத்தகைய கடமையை கையில் எடுத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும், நிலைத்தன்மை வாழ்வை கடைபிடிப்பதோடு நில்லாமல் மண்புழு உரம் தயாரிப்பது, தோட்டம் அமைப்பது, கழிவு மேலாண்மை செய்வது போன்றவற்றை சமூக வலைத்தளங்களில் காணொளிகளாக பகிர்ந்து பிறரையும் ஊக்குவிக்கிறார் பசுமைப் போராளி வாணி மூர்த்தி. 60 வயதை கடந்த வாணிக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ஃபாலோவர்ஸ்கள் உண்டு. தன் ஃபாலோவர்ஸ்களால் இவர் ‘மண்புழு ராணி’ என்றும் அழைக்கப்படுகிறார்.

“நான் பெங்களூரூவில் வசித்து வருகிறேன். 2009ம் ஆண்டு மாவல்லிபுரா குப்பைக் கிடங்கினை பார்த்தேன். அதன் பிறகு அதிகப்படியான கழிவுகளை என் வீட்டில் இருந்து வெளியேறக்கூடாது என்று முடிவு செய்தேன். அதற்கான வழிமுறைகளையும் பின்பற்றத் தொடங்கினேன். என் வீட்டுக் கழிவுகளை கொண்டு கழிவு மேலாண்மை செய்ய முடிவு செய்தேன். அன்று முதல் இன்று வரை முடிந்தவரை கழிவுகள் நிலப்பரப்பிற்கு ெசல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்.

வீட்டிலேயே உரம் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட போது ஆரம்பத்தில் பல தவறுகள் நடந்தது. அதன் பிறகுதான் படிப்படியாக மண்புழு உரம் தயாரிப்பில் ஈடுபட்டேன்’’ என்று கூறும் வாணி வீட்டில் உள்ள கழிவுகள் கொண்டு உரம் தயாரிக்கும் வழிமுறைகளை எடுத்து சொல்கிறார்.“முதலில் ஏன் உரம் தயாரிக்கணும்னு தெரிந்து கொள்ளணும். உரம் தயாரிப்பது அதிக நேரம் எடுக்கும், பராமரித்துக்கொண்டே இருக்கவேண்டும், துர்நாற்றம் வீசும் என்று நினைப்பார்கள்.

ஆனால், நாம் குப்பையில் கொட்டும் ஈரக்கழிவுகள் குறித்த விழிப்புணர்வு நமக்கு அவசியம். நமது வீட்டுக் கழிவுகளில் 60% ஈரக்கழிவுகள்தான். இவை மண்ணுக்கு சிறந்த வளத்தை அளிக்கக்கூடியவை. குப்பைக் கிடங்கிற்கு போகக்கூடியவை அல்ல. அவற்றை வீட்டிலேயே கழிவு மேலாண்மை செய்யாமல் குப்பைக் கிடங்கில் சேர்க்கும் போது, குப்பைகளின் அழுத்தம் காரணமாக ஈரக்கழிவுகள் அழுகும் போது அது மீத்தேன் வாயுவை உருவாக்குகிறது.

புவி வெப்பமடைதலுக்கு காரணமாகும் வாயுக்களில் இதுவும் முக்கியமான ஒன்று. இதனால் காற்று மாசடைவது மட்டுமின்றி, குப்பைக் கிடங்குகளிலிருந்து கசியக்கூடிய ஒரு கருமையான திரவம், மண்ணை மட்டுமின்றி நிலத்தடி நீரையும் சேதப்படுத்துகிறது. எனவே, காற்று, மண், நீர் ஆகியவை மாசுபடும் போது, நம் வீட்டு சமையலறை கழிவுகள் குப்பைக் கிடங்கில் சேர்வது சரிதானா என்பதை யோசியுங்கள். கழிவுகளை கையாளுவது, குப்பைகளை பிரித்தெடுத்தல் என்பது நகராட்சியின் பொறுப்பு என்று நாம் நினைப்பதால், தனிப்பட்ட முறையில் யாரும் கழிவு மேலாண்மை செய்ய முன்வருவதில்லை.

நம் வீட்டுக்கழிவுகளை உரமாக தயாரிக்கலாம் என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று விலை மதிப்பில்லாத சமையலறை கழிவுகளை வீணாக குப்பைக் கிடங்கில் சேர்க்க வேண்டாம். மற்றொன்று சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கலாம். நம் பூமியால் ஜீரணிக்கவே முடியாத கழிவுகளை உருவாக்குவது நாம்தான். நாமே அதை அழித்துவிடக்கூடாது” என்றவர் மேலும் தொடர்ந்ததில்...

“யார் வேண்டுமானாலும் வீட்டிலேயே உரம் தயாரிக்கலாம். அறிவியல் ரீதியான செயல்முறைகள் இருந்தாலும், ஒரு சாதாரண மனிதராக உரம் தயாரிக்கும் கலையை புரிந்துகொண்டாலே போதுமானது. ஈரமான சமையலறை கழிவுகள், உலர்ந்த கழிவுகள், உலர்ந்த இலைகள் போன்றவற்றை சமநிலைப்படுத்துவது ஒரு செயல்முறை. உலர்ந்த கழிவுகளிலிருந்து வெளியேறும் கார்பன் மற்றும் ஈரக்கழிவுகளிலிருந்து வெளியேறும் நைட்ரஜன் ஆகியவற்றின் விகிதத்தை சமநிலைப்படுத்தக்கூடிய ஒரு கலை எனலாம்.

நகர்ப்புறங்களில் urban composting மூலம் செய்யப்படுகிறது. இந்த செயல்முறையை விரைவுப்படுத்த நுண்ணுயிரிகளை அதில் சேர்க்க வேண்டும். வீட்டில் தயாரிக்கும் போது பசுவின் சாணம் சிறந்த நுண்ணுயிர்களை கொண்டதாக இருக்கும். சாணத்தை தண்ணீரில் கரைத்து அதனை உரம் தயாரிப்பதற்கு எடுத்துவைத்திருக்கின்ற ஒரு கலனில் ஊற்ற வேண்டும். சாணம் கிடைக்கவில்லையெனில் புளிப்பு தயிரை நன்கு கரைத்து அதில் ஊற்றலாம்.

அல்லது composting கல்சர் பவுடரை தூவலாம். கலனின் அடிப்பகுதியில் உலர்ந்த கழிவுகளையும், அதற்கு மேல் அடுக்கில் ஈர்க்கழிவுகளை அடுக்கி வைக்கவும். ஒவ்வொரு முறை ஈரக்கழிவுகளை சேர்க்கும்போதெல்லாம் அதில் நுண்ணுயிரிகளை சேர்க்கலாம். உரம் தயாரிக்க வைத்திருக்கும் கலனில் இவ்வாறு கழிவுகளை நிரப்பி சமன் செய்துவிட்டதும், ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு ஒருமுறை அந்தக் கலனை திருப்பி விடுங்கள். இதனால் போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

முலாம்பழத் தோல், வாழைப்பழத் தோல் மற்றும் வேறெந்த காய்கறி தோல்களிலிருந்தும் நீர் வெளியேறுவதால் உரக்கலனில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அவ்வப்போது ஈரக்கழிவு மேல் உலர்ந்த கழிவுகளை சேர்க்க வேண்டும். அப்படி இருந்தும் நீர் நீங்காமல் வெளியேறும் வகையில் கலனின் அடிப்பகுதியில் துளைகளை இடலாம். நீர் உறிஞ்சப்படும் காரணத்தினால் கோடைக்காலத்தில் உரம் தயாரித்தல் விரைவாகவும், குளிர்காலத்தில் மெதுவாகவும் நடைபெறும். தயார்நிலையில் உள்ள உரம் ஈரப்பதம் கொண்டதாக இருந்தால் அதில் நுண்ணுயிரிகள் இருக்கும். அதே சமயம் அதிகளவு ஈரப்பதமாகவும் இருக்கக்கூடாது. ஒரு பெரிய கலனில் உரம் தயாரிக்க 30 முதல் 40 நாட்கள் எடுக்கும். எப்போதும் கலன் மூடிய நிலையில் இருக்க வேண்டும்’’ என்றவர் ஒரு பசுமைப் போராளியாக தன் அனுபவங்களை பகிர்கிறார்.

“என்னை சுற்றிலும் பசுமை நிறைந்திருக்கும். என் வீட்டுத் தோட்டத்தில் பறவைகள், தேனீக்கள், குரங்குகள் எல்லாம் வந்து போகும். தோட்டத்தில் கிடைக்கும் பழம், காய்கறிகளை உண்ணும். தோட்டம் மற்றும் உரம் தயாரிப்பில் முழுமையாக இறங்கிய போது அதற்கான சுற்றுச்சூழல் அமைப்பையும் நாம் உருவாக்குகிறோம். உரம் தயாரித்தல் என்பது பூமியின் நன்மைக்காக செய்யப்படும் செயல். அதேபோல் நான் உரம் தயாரிக்க ஆரம்பித்த காலம் முதல் மண்புழுக்கள் என் செல்லப்பிராணிகளாக மாறின.

அந்த உரங்களைதான் நான் என் தோட்டத்திற்கு பயன்படுத்துகிறேன். பெரிய பண்ணைகள், தோட்டங்கள் வைத்திருப்பவர்கள் மண் புழுக்களை எவ்வாறு வளர்ப்பது மற்றும் இனப்பெருக்கம் செய்வது என்று தெரிந்து கொண்டு அதன் மூலம் தங்களின் நிலத்திற்கு ஊட்டச்சத்துக்கள் கொடுக்கலாம். காரணம், மண் புழு உரத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. மண்ணிற்குள் ஆழத்தில் வாழும் மண்புழுக்கள் அல்லாமல், மண்ணின் மேற்பரப்பில் வாழும் மண்புழுக்கள்தான் உரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

மண்புழுக்களை எடுத்து அப்படியே உரம் சேகரிக்கும் கலனில் போடக்கூடாது. காரணம், உரம் தயாரிக்கும் நிலையில் அந்த கலன் சூடாக இருக்கும். அதனால் மண்புழு இறந்துவிடும். அவை தன் சருமம் வழியாக சுவாசிப்பதால், உரத்தில் ஈரப்பதம் இருக்க வேண்டும். முலாம்பழம் மற்றும் வாழைப்பழத் தோல்கள் மண்புழுவிற்கு பிடிக்கும். பூண்டு தோல், எலுமிச்சை தோல்களில் அமிலத்தன்மை இருப்பதால், அவற்றை விரும்புவதில்லை” என்றவர், ட்ராவல் கிரீன் மூலம் செல்லும் இடங்களில் குப்பைகளை போடாமல் கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறார்.

“வீட்டிலிருந்தே வாட்டர் பாட்டில்களை கொண்டு செல்லுங்கள். நாம் வெளியில் செல்லும் இடங்களில் தண்ணீர் பாட்டில்களை வாங்கும் போது தண்ணீரை குடித்துவிட்டு அப்படியே குப்பைகளில் போட்டுவிடுவோம். இதனால் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள் உண்டாகும். கடைகளில் டீ, காபி கொடுக்கும் பேப்பர் கப்களில் மெழுகு சேர்க்கப்பட்டுள்ளது. அவை எளிதாக மக்காது. காரணம், அதன் பேப்பர் அடுக்குகளின் நடுவில் பிளாஸ்டிக்கும் இருக்கும். கப்களில் இருக்கும் மெழுகு உடல் நலத்திற்கு நல்லதல்ல. இது போன்று பிளாஸ்டிக் கப்களை தவிர்க்க நான் எப்போதும் சிறு டம்ளரை என்னுடன் வைத்திருப்பேன். ஷாப்பிங் செய்யும் போது உடன் ஒரு துணிப் பையினை எடுத்து செல்லுங்கள்.

இது புவிக்கு நன்மை செய்வது மட்டுமில்லாமல், விலங்குகள் பிளாஸ்டிக் பைகளை உண்பதை தவிர்க்க முடியும். துணிப்பைகளை போன்றே தோற்றமளிக்கக்கூடிய பைகளும் நெய்யப்படாத பாலிப்ரொப்பிலீன் பைதான். இதுவும் பிளாஸ்டிக் போன்றே தீமை செய்யக்கூடியது. எனவே, பருத்தியினாலான துணிப்பைகளையே அன்றாடம் ஷாப்பிங் செய்ய பயன்படுத்துவது நல்லது.கத்தி, ஸ்பூன் போன்ற கட்லரி பொருட்களை உடன் வைத்திருப்பது நல்லது.

இதனால் பிளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவதை குறைக்கலாம். பிளாஸ்டிக் அல்லாத பாக்ஸ்களை வைத்திருப்பதன் மூலம் நாம் உணவகத்தில் சாப்பிட செல்லும் போது அங்கு மீதமான உணவுகளை கொண்டு வர பயன்படும். வெளியே சாப்பிடும் பழம், காய்கறிக் கழிவுகள், மீதமுள்ள உணவுகளை உரமாக்க அதைக் கொண்டு வர கையில் எப்போதும் ஒரு பையினை வைத்திருங்கள்” என்றவர், சமூக ஆதரவு விவசாயம் (Community Supported Agriculture, CSA) சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்