Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம்!

நன்றி குங்குமம் தோழி

உலக வில்வித்தை சாம்பியன் ஷீத்தல் தேவி

செப்டம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. அதில் தங்கப் பதக்கம் வென்று மாற்றுத்திறனாளியான ஷீத்தல் தேவி புதிய சாதனை படைத்தார். இறுதிச் சுற்றில் உலகின் நம்பர் ஒன் துருக்கி வீராங்கனையான ஓஸ்னூர் குயூர் கிர்டியை 146-143 என்ற கணக்கில் வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை தன் வசமாக்கிக் கொண்டார் ஷீத்தல். இவர் இந்திய அணி சார்பில் வெள்ளிப்பதக்கம், பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலம், ஆசியப் போட்டிகளில் தங்கம் என தேசிய சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். 18 வயதிற்குள் தேசிய சாம்பியன் பட்டம் வென்ற இவர் தற்போது உலக சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

வில்லைக் கையாளும் போது, வில்லைப் பிடிக்க ஒரு கை, அம்பு எய்ய ஒரு கையினை பயன்படுத்துவோம். ஆனால், ஷீத்தலுக்கு பிறக்கும் போதே இரண்டு கைகள் இல்லாமல்தான் பிறந்தார். ஷீத்தலுடன் போட்டியிட்ட ஓஸ்னூர் குயூர் கிர்டிக்கு ஒரு விபத்தில் இடுப்பிற்கு கீழ் பக்கவாதம் ஏற்பட்டது. ஆனால், அவரின் கைகள் பலமாக இருக்கிறது. தனக்கு கைகள் இல்லை என்பதை ஷீத்தல் யோசிக்காமல் தாடை மற்றும் கால் விரல்களின் நுனிப்பகுதியை பயன்படுத்தி அம்பு எய்து வெற்றியை தன் வசமாக்கிக் கொண்டுள்ளார்.

ஷீத்தல் 2022ல் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசியப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றவர். உலக வில் வித்தை போட்டியில் வெள்ளிப் பதக்கம் ஷீத்தலுக்குக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து ஆசியப் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தைச் சொந்தமாக்கிய ஷீத்தலை அர்ஜுனா விருதும் வந்தடைந்தது.

2024ல் பாரிசில் நடைபெற்ற பாராலிம்பிக்ஸில் தனிநபர் போட்டியில் ஷீத்தலால் பதக்கத்தை பெற முடியவில்லை. ஆனால், இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இவரின் திறமையை பார்த்து மலைத்துப் போன மஹிந்திரா குழுமத் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, ஷீத்தலுக்கு ஒரு காரை பரிசளித்தார். அப்போது 18 வயது நிரம்பாத காரணத்தால் ‘18 வயதானதும் காரைப் பெற்றுக் கொள்கிறேன்’ என்று ஷீத்தல் சொல்லி இருந்தார். 2025 ஜனவரியில், ஷீத்தலுக்கு 18 வயது ஆன போது, காரில் அவருக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அனைத்து மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கும் ஷீத்தல் தேவி, வில் அம்பு எய்யும் வித்தைக்கு தனது தாடையையும், கால் விரல்களையும் கொண்ட அவர் எடுத்த பயிற்சி பற்றி அவரே விவரித்தார். ‘‘கருவில் இருக்கும் போதே ஃபோகோமெலியா நோய் தாக்கம் ஏற்பட்டதால் நான் பிறவியிலேயே இரண்டு கைகள் இல்லாமல்தான் பிறந்தேன். நல்லவேளை என் இரண்டு கால்களை அந்த நோய் பாதிக்கவில்லை.

குழந்தைப் பருவத்தில் கால்களால் மரங்களில் ஏறி பழகினேன். அன்றாட வேலைகளை செய்ய என் கால்களை பயன்படுத்த ஆரம்பித்தேன். 2019ல், இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் குழுவால் 14வது வயதில் என்னுடைய வாழ்வில் திருப்புமுனையானது. கைகள் இல்லாமல் முதல் உலக வில்வித்தை சாம்பியனான அமெரிக்க வில்லாளி மாட் ஸ்டட்ஸ்மேன் தாடை, கால் விரல் நுனிகளைப் பயன்படுத்தி அம்பு எய்தார். அவரது பாணியில் எனக்குப் பயிற்சி தந்தனர்.

இந்திய ராணுவம் எனது கல்வி, மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொண்டது. பயிற்சி காரணமாக நான் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து பாட்டியாலாவில் தங்கி இருந்தேன். தொடக்கத்தில், காலின் குதிகாலால் வில்லின் ஒருமுனையை அழுத்திக் கொண்டு அம்பு எய்யலாம் என்று விளையாட்டில் விதி இருந்தது. பிறகு கால்விரல் அல்லது பாதத்தின் முன் பகுதியால் மட்டுமே வில்லின் முனையை அழுத்திப் பிடிக்க வேண்டும் என்று மாற்றப்பட்டது.

பல மாத பயிற்சிக்குப் பிறகு, 2022ல் ஹாங்சோவில் நடந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் கலப்பு அணிக்காக இரண்டு தங்கப் பதக்கங்களையும், பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றேன். அந்த வெற்றி இந்தியாவின் நம்பிக்கைக்குரிய மாற்றுத்திறனாளி வீராங்கனையாக என்னை மாற்றியது. வில்வித்தை என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டதால், இரண்டு கைகள் இல்லாத நிலையிலும் நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். 2022க்கு முன், என்னை யாருக்கும் தெரியாது. இப்போது, இந்தியா முழுதும் எனக்கான அடையாளம் கிடைத்துள்ளது. மற்றவர்களைப் பார்த்துதான் இந்த விளையாட்டினை தேர்வு செய்தேன். இப்போது நான் மற்றவர்களுக்குத் தூண்டுகோலாக மாறியுள்ளேன்.

போட்டிகளில் தோல்வி அடைவது சகஜம். அதுவே நமக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கும். எல்லோரும் எப்போதும் தோல்வியை சந்திப்பதில்லை. நானும் தோல்விகளை சந்தித்துள்ளேன். அதைக் கண்டு பயந்துவிட்டால், தோல்வியை ஏற்றுக்கொண்டால், வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க முடியாது. தளராமல் முயற்சித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். தொடக்கத்தில் நான் ஆசிரியராக வேண்டும் என்று கனவு கண்டேன். ஆனால், இப்போது, வில்வித்தை வீராங்கனையாகத் தொடர்ந்து பல பதக்கங்களை என் நாட்டுக்காக வென்று நாட்டிற்குப் பெருமை சேர்க்க விரும்புகிறேன்” என்றார் ஷீத்தல்.

தொகுப்பு: பாரதி