Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கையடக்கத்தில் கட்டுமானத் தொழில்!

நன்றி குங்குமம் தோழி

‘‘தொழில்நுட்பம் வளர வளர நம்முடைய தொழிலையும் அதற்கேற்ப மாற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்’’ என்கிறார் கமலா. கட்டட தொழிலில் கால் பதித்திருக்கும் இவர் ‘மேஸ்திரி’ என்ற செயலி மூலம் பலதரப்பட்ட கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களை ஒன்றாக இணைத்து செயலி மூலமாகவே அவர்களுக்கு ஒரு பிசினஸ் திட்டத்தினை ஏற்படுத்தி தருகிறார். ‘‘என்னுடைய 22 வயசில் இருந்தே நான் பிசினசில் ஈடுபட ஆரம்பிச்சேன். முதலில் ஃபேஷன் துறையில் டிப்ளமோ படிச்சேன்.

அதன் பிறகு க்ளோதிங் மற்றும் ஃபர்னிஷிங் சார்ந்த தொழிலை 18 வருடம் நடத்தி வந்தேன். அதன் பிறகு எங்களின் குடும்பத் தொழிலில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டதால், என்னால் இந்த பிசினசில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் அதை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு முழுக்க முழுக்க குடும்பத் தொழிலில் என்னை இணைத்துக் கொண்டேன். எங்களுடையது 50 வருட நிறுவனம். அப்பாதான் இதனை நிர்வகித்து வந்தார்.

முதன் முதலில் ரோலிங் ஷட்டர்கள் மற்றும் ஸ்டீல் ஜன்னல்கள் கொண்டுதான் தன்னுடைய பிசினசை ஆரம்பித்தார். அதன் பிறகு சாரம் கட்டும் தொழிலினை துவங்கினோம். கட்டடங்களை அமைப்பவர்கள் சொந்தமாகவும் அல்லது வாடகைக்கு என எங்களின் சாரங்களை வாங்கிச் செல்வார்கள். அதற்கான தனி நிறுவனம் அமைத்ததால் அதனை நான் நிர்வகிக்க துவங்கினேன். கிட்டத்தட்ட 15 வருடமாக நாங்க இந்தத் தொழிலினை சக்சஸாக நடத்தி வருகிறோம்’’ என்றவர் கட்டுமானத் தொழிலுக்கான ஆன்லைன் பிளாட்ஃபார்ம் ஒன்றை துவங்கியுள்ளார்.

‘‘கோவிட் ஆரம்பிக்கும் முன் எங்கத் தொழிலினை ஆன்லைன் மூலமாக விரிவடையச் செய்ய விரும்பினேன். இதன் மூலம் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் அனைவரையும் ஒரே கூரைக்குள் இணைக்க முடியும். அதாவது, கட்டட அமைப்பாளர்கள், செங்கல், மண், ஸ்டீல் என அதற்கான பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், காண்ட்ராக்டர்கள், இன்டீரியர் டிசைனர்கள், பெயின்ட் நிறுவனங்கள், பிளம்பர்கள், ரியல் எஸ்டேட் கன்சல்டன்ட்ஸ், சோலார் பேனல்கள், வாஸ்து நிபுணர்கள் என ஒரு கட்டடம் அமைக்க தேவைப்படும் அனைத்து துறையை சார்ந்தவர்களை இதில் இணைக்க திட்டமிட்டேன்.

அதன் முதல் கட்டமாக ‘மேஸ்திரி’ என்ற பெயரில் இணையம் மற்றும் செயலிகளை அமைத்தேன். அதன் மூலம் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அனைவரையும் இணைக்க முடிந்தது. இந்த இணையம் மற்றும் செயலி அமைக்க எனக்கு ஒரு வருடகாலமானது. காரணம், என்னுடைய தேவை அனைத்தும் அதில் இடம் பெற வேண்டும் என்பதால், ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செயல்படுத்தினேன்’’ என்றவர், செயலி மற்றும் இணையத்தின் பயன்பாடு குறித்து விவரித்தார்.

‘‘இந்த இணையம் முழுக்க முழுக்க கட்டுமானத் தொழில் சார்ந்தது என்பதால், அந்தத் தொழிலை சார்ந்தவர்கள் யார் வேண்டும் என்றாலும் இதில் உறுப்பினர்களாக இணையலாம். அவ்வாறு இணைபவர்களுக்கு தனிப்பட்ட விதிமுறைகள் உள்ளது. இந்த துறையில் குறைந்தபட்சம் மூன்று வருடம் தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். நிறுவனத்திற்கு GST செயல்பாடு அவசியம். அதே தொழிலில் இருப்பவர்கள் வேறு யாராவது இவர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது மேனேஜர் மற்றும் நிறுவனத்தின் பொதுவான எண்களை இணைக்காமல், நிறுவனத்தின் உரிமையாளரின் எண்களை இணைப்பது அவசியம். பிசினஸ் காரணமாக தொடர்பு கொள்ள நேரிடும் போது, பொருட்கள் குறித்த சரியான விவரங்களை அதன் உரிமையாளரால் மட்டுமே சரியாக குறிப்பிட முடியும். இது ஒரு ஆன்லைன் செயலி. நாங்க யாருடைய பொருளையும் வாங்குங்கள் என்று பரிந்துரைப்பதில்லை. கட்டட தொழில் சார்ந்தவர்கள் தங்களின் தேவையினை இதில் பார்த்து அவர்களே நேரடியாக ெதாடர்பு கொள்ளலாம். இவர்களை இணைக்கும் ஒரு பாலமாகத்தான் எங்களின் செயலி செயல்பட்டு வருகிறது.

எங்க இணையத்தில் விண்ணப்பிப்பவர்களிடம் ஒரு குறிப்பிட்ட கட்டணம் பெறுகிறோம். அதில் பிரிமியம் கட்டணமும் உள்ளது. அதை ஏற்பவர்களுக்கு வருடம் முழுதும் நாங்க எங்களின் இணையம் மற்றும் செயலியில் மார்க்கெட்டிங் செய்து தருவோம். ஒரு வருட பிரிமியம் ரூ.6000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பிரிமியம் வேண்டாம் என்பவர்கள் ஒரே கட்டணமாக ரூ.199 செலுத்தி தங்களின் நிறுவனத்தை பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் மார்க்கெட்டிங் செய்ய மாட்டோம். மேலும் எங்களுடன் இணைபவர்களுக்கு பலவித சலுகைகளும் நாங்க வழங்கி வருகிறோம்’’ என்றவர், கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.

‘‘கட்டுமானத் தொழிலில் அடிமட்ட வேலைகளில் பல பெண்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனை தொழிலாக 2% பெண்கள்தான் செய்து வருகிறார்கள். அவர்களை கவுரவிக்கும் போது பல பெண்களுக்கு அது ஊக்கமாக அமையும். மேலும் பலர் இந்தத் தொழிலில் தங்களை இணைத்துக் கொள்ள முன் வருவார்கள். இதற்காக ஆர்கிடெக்ட் மற்றும் இன்டீரியர் குறித்துதான் படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதில் பல கிளைகள் உள்ளன. அதற்கான படிப்புகளை தனிப்பட்ட முறையில் பெண்கள் தேர்வு செய்து படிக்கலாம்.

உதாரணத்திற்கு டிராப்ஸ்ட்மென், நிலத்தினை சர்வே செய்வது, ஹெல்த் அண்ட் சேஃப்டி, ஒரு கட்டடத்தில் பாதுகாப்பினை ஆய்வு செய்வது என கட்டுமானம் சார்ந்து பல டிப்ளமோ படிப்புகள் உள்ளன. பெண்கள் அது போன்ற படிப்பினை தேர்வு செய்தால், சாதாரண கட்டுமானத் தொழிலாளியாக வேலை பார்க்காமல், அவர்களும் சிறிய அளவில் வளரும் தொழில்முனைவோராக மாற முடியும்.

அது குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லாததால், ஒரு அமைப்பினை நிறுவி அதன் மூலம் கட்டுமானத் தொழில் சார்ந்த வேலைகள் மற்றும் படிப்பு சார்ந்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறோம். அதில் முதல் முறையாக கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் பல பெண்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்திருக்கிறோம். இதனை வருடா வருடம் தொடர இருக்கிறோம். அதன் மூலம் பெண்கள் கட்டுமானத் தொழிலில் தங்களை அதிகளவில் ஈடுபடுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும்’’ என்றார் கமலா.

தொகுப்பு: ஷம்ரிதி