நன்றி குங்குமம் தோழி
டீயில் பலவகைகள் உள்ளது. ஒவ்வொரு டீயும் நமக்கு ஒவ்வொரு விதமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. அந்த வகையில் பலபேர் விரும்பி சாப்பிடக்கூடிய கிராம்பு டீயின் நன்மைகள் பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம். கிராம்பு ஒரு மருத்துவ மூலிகைப் பொருளாகும். இது சமையலில் நறுமணப் பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. கிராம்பு டீயை குடிப்பதால் உடலிற்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது... கிராம்பில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ளன. இதன் மூலமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.
காய்ச்சல் போக்கும்: கிராம்பில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே அதிக அளவில் உள்ளது. இது பாக்டீரியா தொற்றுக்கு எதிராக போராட உதவுகிறது. காய்ச்சலில் இருக்கும் போது கிராம்பு டீ அருந்தினால் விரைவில் குணமாகும். கிராம்பில் வைரஸ் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளது. சளி, இருமல் போன்றவற்றிற்கு கிராம்பு டீ நல்ல தீர்வாக இருக்கிறது.உடல் எடை மற்றும் செரிமானப் பிரச்னை... உடல் எடை மற்றும் செரிமான பிரச்னைகள் உள்ளவர்கள் தினமும் கிராம்பு டீயை அருந்தி வரலாம்.
பல் ஈறு வலி குணமாக: பல் வலிக்கு கிராம்பு ஒரு நல்ல தீர்வு. கிராம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து பல் வலியில்இருந்து நிவாரணம் அளிக்கிறது. வாயில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்களும் அழிந்து விடுகிறது.மூட்டுவலி குணமாக: கிராம்பில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து மூட்டுவலி பிரச்னையை போக்குகிறது. நாள்பட்ட மூட்டுவலி பிரச்னை உள்ளவர்களுக்கு கிராம்பு டீ ஒரு நல்ல தீர்வாகும்.
சைனஸ் பிரச்னை தீர: கிராம்பில் உள்ள யூஜெனால், சளியை போக்க உதவுகிறது. எனவே சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு கிராம்பு டீ சிறந்த மருந்தாக உள்ளது.தோல் நோய்கள் குணமாக: கிராம்பில் அதிக அளவில் கிருமிநாசினி உள்ளது. கிராம்பு டீ அருந்தி வருவதன் மூலம் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
தொகுப்பு: ஏ.எஸ்.கோவிந்தராஜன், சென்னை.