நன்றி குங்குமம் தோழி
நவராத்திரி இம்மாதம் 22ம் தேதி முதல் துவங்க இருக்கிறது. கொலு பொம்மைகளை தூசி தட்டி, அதனை வைக்க கொலு படிக்கெட்டுகள் எல்லாம் ரெடி செய்ய ஆரம்பித்திருப்போம். கொலு படிக்கெட்டுகளில் சாமி பொம்மைகளை வைப்பது மட்டுமில்லாமல் சிலர் பார்க், பள்ளிக்கூடங்கள், ஒரு சிலர் திருவண்ணாமலை கோயில், முருகர் கோயில் போன்ற அமைப்பினை செய்வது வழக்கம்.
இந்த பத்து நாட்கள் வீடே பார்க்க அழகாக இருக்கும். அப்படிப்பட்ட திருவிழாவில் குழந்தைகள் தங்கள் பங்கிற்கு அழகான மாவிலை, பூ மற்றும் ஊதுவர்த்தி ஸ்டாண்டுகளை செய்து கொலு படிக்கெட்டில் உள்ள சுவாமிகளுக்கு அதில் ஊதுவர்த்தியினை ஏற்றி வைக்கலாம். இது பார்க்க அழகாக இருக்கும். மேலும், நம் கையால் செய்யும் போது மனசுக்கு ஒருவித சந்தோஷத்தை அளிக்கும். அதனை எவ்வாறு எளிதாக செய்யலாம் என்று விளக்கம் அளித்துள்ளார் சுதா செல்வக்குமார்.
தேவையானவை:
க்ளே - 1 பாக்கெட். (கிராஃப்ட் ஷாப் அல்லது ஹார்டுவேர் ஷாப்பில் கிடைக்கும்.), அக்ரிலிக் கலர் - பச்சை, மஞ்சள் மற்றும் விருப்பமான கலர், பெயின்ட் பிரஷ் - 2, ஒயிட் கம் - சிறிது (ஒட்டுவதற்கு), தேங்காய் எண்ணெய் அல்லது டால்கம் பவுடர் - சிறிது.
செய்முறை: ஒரு பக்கெட்டில் இரு வேறு நிறத்தில் க்ளே பாக்கெட் இருக்கும்.
அதை பிரித்து ஒன்றாக கலந்து பிசையவும். அதாவது, கையில் தேங்காய் எண்ணெய் அல்லது பவுடர் தடவிக் கொண்டு க்ளேவை பிசைந்தால் கையில் ஒட்டாமல் நன்றாக பிசைய வரும்.
பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி சப்பாத்தி உருட்டியால் சிறிது மொத்தமாக தேய்த்து வட்டமாக பரப்பி விடவும். (படம் பார்க்க)அதன் மேல் மாவிலை அல்லது மாவிலை வரைந்த அட்டை வைக்கவும். வெற்றிலை வடிவம் வேண்டும் என்றால் க்ளே மீது வெற்றிலை அல்லது வெற்றிலை வரைபடம் வைக்கவும். (படம் பார்க்க)நான் இரண்டு மாடலுமே உங்களுக்காக செய்து காட்டி உள்ளேன். க்ளே மேலே இலையோ, இலை வரைபடமோ வைத்த பகுதியை தவிர மற்ற இடத்தை (Extra பகுதியை) நீக்கி விடவும். அதாவது, கத்தியால் மாவிலை, வெற்றிலை வடிவ க்ளே பகுதியை மட்டும் வெட்டி எடுத்துக் கொள்ளவும். 2 நிமிடங்கள் அப்படியே விடவும்.
பிறகு அதன் மேல் கோடுகள் வரையவும். அதாவது, இலை நரம்பு மாதிரி மெலிதாக கத்தியால் அச்சு போடவும். (படம் பார்க்க)அதை அரைமணி நேரம் காயவிட்டு பிறகு பச்சை வண்ணம், சிறிது மஞ்சள் நிறம் இலைக்கு அடித்து காயவிடவும்.
வெற்றிலையாக இருந்தால் அதன் மீது க்ளேவில் கொட்டைப் பாக்கு மாதிரி உருண்டை செய்து ஊதுவர்த்தி சொருகும் படி அதில் ஓட்டைப் போட்டு வெற்றிலை மேல் வைத்து காயவைத்து பிரவுன் வண்ணம் தீட்டினால் அழகான வெற்றிலை, பாக்கு ஊதுவர்த்தி ஸ்டாண்டு ரெடி. வார்னிஷ் தேவையெனில் அடித்து அழகுபடுத்தலாம். பளபளப்பாக இருக்கும். (படம் பார்க்க)
மாவிலை என்றால் ஒரு பூ செய்து பூவின் நடுவில் ஊதுவர்த்தி சொருக ஓட்டை போட்டு காயவைத்து வண்ணம் தீட்டி அந்தப் பூவை மாவிலையில் வைத்து ஒட்டி அழகுபடுத்தலாம்.
சிறிய சிறிய திலகம் மாதிரி செய்து, ஒரு சிறிய உருண்டையை சுற்றி ஒட்டினால் பூ ரெடி. பூவிற்கு சிவப்பு, மஞ்சள் அல்லது ரோஸ் நிறம் அடித்து அலங்கரிக்கலாம். (படம் பார்க்க)
பூ செய்து விட்டு நடுவில் ஊதுவர்த்தி சொருகும் தக்கை விற்கிறது. அதை வைத்தும் அலங்கரித்து ஊதுவர்த்தி ஏற்றலாம்.பூ டிசைன் நம் கற்பனைத்திறன், விருப்பத்திற்கு ஏற்ப செய்து மகிழலாம்.
தொகுப்பு: சுதா செல்வக்குமார்