நன்றி குங்குமம் தோழி
பழமையான நாணயங்களுக்கு தனிப்பட்ட அடையாளங்கள் உண்டு. அவை நம் வரலாற்றை பிரதிபலிப்பவை. நாணயங்கள் சேகரிப்பதை பொழுதுபோக்கிற்காக தொடங்கி இலக்காக கொண்ட நாணயப் பிரியர்கள் உலகெங்கிலும் உள்ளனர். நாணயப் பிரியர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் விருந்தளிக்கும் வகையில் அமைத்திருக்கிறது சென்னை நாணயவியல் அமைப்பு சார்பாக நடத்தப்பட்ட தேசிய அளவிலான நாணயக் கண்காட்சி. கடந்த ஆகஸ்ட் 8, 9 மற்றும் 10 ஆகிய மூன்று தினங்களில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற நாணயக் கண்காட்சியின் சிறப்பம்சம் குறித்து விளக்குகிறார் சென்னை நாணயவியல் அமைப்பின் தலைவர் ‘சென்னை மணிகண்டன்.’
“இந்த ஆண்டு சென்னை நாணயவியல் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட 7வது தேசிய அளவிலான நாணயக் கண்காட்சி ‘செம்மொழி கண்காட்சி’ எனும் சிறப்பு தலைப்புடன் நடைபெற்றது. கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், இலக்கியங்கள், கோயில் கோபுரங்கள், கட்டுமானங்கள் போன்ற பல்வேறு கூறுகள் நம் வரலாற்றை அறியக்கூடிய பொக்கிஷங்களாக இருந்தாலும், ஒரு சிறிய உலோகத்திலான நாணயம் வரலாற்றின் மூலாதாரமாக விளங்குகிறது. ஆகச்சிறந்த வரலாற்றின் சான்றுகள் நாணயங்களே. அளவில் சிறியதாக இருக்கக்கூடிய உலோக நாணயங்களில் எழுத்துக்கள் காணப்படுவது சிறப்பு. அதுவும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு. சேர, சோழ, பாண்டிய, பல்லவன், மலையமான் போன்ற மன்னர்களின் சங்கக் காலத்தின் முதலே பொறிக்கப்பட்ட நாணயங்களில் ‘தமிழி’ எழுத்துக்கள் பொறிக்கப்பட்டும், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தபால் தலைகளும் இருக்கும்.
இது போன்ற தமிழ் எழுத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட மன்னர்களின் நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தஞ்சை நாயக்கர், மதுரை நாயக்கர், சேதுபதி மன்னர்கள் காலத்தின் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களும் இடம்பெற்றன. கலோனியல் காய்ன்ஸ் எனப்படுகின்ற ‘காலனி ஆதிக்க நாணயங்கள்’ நம் நாட்டில் வாணிப நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டன.
அவற்றில் நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி போன்ற தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது போன்று தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள் சிறப்பாக காட்சிப்படுத்தப்படுவதாலும், தொன்மையான மொழிகளில் தமிழ் தனித்துவம் பெற்றதாகவும் இருக்கிறது என்பதை கருதியும் இந்த நாணயக் கண்காட்சி ‘செம்மொழி கண்காட்சி’ என குறிப்பிடப்பட்டது” என்றவர் மேலும் பகிர்ந்தார்.
“இந்தியா முழுவதிலிருந்தும் மேலும் இலங்கை, இந்தோனேசியா, பங்களாதேஷ், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் நாணயங்களை பார்வையிட வந்திருந்தனர். நாணயங்கள் சேகரிப்பு என்பது பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி இது மனிதரை உற்சாகப்படுத்துகிறது. மனிதர்களின் அறிவை அகலப்படுத்தவும், உற்றுநோக்கும் திறனை அதிகரிக்கவும், ஒப்பிட்டு தன்மையை அதிகரிக்கவும் செய்கிறது. இன்றைய தலைமுறையில் வரலாற்றை படிக்கக்கூடிய மாணவர்கள் இதுபோன்று நாணயங்களை நேரில் பார்த்து அவற்றை தெரிந்துகொள்வதால், நாணயங்களை வரலாற்றுடன் நேரடியாக தொடர்புப்படுத்தி பார்க்கவும் உதவுகிறது. மேலும் நாணய சேகரிப்பு வரலாற்று பின்னணியை பாதுகாக்கப்படுவதாகவும் உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை, செய்தித்துறை சார்பாக நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் நாணயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நாணயங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வுகளும் நடைபெறும். இது போன்ற அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் பார்வையிட்டு அவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளோம். இந்தக் கண்காட்சியில் பல்வேறு நாணய சேகரிப்பாளர்கள் அவர்களின் அரிய சேகரிப்புகளான நாணயங்களையும், நியூசிலாந்து போன்ற வெளிநாட்டு நாணயங்களையும், பணத்தாள்களையும் கொண்டுவந்து இங்கு காட்சிப்படுத்தியிருந்தனர்.
மேலும் நாணயங்களின் சிறப்பு குறித்தும், நாணயங்களின் உண்மைத்தன்மையை அறியும் விதம் குறித்த விளக்கங்கள் சென்னை நாணயவியல் அமைப்பு சார்பாக பார்வையாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. பல வருடங்களாக நாணயங்களை சேகரிப்பவர்களும், பார்வையாளர்களும் ஆர்வத்துடன் செம்மொழி கண்காட்சியில் நாணயங்களை கண்டு மகிழ்ந்தனர்” என்ற சென்னை மணிகண்டனை தொடர்ந்து கண்காட்சியில் பங்கேற்ற நாணய சேகரிப்பாளர்கள் தங்கள் அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டனர்.
ராம் பிரசாத்: ‘‘2018ம் ஆண்டு முதல் நாணயங்களை சேகரித்து வருகிறேன். நான் வங்கியில் பணியாற்றும் போதிலிருந்தே நாணயங்கள் மீது ஆர்வம் இருந்ததால் அரிதான நாணயங்களை சேகரிக்க தொடங்கினேன். நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி போன்ற தலைவர்களை போற்றும்விதமாக வெளியிடப்படும் நாணயங்களை சேகரித்திருக்கிறேன். ப்ரூஃப் செட் நாணயங்கள் சேகரிப்பதிலும் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. இந்த நாணயங்கள் வெள்ளி, காப்பர் போன்ற உலோக கலவைகளால் அச்சடிக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு தஞ்சை பெரிய கோவிலை கௌரவிக்கும் விதமாக 1000 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. செம்மொழி கண்காட்சியில் இதை காட்சிப்படுத்தியிருந்தேன்.
மேலும் 50 ரூபாய், 75 ரூபாய், 500 ரூபாய் நாணயங்களும் சேகரித்து வைத்திருக்கிறேன். இது போன்ற நாணயங்கள் வரையறுக்கப்பட்ட அளவில் நாணய சேகரிப்பாளர்களுக்காக வெளியிடப்படும். இவை பெரும்பாலும் 35 கிராம் எடையுள்ள வெள்ளி நாணயமாக அதாவது, 50% வெள்ளி மற்றும் 50% காப்பர் அல்லது அலாய் போன்ற உலோகக்கலவையால் ஆனதாக இருக்கும். சுபாஷ் சந்திர போஸ், அம்பேத்கர் போன்ற தலைவர்களை பெருமைப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டிருக்கும் நாணயங்கள் என் சேகரிப்புகளில் உள்ளன. மேலும் பழைய 1 பைசா, 2 பைசா, 5 பைசா போன்றவையும் உள்ளன.
சமீபமாக ராஜேந்திர சோழனின் பெருமையை பறைசாற்றும் விதமாக கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கட்டுமான தொடக்கம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கடல்சார் பயணத்தின் 1000 ஆண்டுகள் நினைவை பிரதிபலிக்கும் வகையில் 1000 ரூபாய் மதிப்பிலான நினைவு நாணயத்தை பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டார். இந்த நாணயம் விரைவில் சந்தைக்கு வந்ததும் அதை சேகரிக்கவும் ஆர்வமாக உள்ளேன்.
நாணய சேகரிப்பு ஒரு சிறந்த பொழுதுபோக்கு மட்டுமின்றி நம் நாடு மற்றும் பிற நாடுகளின் வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எங்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் என அவற்றை காண்பிக்க முடியும். 5 பைசா, 10 பைசா பணத்தில் என்னெல்லாம் வாங்கினோம் என்றெல்லாம் அவர்களிடம் பகிரலாம். மட்டுமின்றி இப்போது பணப் பரிவர்த்தனைகள் எல்லாம் டிஜிட்டல் மையமாக மாறிவருவதால் இன்றைய தலைமுறையினர் நாணயங்களை பயன்படுத்துவதே அரிதாக மாறியிருக்கிறது. எனவே, நாணய சேகரிப்பு என்பது நம் வரலாற்றை பாதுகாக்கின்ற ஒரு தனித்துவமான செயல். இளம் தலைமுறையினர் நாணய சேகரிப்பில் கவனம் செலுத்தலாம். அறிவை வளர்த்துக்கொள்ளவும் பல்வேறு துறைகள் பற்றி தெரிந்து கொள்ளவும் இந்தப் பழக்கம் உதவும்” என்றார்.
தங்கவேல்: “சென்னையில் நடைபெறும் நாணயக் கண்காட்சிக்கு நான் கோவை, வடவள்ளி கிராமத்திலிருந்து வந்திருந்தேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே நாணயங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். என் தாத்தா, பாட்டி நிறைய பழமையான நாணயங்களை சேகரித்து வைத்திருந்தனர். அதனை தொடர்ந்து நானும் நாணய சேகரிப்பை தொடங்கினேன். பிரிட்டிஷ் காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பு புழக்கத்தில் இருந்த நாணயங்கள், நினைவு நாணயங்கள் என பல அரிதான நாணய சேகரிப்புகள் என்னிடம் உள்ளதால் இந்தியா முழுவதும் எங்கு கண்காட்சி நடைபெற்றாலும் நான் அதில் கலந்து கொள்வேன்.
மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, கியூபா, உகாண்டா, துருக்கி, ஜப்பான் உட்பட மொத்தம் 80 நாடுகளின் நாணயம் மற்றும் பணத்தாள்களை பொக்கிஷமாக சேகரித்து வைத்துள்ளேன். சிறுவயதிலிருந்தே ஆர்வம் இருந்ததால் நாணயக் கண்காட்சிக்கு போகும்போதெல்லாம் வெளிநாட்டு நாணயங்களை வாங்கி சேகரித்து வைப்பேன். நாணய சேகரிப்பு என்பது நம் நாட்டின் பண்பாடு, பொருளாதாரம், அரசியல் போன்றவற்றை அன்றி, பிற உலக நாடுகளை பற்றியும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பாகவும் உள்ளது’’ என்றார்.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
படங்கள்: சதீஷ்