Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சினிமா துறையில் பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

ரிமா தாஸ்

2017ம் ஆண்டில் வெளி யான இவரின் இரண்டாவது திரைப்படமான ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. சொந்தமாக ஒரு இசைக்குழுவை உருவாக்க வேண்டும் என்ற பெரும் கனவோடு, தன் முதல் கிட்டார் கருவியை வாங்க கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து வருகிறார் பத்து வயதான சிறுமி. ஆனால், எதிர்பாராதவிதமாக கிராமத்தில் ஏற்படும் பேரிடரின் விளைவுகளால் தன் முன்னுரிமையை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்படும் அந்த சிறுமியின் கதைதான் இது.

டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா மற்றும் உலகம் முழுவதும் 80 திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட வில்லேஜ் ராக்ஸ்டார் 2018ம் ஆண்டிற்கான ‘தேசிய விருதை’ பெற்றது. இதனை தொடர்ந்து 4 திரைப்படங்களை இயக்கிய நிலையில், இந்தப் படத்தின் 2ம் பாகம், ‘கிம் ஜிசோக்’ விருதினை பெற்றது. எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் என பன்முகத் திறமை கொண்ட இயக்குனராக ரிமா தாஸ் திகழ்கிறார்.

நடிகை ஆகவேண்டும் எனும் நோக்கத்துடன் அஸ்ஸாமிலிருந்து புறப்பட்டு மும்பை வந்த இவருக்கு இந்த புகழ் எதுவும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. “நான் என்னை முற்றிலும் வேறு ஒரு நபராக மாற்றிக்கொண்டேன். அதாவது, மேக்-அப் செய்வது, ஹீல்ஸ் போடுவது என என்னை நான் மாற்றிக் கொண்டேன்’’ எனும் இவர் ஆரம்பத்தில் தோற்றம் மற்றும் மொழித்திறன் பொருட்டு நிறைய சிரமங்களை சந்தித்துள்ளார்.

கேமராவை கையாளத் தொடங்கியபோதுதான் அவருடைய திறமை கேமராவுக்கு முன் வெளிப்படுத்துவதில் இல்லை, கேமராவுக்குப் பின் வெளிப்படுத்துவதில் ஒளிந்திருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறார். திரைப்படத்துறையில் பெண்களின் வளர்ச்சி மட்டுமின்றி அவர்கள் சந்திக்கும் சிரமங்கள் குறித்தும் ரிமா தாஸ் பகிர்ந்து கொள்கிறார்.“கிரண் ராவ், மேஹ்னா குல்சார், ஆலங்கிரிதா வஸ்தவா மற்றும் என்னைப்போன்ற பெண் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கேமராவுக்குப் பின் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதே ஒரு சிறப்பான உணர்வுதான். பெண்கள் சிறப்பாக செயல்பட்டு மற்ற பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள்.

எனினும் என்னுடைய பயணம் இதில் மாறுபட்டது. நான் அதிகமாக படங்களில் நடித்ததில்லை. தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில்லை. திரைப்படங்களை நானே தயாரித்து நானே இயக்கினேன். எனக்கான வேலைகளை நானே செய்தேன். பெரும்பாலும் யாரையும் சார்ந்திருக்கவில்லை. தனியாளாக இருந்து ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது பல சவால்களை சந்திக்க நேரிடும். பணம் மற்றும் நேரத்தை முதலீடு செய்கிறோம். சமீபத்தில் வெளியான வில்லேஜ் ராக்ஸ்டார் - 2 படத்தை உருவாக்க எனக்கு நான்கு ஆண்டுகள் தேவைப்பட்டன. ஒரு திரைப்படத்தை உருவாக்கியதும் மேலும் கற்றுக்கொள்ள விரும்பினேன். ஆர்வமும் அதிகரித்தது. வேறு எதுவும் கொடுக்காத சுதந்திரத்தை அப்போது நான் உணர்ந்தேன். நான் விரும்புவதை உருவாக்க எனக்கு சுதந்திரம் இருந்தது. இந்த சுதந்திரம் எனது தனிப்பட்ட போராட்டங்களினால் எனக்கு கிடைத்ததென்று நினைக்கிறேன்.

ஆண் இயக்குனர்கள் போல் பெண் இயக்குனர்களுக்கு சுதந்திரம் இருப்பதில்லை. நள்ளிரவில் நான் படப்பிடிப்பு சார்ந்த ஆராய்ச்சியிலோ அல்லது வேலைகளிலோ ஈடுபட வேண்டும் எனில் என் குடும்பத்தினர் ஒருவரையோ அல்லது என் குழுவில் உள்ள ஒருவரையோ சார்ந்திருக்க வேண்டியுள்ளது. தொலைதூர கிராமங்களிலும் மலைகளிலும் தனியாக கேமராவை தூக்கிக்கொண்டு செல்ல எனக்கு தைரியம் இல்லை. இன்னும் நிறைய காரணங்களும் இருக்கின்றன.

இந்த வகையில் ஆண்களின் ஆதரவை நாம் நாடுகிறோம். இதில் மாற்றம் செய்யமுடியாமல் அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் வருத்தமளிக்கிறது. என் வீட்டில் நான் ஒரே மகள். ஆற்றில் நீந்துவது, மரம் ஏறுவது என நண்பர்களுடன் சந்தோஷமாக இருந்தேன். ஆனால் என் தோழிகள் பருவமடைதலுக்குப் பிறகு விளையாடுவதை நிறுத்திவிட்டார்கள். தடைகள் இருந்தாலும் நான் எனக்குப் பிடித்ததை ெசய்தேன்.

பெண்ணியவாதி என்றெல்லாம் இல்லை. எனக்கு விருப்பமானதை செய்ய எனக்கு உரிமை இருக்கிறது. ஒரு மனிதநேயவாதி என வைத்துக்கொள்ளலாம். திரைப்படங்களில் கூட பெண்கள் சார்ந்த கருத்தூன்றிய கண்ணோட்டத்தை வைக்க வேண்டும். அது நேர்மறையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. திரைத்துறையில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவது பற்றி சிந்திக்க வேண்டும். நான் நடிகையாக வேண்டும் என்றுதான் இத்துறைக்கு வந்தேன். அப்போது ஒருவித பயம் என்னைப் பற்றிக் கொண்டிருந்தது. பழக்கமில்லாதவரை சந்திக்க வேண்டும் என்றாலே ஒரு பெண்ணிற்கு மனதில் பயம் இருக்கும்.

அப்போது எதிர்மறை எண்ணங்கள்தான் முதலில் தோன்றும். இவை நம் வளர்ச்சியை தடுக்கலாம். எனவே சினிமாவில் பெண்களுக்கு நேர்மறையான பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். தொந்தரவு இல்லாமல் வேலையில் கவனம் செலுத்த சுதந்திரம் வேண்டும். வேலையை இழந்துவிடுவோமோ என்ற பயம் இருக்கக்கூடாது’’ என்றவர், தன் திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்கள் யதார்த்தமாக அமைவதாக கூறினார்.

“நான் இதை கட்டாயமாக செய்வதில்லை. இயல்பாகவே அது வருகிறது. ‘வில்லேஜ் ராக்ஸ்டார் 2’ படத்தில் ஒரு வசனம் உள்ளது. ‘பெண்கள்தான் பெண்களுக்கு மிகப்பெரிய எதிரிகள்’... இதை நான் நம்புகிறேனா என என்னிடம் சிலர் கேள்வி கேட்டனர். அது விஷயமல்ல. உண்மையில் பெண்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைதான் நான் படத்தில் காட்டியிருக்கிறேன். ஒரு கதையை வழங்கும் போது நான் மனிதனாக இருக்கவே விரும்புகிறேன்” என்றார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்