Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குழந்தைகள்தான் என் டார்கெட்!

நன்றி குங்குமம் தோழி

இயற்கை நிறைய வளங்களை அள்ளித் தந்துள்ளது. ஆனால், சில காலங்களாக நாம் அதை புறக்கணித்து வந்தோம். காலம் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, மீண்டும் இயற்ைக முறையில் வாழ நமக்கு வழிகாட்டி வருகிறது. குறிப்பாக இளைய தலைமுறையினர் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு முதல் அனைத்து விஷயத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதனை புரிந்துகொண்டு குழந்தைகளின் நலன் கருதி பல பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கோவையை சேர்ந்த பிரியதர்ஷினி கிருஷ்ணன்.

ஐ.டியில் வேலை பார்த்தவர் ‘ரூட் அண்ட் சாயில்’ என்ற பெயரில் குழந்தைகளுக்கான சருமப் பொருட்களை இயற்கை முறையில் தயாரித்து, முழுநேர தொழில் முனைவோராக செயல்பட்டு வருகிறார்.‘‘நான் பிறந்த ஊர் சத்தியமங்கலம். என் கணவரின் ஊர் கோவை என்பதால் நாங்க இப்ப அங்க செட்டிலாயிட்டோம்.

எம்.டெக் படிச்சிட்டு நான் ஐ.டியில் ேவலை பார்த்து வந்தேன். என் கணவருக்கு விளம்பரத் துறையில் வேலை என்பதால், இருவரும் திருமணத்திற்குப் பிறகு சென்னையில்தான் வசித்து வந்தோம். திருமணமாகி நான்கு வருடம் கழித்து நான் கருவுற்றதால், நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு நாங்க கோவைக்கே சென்றுவிட்டோம். அப்போது அங்கு வெபினார் நடைபெற்றது. நானும் அதில் கலந்து கொண்டேன்.

சொந்தமாக தொழில் செய்வது முதல் இயற்கை முறையில் பிரசவிப்பது வரை அனைத்தும் பேசினாங்க. நான் கருவுற்று இருந்ததால், இயற்கை முறையில் பிரசவிப்பது என்னை மிகவும் ஈர்த்தது. இன்று பெரும்பாலோர் சின்ன தலைவலி என்றாலும் மாத்திரை எடுத்துக் கொள்கிறார்கள். இயற்கை சார்ந்த விஷயங்கள் மேல் எனக்கு தனி ஈடுபாடு இருந்தது’’ என்றவர் இயற்கை முறைப்படி தன் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

‘‘குழந்தை பிறக்கும் நேரம் வந்ததும், மருத்துவமனைக்கு செல்வோம். அங்கு மருத்துவர்கள் குழந்தை பிறக்க செய்வார்கள் என்றுதான் நான் நினைத்திருந்தேன். ஆனால், அங்கு இவர்கள் பேசியதை

கேட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த முறையில் என் குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்பினேன். கேரளாவில் மிட்வைப் கான்செப்ட்டில் குழந்தையை பெற்றுக்கொண்டேன். அந்தக்காலத்தில் வீட்டில் ஆயம்மா முன்னிலையில் பிரசவம் நடக்கும். ஆயம்மாவைதான் மிட்வைஜப் என்று சொல்வார்கள். ஆனால், இங்கு பிரசவம் பார்க்க தனிப்பட்ட பயிற்சி பெற்றிருக்கிறார்கள்.

பிரசவம் ஸ்க்வாட், தண்ணீருக்குள் அல்லது எப்போதும் நடக்கும் சுகப்பிரசவ முறை என நமக்கு வசதியான முறையில் குழந்தையை பெற்றுக்ெகாள்ளலாம். பிரசவம் நடக்கும் போது உடன் மகப்பேறு மருத்துவரும் இருப்பார். மருத்துவமனைக்கான அனைத்து வசதிகளும் இருப்பதால், எமர்ஜென்சி என்றால் அறுவை சிகிச்சை மூலமும் குழந்தையை பிரசவிப்பார்கள். முழுக்க முழுக்க இயற்கை முறையில் செயல்படும் மெட்டர்னிட்டி மருத்துவமனை. என் பிரசவத்திற்கு பேரன்டிங் மேல் ஒரு பெரிய இம்பாக்ட் ஏற்பட்டது. குழந்தையை இயற்கை முறையில் வளர்க்க தீர்மானித்தேன். அதற்காக ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்தேன். நான் அவர்களுக்காக செய்தது தான் ‘ரூட் அண்ட் சாயி’லாக மாறியது’’ என்றவர், தொழில் துவங்கியதன் பாதையைப் பற்றி விவரித்தார்.

‘‘என் அம்மா, அத்தை இருவரும் குழந்தையை பார்த்துக் கொண்டார்கள். ஆனால், அவர்கள் இருவருக்கும் குழந்தைக்கு வீட்டில் செய்யக்கூடிய கை வைத்தியம் தெரியாது. நான் பிறந்த போது என் பாட்டிதான் எனக்கு அனைத்தும் செய்தாங்க என்பதால் அம்மாவிற்கு அது குறித்து பெரிதாக தெரியவில்லை. சில சமயம் குழந்தை வயிற்றுவலின்னு அழும்… அப்போது நானே கைவைத்தியம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு செய்வேன். சின்னச் சின்ன விஷயத்திற்கு குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு போகணுமா என்பதுதான் என் கேள்வியாக இருந்தது. அப்போதுதான் என்னைப்போல் எத்தனை தாய்மார்கள் இன்று குழந்தையினை தனியாக வளர்க்கிறார்கள். எனக்கு தெரிந்ததை அவர்களுக்கும் கொடுக்க விரும்பினேன். அதற்கான தேடலில் ஈடுபட்ட போது தான் புரிந்தது நாம் இயற்கையை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்று.

என் பாட்டி ஆடாதொடுஇலை, நொச்சி இலை பயன்படுத்தியதாக அம்மா சொல்லி இருக்காங்க. அது எதற்காக பயன்படுத்தினாங்கன்னு தெரியல. ஆனால், கண்டிப்பா ஏதாவது ஒரு மருத்துவ பின்னணி இருக்கும் என்று தெரிந்தது. அந்தத் தேடலில் நான் முதன் முதலில் தயாரித்தது டயப்பர் ேரஷஸுக்கான கிரீம். இன்று டயப்பர் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. என்னதான் இயற்கை சார்ந்த டயப்பர்கள் வந்தாலும் குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவானது என்பதால், ரேஷஸ் ஏற்படும். இதற்கு சிறந்த மருந்து தேங்காய் எண்ணெய். அதைக் கொண்டு கிரீம் ஒன்றை தயாரித்தேன். தேங்காய் எண்ணெயை தடவினால் பிசுபிசுப்பாக இருக்கும்.

அதையே கிரீமாக கொடுக்கும் போது பிசுபிசுப்பு இருக்காது, சருமத்தையும் பாதுகாக்கும். எங்களுடைய இந்தக் கிரீமில் 80% தேங்காய் எண்ணெய்தான் இருக்கும். என் கழுத்தில் படர்தாமரை மாதிரி இருக்கும். என் பாட்டி தேங்காய் பாலில் இருந்து எண்ணெய் எடுத்து அதை தடவ சொன்னாங்க. இரண்டே நாளில் நல்ல ரிசல்ட் தெரிஞ்சது. சொல்லப்போனால் நம் முன்னோர்கள் பயன்படுத்தியதைதான் நாங்க மார்டன் வடிவில் அம்மாக்கள் எளிதாக பயன்படுத்தும் படி அமைத்திருக்கிறோம். அந்த ஒரு கிரீமில் ஆரம்பித்து தற்போது 50க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்’’ என்றவர் அதற்காக சிறப்பு பயிற்சியினை மேற்கொண்டுள்ளார்.

‘‘குழந்தைகளுக்கான பொருட்கள் தயாரிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக அதுபற்றி தெரிந்திருக்கணும் என்பதால் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டேன். ஒரு பொருளுக்கு தேவையான ஃபார்முலேஷன் கொடுத்தால் அதை தயாரித்து தருவார்கள். ஆனால், எனக்கு அதில் விருப்பமில்லை. அதை நானே தயாரிக்க ஆரம்பித்தேன். நிறைய டிரையல் அண்ட் எரருக்கு பிறகுதான் நான் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைத்தது. காரணம், குழந்தைகளுக்கு கொடுக்கும் போது, அதில் நிறைய பொருட்களை நான் சேர்க்க விரும்பவில்லை. குறிப்பாக ரசாயனங்களை முற்றிலும் தவிர்த்தேன். இயற்கை முறையில் ஒன்று இரண்டு பொருட்கள் கொண்டே அவர்களின் பிரச்னைக்கான தீர்வினை காணலாம். அதைத்தான் நான் செய்து வருகிறேன்’’ என்றவர் தான் தயாரிக்கும் பொருட்கள் குறித்து விவரித்தார்.

‘‘முதலில் நான் தயாரித்தது ரேஷ் கிரீம். அதனைத் தொடர்ந்து தலைமுடிக்கான எண்ணெய், டம்மி ரோலான், சளிக்கான ரோலான், பாலிப் பிரச்னைக்கான மருந்து, சோப், நலங்கு மாவு, மாய்சரைசிங் லோஷன், பாதாம் மற்றும் தேங்காய் மசாஜ் எண்ணெய், பாடி வாஷ், கொசுக்கான ரெப்பெல்லன்ட், சன்ஸ்கிரீன் லோஷன், குங்குமாதி மசாஜ் எண்ணெய் என குழந்தைகளுக்கான அனைத்து சருமம் சார்ந்த பொருட்கள் எங்களிடம் உள்ளது.

என்னுடைய அப்பா ெமாத்த விலையில் துணி பிசினஸ் செய்து வந்தார். அதனால் ஓரளவுக்கு பிசினஸ் பற்றி தெரியும் என்றாலும் அதனை மார்க்கெட்டிங் செய்வது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை பெறுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. முதலில் நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு கொடுத்தோம். அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தோம். வாய் வார்த்தையாகவும், மற்றவர்கள் பயன்படுத்தி பார்த்து நம்பிக்கை ஏற்பட்ட பிறகுதான் வாடிக்கையாளர்கள் வட்டம் அதிகரித்தது.

இப்போது என்னுடைய பிராண்டிற்கு தனிப்பட்ட அடையாளம் கிடைத்திருக்கிறது. இன்று இயற்கை சார்ந்த பொருட்கள் பல வந்துவிட்டது. வாடிக்கையாளர்கள் பலவற்றை டிரை செய்து பார்த்து அவர்களுக்கு எது சரியாக உள்ளதோ அதைத்தான் மீண்டும் வாங்குவார்கள். ஒரு வாடிக்கையாளர் திரும்ப என் பொருட்களை வாங்க வருகிறார் என்றால் அதைப் பிடித்ததால்தான் வருகிறார். அதற்கு முக்கிய காரணம் பொருட்களின் தரம். எங்களின் பெரும்பாலான பொருட்களில் தேங்காய் எண்ணெய் வாசனைதான் வரும். அனைத்தும் எங்களின் சொந்த தயாரிப்பு என்பதால், அதற்கான தனிப்பட்ட யூனிட் அமைத்திருக்கிறோம். கோவையில் இரண்டு தயாரிப்பு யூனிட்கள் இயங்கி வருகிறது.

நான் இந்த பிசினஸ் ஆரம்பிச்ச போது, ஸ்டார்டப் போன்ற நிறுவனங்கள் துளிர் விடுகின்ற நேரம். எங்க வீட்டில் நான் என்ன செய்றேன்னு அப்போது புரியல. நல்லா படிச்சிட்டு அதற்கான வேலைக்கு போகாம... இது என்ன எண்ணெய் காய்ச்சிட்டு இருக்கேன்னுதான் கேட்டாங்க. ஆனால், தரமாக கொடுத்தா கண்டிப்பா சக்சஸ் செய்ய முடியும் என்பது என்னுடைய அனுபவத்தால் நான் உணர்ந்தது. இப்போது ஆன்லைனில்தான் விற்பனை செய்து வருகிறோம்.

அதனைத் தொடர்ந்து ஒரு கடை ஆரம்பித்து அதில் விற்பனை செய்ய இருக்கிறோம். குறிப்பாக மெட்ரோ நகரங்களில் கிளைகளை திறக்கணும். அதன் முதல் கட்ட வேலை கோவையில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் பல குழந்தைகளுக்கு எங்களின் பொருட்களை கொண்டு சேர்க்கணும். இதுவரை சருமம் சார்ந்த பொருட்களைத் தொடர்ந்து குழந்தைகளின் உணவுகளிலும் கவனம் செலுத்த இருக்கிறோம். ரூ.5000 முதலீடு செய்துதான் இந்த பிசினசை ஆரம்பித்தேன். இப்ேபாது முதலீட்டை விட பல மடங்கு அதிகமாக சம்பாதிக்கிறேன். அதற்கு முக்கிய காரணம் என் குடும்பம். அவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்ததால்தான் என்னால் இந்த வளர்ச்சியினை அடைய முடிந்தது’’ என்றார் பிரியதர்ஷினி.

தொகுப்பு: ஷம்ரிதி