Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செட்டிநாட்டு உணவுகளில் அசத்தும் தம்பதியினர்!

நன்றி குங்குமம் தோழி

செட்டிநாட்டு உணவுகள்... அதில் பயன்படுத்தப்படும் தனிச்சுவையான மசாலாக்கள் மற்றும் கார வகைகளுக்கு பிரபலம். தமிழ்நாடு முழுவதுமே செட்டிநாட்டு உணவுகளுக்கென்று தனித்தனியாக பல உணவகங்கள் இருக்கிறது. பதமாக வேக வைத்த இறைச்சியும், அதில் அளவாக பயன்படுத்தப்படும் மசாலா என செட்டிநாட்டு உணவின் சுவையே தனிதான். இந்த வகை உணவுகளுக்கு என்று சென்னையில் ஒரு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. வெளியூர்களில் இருந்து சென்னையில் தங்கி வேலை பார்ப்பவர்கள் நல்ல சுவையில் உணவினை சுவைக்க வேண்டும் என்றால் அவர்களின் சாய்ஸ் செட்டிநாட்டு உணவு கடைகள்தான். உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் நம்ம செட்டிநாட்டு ஸ்டைல் உணவுதான் என்று நம்மிடம் பேசத்துவங்கினார் சென்னை, திருவான்மியூரில் உள்ள ‘முத்துலட்சுமி மெஸ்ஸின்’ உரிமையாளர் காளீஸ்வரி.

‘‘எனக்கு சொந்த ஊர் அறந்தாங்கி. பத்தாவது வரைக்கும் படிச்சிருக்கேன். திருமணத்திற்குப் பிறகுதான் என் வாழ்க்கையே மாறியதுன்னு சொல்லலாம். நமக்குள் என்ன திறமை மறைந்திருக்கிறது என்று தெரியாது. ஆனால் அதனை நாம் இறங்கி வேலையில் ஈடுபடும் போதுதான் நம்மாளும் அதை சாதிக்க முடியும் என்று தெரியவரும். அப்படியான வாழ்க்கைதான் எனக்கு அமைந்தது. என் கணவர்தான் இந்த உணவகத்தின் அச்சாணி. சொந்த ஊரிலிருந்து வேலைக்காக சென்னை வந்தார். இங்கு வந்ததும் வேலையும் கிடைக்கவில்லை. கையில் பணமும் இல்லை. எங்கு செல்வதுன்னு தெரியல. மெரினா பீச்சில் தான் படுத்துறங்கி இருக்கார். வந்த நாள் முதல் கையில் காசில்லாமல் பசியால் வாடியுள்ளார்.

மெரினாவில் ஏதாவது வேலை கிடைக்குமா என்று தேடியவர், அங்கிருந்த வண்டிக் கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். மூன்று வேளை சாப்பாட்டுடன் கூலியும் கொடுத்திருக்கிறார். அந்தக் கடைக்கு சாப்பிட ஒருவர் வந்துள்ளார். அவர் இவரின் வேலைத் திறமையைப் பார்த்து, தன்னுடைய உணவகத்திற்கு வேலை செய்ய அழைத்து சென்றுள்ளார். அங்குதான் என் கணவர் முழுமையாக சமையலை கற்றுக்கொண்டார்.

இவர் சென்னையில் வேலை பார்ப்பதைப் பார்த்த இவரின் அப்பா மீண்டும் அவரை ஊருக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல், என் கணவர் மீண்டும் சென்னைக்கே வந்துவிட்டார். இங்கு அடையாரில் ஒரு சைவ உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு சாம்பார், சட்னி, பொரியல், கூட்டு, ரசம், வடை என்று அனைத்தையும் செய்ய கற்றுக்கொண்டார். சாப்பாடு, தங்குவதற்கு இடம், மாதச்சம்பளம் என்று கொடுத்தார்கள்’’ என்றவர் மீண்டும் தொடர்ந்தார்.

‘‘அவர் உணவகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் எங்களுக்கு திருமணமானது. பல காலம் வேலை பார்த்த அனுபவம் இருந்ததால், அவருக்கு சொந்தமாக சாப்பாட்டுக் கடை வைக்க வேண்டும் என ஆர்வம் இருந்தது. நானும் நன்றாக சமைப்பேன். அவர் எனக்கு நிறைய உணவுகள் மற்றும் சின்னச் சின்ன டிப்ஸ்களும் ெசால்வார். இருவருக்கும் சமையல் மேல் ஆர்வம் இருந்ததால் கண்டிப்பாக எங்களால் சமையல் தொழிலை சக்சஸாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இட்லி, தோசை, கொத்து பரோட்டா, மட்டன் சுக்கா, போட்டி, ஈரல், சிக்கன் ஃப்ரை என்று அனைத்து உணவுகளையும் செய்யக் கற்றுக் கொண்டேன்.

பல டிரையலுக்குப் பிறகு அந்த உணவுகளை சுவையாக செய்ய தெரிந்து கொண்டேன். அதன் பிறகு நானும் என் கணவரும் இணைந்து திருவான்மியூர் ரயில் நிலையத்திற்கு அருகில் வண்டிக்கடை ஒன்றை தொடங்கினோம். அதில் காலை மற்றும் மாலை என்று இரண்டு வேலையும் டிபன் மட்டுமே கொடுத்து வந்தோம். இரண்டு வருடங்கள் உணவகம் சிறப்பாக நடந்து வந்தது. அந்த சமயத்தில் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று கூறி உணவகத்தை அகற்றி சொல்லி சொன்னார்கள். அதனால் அந்தக் கடையை நாங்க மூடவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் வேறு வேலைக்கு போக ஆரம்பித்தோம்’’ என்றவர் உணவகம் ஆரம்பித்தது குறித்து விவரித்தார்.

‘‘கடையை மூடிய பிறகு என் கணவர் ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்தார். அந்த உணவகத்தின் உரிமையாளர், வேறு இடத்தில் உணவகம் துவங்க இருப்பதால், இந்தக் கடையை மூட இருப்பதாக தெரிவித்தார். அப்போது என் கணவர் அவரிடம் கடையை மூட வேண்டாம், அதனை நானே எடுத்து நடத்துகிறேன் என்று கூறியுள்ளார். அப்படித்தான் நாங்க இந்தக் கடையை வாங்கி செயல்படுத்த ஆரம்பித்தோம். என் கணவருக்கு அவருடைய அக்கா மற்றும் அப்பாதான் ரொம்ப பிடிக்கும். தாயின் அடுத்த ஸ்தானம் என்பதால், இருவரின் பெயரை இணைத்து ‘முத்துலட்சுமி’ என்று வைத்துவிட்டோம். நாங்கள் உணவகம் தொடங்கி 18 வருடமாகிறது.

ஆரம்பத்தில் காலை மற்றும் மாலை நேர உணவுகள் மட்டுமே கொடுத்து வந்தோம். தற்போது மதிய உணவும் வழங்குகிறோம். இங்கு சிக்கன், நண்டு, கனவா, முட்டை, மட்டன், மீன் என்று அனைத்து உணவும் செட்டிநாட்டு ஸ்டைலில் கொடுக்கிறோம். எங்களின் மெஸ் டைட்டல் பார்க் அருகே இருப்பதால், அங்கு வேலை செய்யும் பலரும் தங்களின் மதிய உணவினை எங்க மெஸ்சில்தான் சாப்பிடுவார்கள். இவர்கள் மட்டுமில்லாமல் கூலி வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், அரசு வேலைக்கு படித்து வரும் மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் எங்களது உணவகத்தைத் தேடி வருகின்றனர்.

இரவில் இட்லி, தோசை மட்டுமில்லாமல் வாழை இலை பரோட்டா, மட்டன் கொத்து பரோட்டா, சிக்கன் கொத்து பரோட்டா, இறால் கொத்து பரோட்டா, கனவா கொத்து பரோட்டா, சைவ வாழை இலை கிளி பரோட்டா, முட்டை கொத்து பரோட்டா, சிக்கன் வீச்சு பரோட்டா, காயின் பரோட்டா, மட்டன் லாப்பா, முட்டை லாப்பா, சிக்கன் லாப்பா, இறால் லாப்பானும் கொடுத்துட்டு வருகிறோம். சிலோன் ஸ்டைல் லாப்பா எங்களது உணவகத்தில் ரொம்ப ஃபேமஸ். மைதா மாவில் மசாலாவை ஸ்டப் செய்து மிதமான தீயில் தோசைக்கல்லில் சுட்டுத் தருவோம்.

மிதமான தீயில் சமைக்கும் போது பரோட்டாவிற்குள் இருக்கும் மசாலா பரோட்டா முழுதும் பரவி சாப்பிடும் போது மொறுமொறுவென்று சுவையாக இருக்கும். இதனை இலையில் பிய்த்துப் போட்டு சால்னாவுடன் சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவைக்கு ஈடு இணையே கிடையாது. லாப்பாவில் சிக்கன், மட்டன், இறால் என்று வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொடுக்கிறோம். அதேபோல் சால்னாவிலும் சிக்கன், மட்டன் மற்றும் சைவ குருமாவும் உள்ளது’’ என்றவர், இதனைத் தொடர்ந்து பிரியாணி கடை ஒன்றை திறக்க இருப்பதாக தெரிவித்தார் காளீஸ்வரி.

தொகுப்பு: மா.வினோத்குமார்