Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் சென்னை கால்பந்து லீக்!

நன்றி குங்குமம் தோழி

கல்வி நிலையானது மட்டுமில்லை... நிரந்தரமானது. ஒருவர் கல்வியில் நன்கு தேர்ச்சிப் பெற்றிருந்தால், அவர்களால் தங்களின் வாழ்க்கையை திறம் பட வாழ முடியும். கல்வியுடன் விளையாட்டும் சேர்ந்திருந்தால்... அந்த மாணவனால் தன்னம்பிக்கையுடன் செயல்பட முடியும். விளையாட்டின் மேல் ஆர்வம் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு கால்பந்தாட்டம் பயிற்சி அளிப்பது மட்டுமில்லாமல், அவர்களுக்கென தனிப்பட்ட போட்டிகளையும் நடத்தி, அவர்களுக்கு மேலும் ஊக்கம் அளித்து வருகிறது லேட்டென்ட் வியூ நிறுவனம். இந்த நிறுவனத்தின் CSR தலைவராக செயல்பட்டு வரும் பூர்ணிமா, மாணவர்களை தேர்வு செய்வது மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சி குறித்து பகிர்ந்து கொண்டார்.

‘‘ஒவ்வொரு தனியார் நிறுவனங்களும் CSR என்ற திட்டத்தினை கடைபிடித்து வருவது வழக்கம். சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். அந்த வகையில் இந்த திட்டத்தின் தலைவராக நான் செயல்பட்டு வருகிறேன். மேலும், எங்க நிறுவனம் சார்பாக மக்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு ஏதாவது ஒரு முறையில் உதவ விரும்பினோம். அதற்காக ஒரு குழு அமைத்து மாணவர்களுக்கு என்னென்ன உதவிகளை செய்யலாம் என்று குறிப்பெடுத்தோம். பல திட்டங்களை குழுவினர்கள் வகுத்தனர். அதில் மிகவும் முக்கியமானது கல்வி என்று தெரிய வந்தது. அதனுடன் விளையாட்டினை நாங்க சேர்க்க விரும்பினோம். அப்படித்தான் சென்னை கால்பந்து லீக் ஆரம்பமானது’’ என்றவர், கால்பந்து லீக்கின் செயல்பாட்டினை பற்றி விவரித்தார்.

‘‘பொதுவாக மாணவர்களுக்கு கல்வி சார்ந்த உதவிகளைதான் பலர் செய்து வருகிறார்கள். அப்படி இல்லாமல் மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் அவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு நல்ல வழியினை அமைத்து தர விரும்பினோம். நாங்க முழுக்க முழுக்க அரசுப் பள்ளி மாணவர்களை மட்டும்தான் இந்த திட்டத்திற்காக தேர்வு செய்தோம். முதல் வருடம் நாங்க 50 அரசுப் பள்ளிகளுக்கு நேரில் சென்று எங்களின் திட்டம் குறித்து விவரித்தோம்.

அதில் விருப்பம் உள்ள மாணவ, மாணவியர்களை கொண்டு அந்தந்த பள்ளி சார்பாக டீம் ஒன்றை அமைத்தோம். அவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சியும் அளித்தோம். அது பெரிய சக்சஸாச்சு. பள்ளியின் உடல் பயிற்சி மற்றும் தலைமை ஆசிரியர் அனைவரும் தங்களின் பள்ளி மாணவர்களுக்கு இதன் மூலம் ஒரு நல்ல எதிர்காலம் கிடைப்பது குறித்து சந்தோஷப்பட்டார்கள். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நாங்க போட்டியினை நடத்த ஆரம்பித்தோம். இந்த வருடம் எங்களுக்கு ஐந்தாவது வருடம்.

எங்களின் முதல் வருட சக்சஸுக்குப் பிறகு நாங்க வருடா வருடம் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களின் குழுக்களை அமைக்க ஆரம்பித்தோம். அவ்வாறு தேர்வு செய்யப்படும் பள்ளிகளில் எங்களுக்கு தேவையான சில விஷயங்கள் இருக்க வேண்டும். ஒன்று அந்தப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அவசியம். அடுத்து இந்த திட்டத்திற்கு பள்ளியின் உடல் பயிற்சி மற்றும் தலைமை ஆசிரியர்களின் ஒத்துழைப்பு முக்கியம். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை முதல் கட்ட ஆய்வு செய்வோம். அதாவது, அவர்களுக்கு விளையாட போதிய திறன், சக்தி மற்றும் உறுதி உள்ளதா என்று பார்த்து அப்படிப்பட்ட மாணவர்களை தேர்வு செய்வோம்.

அதன் பிறகு அவர்களுக்கு சிறப்பு பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி மட்டுமில்லாமல் அவர்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள உணவுகள், உடைகள் குறிப்பாக பெண்கள் அணியக்கூடிய சவுகரியமான உடைகள், ஷூக்கள் என அனைத்தும் நாங்க கொடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்தோம். அதில் மிகவும் திறம்பட விளையாடுபவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி அளிக்கப்படும். பிறகு மாணவர்களின் டீம்களுக்கு இடையே கால்பந்தாட்ட போட்டி நடைபெறும். அதனை ஆய்வு செய்ய சென்னையில் உள்ள சிறந்த கால்பந்தாட்ட கிளப்பில் இருந்து பயிற்சியாளர்களை வரவழைத்தோம். அவர்கள் போட்டியில் திறமையாக விளையாடிய மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி அளிப்பார்கள்.

இந்தப் பயிற்சி நாட்களில் மாணவர்கள் மற்ற பள்ளி மாணவர்களுடன் மட்டுமில்லாமல், டெல்லி, பெங்களூர் போன்ற மற்ற மாநகரத்தில் உள்ள குழுவுடன் விளையாட வாய்ப்பினையும் ஏற்படுத்தி தருகிறோம். அதன் பிறகு அவங்க அரசு சார்ந்த கால்பந்து கிளப்பில் விளையாட ஆரம்பிப்பார்கள். படிப்பு முடித்தவர்களுக்கு அரசு துறையில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சிலர் முழுக்க முழுக்க விளையாட்டில் கவனம் செலுத்தி அவர்கள் விளையாட்டு வீரர்களாகவோ அல்லது பயிற்சியாளர் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். இப்போது எங்களின் லீக் பற்றி பள்ளிகள் கேள்விப்பட்டு அவர்களே தங்கள் பள்ளியில் ஒரு கால்பந்து குழுவினை அமைத்து அதனை எங்களின் கால்பந்து லீக்குடன் இணைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்’’ என்றவருக்கு வரும் காலத்தில் மேலும் பல பள்ளிகளை இந்த லீக்கில் இணைக்க வேண்டும் என்பதுதான் எதிர்கால திட்டமாக தெரிவித்தார்.

‘‘எங்களால் அனைத்துப் பள்ளிகளுக்கும் நேரடியாக சென்று பயிற்சி அளிக்க முடியாது. ஆனால், இந்த லீக்கில் இணைய விரும்பும் பள்ளிகளுக்கு நாங்க முழு ஆதரவு கொடுக்கிறோம். அதில் இரண்டு மாணவிகள் திண்டுக்கல்லில் சென்று விளையாட, அவர்களின் திறமையை பார்த்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அவர்களின் படிப்பிற்கான செலவினை ஏற்றுக் கொண்டுள்ளது. இவர்களை போல் பல மாணவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தினை ஏற்படுத்தி தர விரும்புகிறோம். எங்களின் அடுத்தக்கட்ட திட்டம் நிறைய மாணவர்களை இதில் விளையாட வைக்க வேண்டும். ேமலும், பல விளையாட்டு கிளப்புகளை இணைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் ஏற்படுத்தி தர வேண்டும். இது அவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தினை கொடுக்கும்’’ என்றார் பூர்ணிமா.

தொகுப்பு: ஷம்ரிதி