Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாற்றம் தனி மனிதரிலிருந்து சமூகத்திற்கு பரிணமிக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தால், 7,683 கிராமங்களில் வசிக்கும் கைம்பெண்களுக்கு எதிரான பாகுபாடான தீய வழக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன. கணவனை இழந்த பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் அவர்களை வெள்ளை புடவை கட்ட வைத்து, வாழ்நாள் முழுக்க பொதுவெளிக்கு வராமல் மறுமணம் எதுவும் செய்யாமல் இருக்க சொல்லும் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கோல்காபூர் மாவட்டத்தில் உள்ள ஹெர்வத் கிராம பஞ்சாயத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கணவன் இறந்தால் பெண்களின் தாலி, மெட்டி போன்றவற்றை அகற்றுவது, குங்குமத்தை நீக்குவது, வளையல்களை உடைப்பது போன்ற சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த சமூக சீர்திருத்தத்தை பல கிராமங்கள் பின்பற்றத் தொடங்கின. கைம்பெண்களுக்கு எதிரான தீய வழக்கங்களை ஒழிக்கும் நடவடிக்கையை மகாத்மா புலே சமாஜ் சேவா மண்டல் என்ற அமைப்பின் நிறுவனர் பிரமோத் ஜின்ஜாடே என்பவர் செய்து வந்தார். மகாராஷ்டிராவில் உள்ள கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து கைம்பெண்கள் இந்த சடங்குகளாலும், வழக்கங்களாலும் எந்தளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரம் மட்டுமில்லாமல் செயலிலும் அமைப்பினர் இறங்கியுள்ளனர். முதலில் ஒரு கிராமத்தில் இருக்கக்கூடிய பெண்களை அழைத்து அவர்களை பொது வெளிக்கு அழைத்து வருவது, நிகழ்வுகளில் கலந்து கொள்ள செய்வது போன்றவற்றை செய்திருக்கிறார்கள். இதை ஒவ்வொரு கிராமமாக கொண்டு சென்று மகாராஷ்டிராவில் உள்ள ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பஞ்சாயத்துகள் கூடி கணவனை இழந்த பெண்கள் மீதான சடங்குகளை ஒழிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் 7,683 கிராமங்களில், கைம்பெண்களுக்கு எதிரான தீய வழக்கங்கள் ஒழிக்கப்பட்டு, பஞ்சாயத்துகளில் தீர்மானமாகவே கொண்டு வந்துள்ளனர்.

அதன்படி மங்கள நிகழ்ச்சிகளில் பங்கேற்க கைம்பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மறுமணம் செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்ட சில கைம்பெண்கள் மறுமணம் செய்துள்ளனர். கணவனை இழந்த பெண்ணுக்கு தாலி, மெட்டி, பொட்டு அகற்றம் போன்ற தீய வழக்கங்கள் 7,683 கிராமங்களில் நிறுத்தப்பட்டுவிட்டன. இறந்தவர்களின் வீடுகளில் தீய வழக்கங்கள் பின்பற்றப்படுவதில்லை. சமூக, மத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இந்த விழிப்புணர்வினால் கைம்பெண்கள் தற்போது மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப்படுகின்றனர்.

பெண்கள் மீது சுமத்தப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் சடங்குகள் குறித்து மனிதி அமைப்பை சேர்ந்த செல்வி பேசுகையில், ‘‘மகாராஷ்டிராவில் 7000 கிராமங்களில் கூடி முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மனிதன் குழுவாக இருந்து கூட்டுக் குடும்பமாக மாறும் போது அதில் பெண் என்பவள் அந்தக் குடும்பத்திற்கு வாரிசை பெற்றுத்தர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதற்கு காரணம் தனி சொத்துடமை. என் சொத்துகள் என் வாரிசிற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் காரணமாக பெண் கட்டுப்படுத்தப்படுகிறாள். கணவர் இறந்துவிட்டால் அவருடைய தம்பிக்கு அந்தப் பெண்ணை திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இன்றும் வட இந்தியாவில் இருக்கிறது.

சொத்து தங்களின் குடும்ப வாரிசுகளுக்கே செல்லும் என்பது தான் காரணம். இந்தியாவை பொறுத்தவரை பெண்களின் மீதான கட்டுப்பாடுகள் என்பது மதத்தாலும் சாதியாலும் உருவாக்கப்பட்டுள்ளது. பண்பாட்டு ரீதியாக கட்டுப்பாடுகள் பெண்களுக்கு விதிக்கப்படுகிறது. ஒருத்திக்கு ஒருவன்தான் சொல்லப்படுகிறதே தவிர ஒருவனுக்கு ஒருத்தி என்பதில்லை. மதங்களும் இதைத்தான் சொல்கின்றன.

சாதி என்பது படிநிலைபடுத்தப்பட்ட அமைப்பு. இதில் கீழே இருந்து மேலே செல்லச் செல்ல பெண்கள் மீதான ஒடுக்குமுறை அதிகமாக இருக்கிறது. மேல் அடுக்கில் இருக்கும் மணமான பெண்ணுக்கு அல்லது கணவனை இழந்த பெண்ணுக்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் கீழ் அடுக்கில் இருக்கக்கூடிய பெண்களுக்கு இருப்பதில்லை. காரணம், கீழ்தட்டு பெண்களின் உழைப்பு இந்த சமூகத்திற்கு தேவைப்படுகிறது.

கூலித் தொழிலாளர்களாகவும், வீட்டு வேலை செய்வது, பணிப்பெண்களாக இருப்பது போன்ற வேலைகளுக்கு இந்தப் பெண்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் இந்தப் பெண்களுக்கு மறுமணம் செய்ய மட்டுமே தடை விதித்திருக்கிறார்கள். தவிர, மற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. அதுவே மேல் தட்டில் இருக்கக்கூடிய பெண்களுக்கு உணவில் உப்பு போட்டு சாப்பிடக் கூடாது, வெறும் தரையில் படுக்க வேண்டும், நல்ல உணவு உண்ணக் கூடாது, மங்கலான நிறங்களில் உடைகளை அணிய வேண்டும், மங்கல நிகழ்வுகளில் கலந்து கொள்ள கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இறந்த பிறகும் கொடூரமான சடங்கு முறைகளை பின்பற்றுகிறார்கள். கணவனை இழந்த 70 வயது பெண்ணின் இறுதிச் சடங்கில், அவரின் பிறப்புறுப்பில் சாணி வைத்து சடங்குகள் செய்கிறார்கள். இறந்து வேறு ஒரு உலகத்திற்கு செல்லும் அவரின் ஆத்மா அங்கு வேறு ஒருவருடன் உடலுறவு கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த சடங்கு செய்வதாக கூறுகிறார்கள். மாற்றம் என்பது தனி மனிதரிலிருந்து சமூகத்திற்கு பரிணமிக்க வேண்டும். மகாராஷ்டிராவை போல இந்தியா முழுதும் பின்தங்கியுள்ள கிராமங்களிலும் இந்த மாதிரியான முன்னெடுப்புகளை செய்ய வேண்டும்’’ என்கிறார் செல்வி.

தொகுப்பு: மா.வினோத்குமார்