Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 100 சதவீதம் பராமரிப்பு கொடுக்க வேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

குழந்தைகளுக்கு சாதாரண ஜுரம், சளி இருந்தாலே பெற்றோர் டென்ஷனாகிவிடுவார்கள். ஆனால், அந்தக் குழந்தைக்கு புற்றுநோய் பாதிப்பு என்று தெரிய வந்தால், மொத்த குடும்பத்தினரும் நிலை குலைந்துவிடுவார்கள். புற்றுநோய் என்றாலே உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று இருந்தாலும், முன்பே கண்டறிந்து சிகிச்சைப் பெற்று வந்தால், அதிலிருந்து முற்றிலும் குணமாகலாம், கட்டுப்பாட்டிலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், போதிய வசதி இல்லாத காரணத்தால் குழந்தைக்கு அதற்கான சிகிச்சைகளை பெற்றோர்களால் கொடுக்க முடியாமல் போகலாம்.

அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படலாம். சில குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதையே தவிர்த்துவிடுவார்கள். இந்த நிலையில் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவம், சிகிச்சை பெற தங்க இடம், ஊட்டச்சத்துள்ள உணவுகள், மருத்துவ செலவுகள் என அனைத்தும் இலவசமாக செய்து தருகிறது ‘கேன் கிட்ஸ் கிட்ஸ் கேன்’ என்ற அமைப்பு. இதன் தென் மண்டல தலைமை அதிகாரியாக செயல்பட்டு வரும் லதாமணி அவர்கள் அமைப்பின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவரித்தார்.

‘‘நான் கடந்த 30 வருடமாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு சமூக சேவையில் ஈர்ப்பு இருந்த காரணத்தால் சோனியாலஜியில் எம்.பில் முடிச்சேன். அதன் பிறகு குழந்தை காப்பகத்தில் ஒரு வருடம் வேலை பார்த்தேன். அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சோஷியல் மற்றும் பிரிவென்டிவ் மருத்துவ துறையில் சமூக சேவகராக இருந்தேன். இந்தியாவில் HIV பாதிப்பு உள்ளது என்பதை முதன் முதலில் கண்டறிந்த டாக்டர் சுனிதி சாலமன் அவர்களுடன் இணைந்து எட்டு வருடம் செயல்பட்டேன். அப்போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

என் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்புமுனை அவர்களுடன் வேலை பார்த்த தருணங்கள் என்று சொல்லலாம். பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், காவல்துறை, ஊடகங்கள் என அனைத்து இடங்களுக்கும் சென்று HIV குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கேன். ஐ.நா சபையில் UNICEF, தமிழ்நாடு மற்றும் கேரள அரசுடன் இணைந்து திட்ட அதிகாரியாக பணியாற்றினேன். நான்கு வருடங்கள் தமிழ்நாடு கல்வித்துறை தன்னார்வு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் +1, +2 மாணவர்களுக்கு HIV விழிப்புணர்வு குறித்த பயிற்சி மட்டுமில்லாமல் அதனை ஒரு திட்டமாக அமைத்துக் கொடுத்தேன்.

இவ்வளவு காலம் சென்னையில் மட்டுமே சேவையை செய்து வந்த எனக்கு மற்ற மாநிலங்களிலும் சேவையை தொடர விரும்பினேன். ஷிலாங் மற்றும் மேகாலயாவின் ஐ.நா சபையான UNODCல் போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தரும் திட்டத்தில் இணைந்து செயல்பட்டேன். போதை ஊசியை பலவிதங்களில் பயன்படுத்துவார்கள். அதன் மூலம் HIV பரவ வாய்ப்பு இருப்பதால், அதற்கான விழிப்புணர்வு திட்டத்தினை செயல்படுத்தினோம். அங்கு ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் போதை மருந்துக்கு அடிமையாகி இருந்தனர். போதை மருந்தினை பெற பணம் வேண்டும் என்பதால் அவர்கள் பாலியல் தொழில் செய்யவும் தயங்கியது இல்லை. அப்படிப்பட்ட பெண்களை மீட்டு அவர்களுக்கு தனிப்பட்ட மறுவாழ்வு மையம் ஒன்றை அமைத்து பாதுகாப்பிற்கும் வழி ஏற்படுத்திக் கொடுத்தேன். இன்றும் அந்த திட்டம் அங்கு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது’’ என்றவர், தான் கேன்கிட்ஸ் கிட்ஸ் கேனில் இணைந்தது பற்றி விவரித்தார்.

‘‘இந்த அமைப்பு பூனம் பகாய் என்பவரால் 2004ல் ஆரம்பிக்கப்பட்டது. பூனம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர். அதனால் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு தன்னால் முடிந்த சேவையை செய்ய விரும்பினார். தில்லியில் உள்ள AIMS மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள நோயாளிகளை

சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் அளித்து வந்தார். அப்போதுதான் புற்றுநோய் குழந்தைகளையும் பாதிக்கும் என்பதை புரிந்து கொண்டார். அந்தக் குழந்தைகளுக்கு உதவி செய்ய விரும்பியவர், இந்த அமைப்பினை துவங்கினார்.

சிறிய அளவில் ஆரம்பித்த இவரின் சேவை தற்போது தமிழ்நாடு மட்டுமில்லாமல் புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், தெலுங்கானா போன்ற இடங்களில் பரந்து விரிவடைந்துள்ளது. எங்க நிறுவனத்தின் முக்கிய நோக்கமே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தேவையை அறிந்து அவர்களுக்கு வேண்டியதை செய்து தருவதுதான். இந்திய அளவில் பிறந்த குழந்தைகள் முதல் 19 வயசிற்கு உட்பட்ட குழந்தைகளை பார்த்துக் கொள்கிறோம்’’ என்றவர் அமைப்பின் பணிகள் குறித்து விவரித்தார்.

‘‘நாங்க பல மருத்துவமனைகள் குறிப்பாக அரசு மருத்துவமனைகளுடன் இணைந்து வேலை செய்கிறோம். அங்கு புற்றுநோய் சிகிச்சைக்காக வரும் குழந்தைகள் எங்களின் நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு அவர்களின் தேவைகளை கண்டறிவோம். மருத்துவ செலவு, மருந்து, ஊட்டச்சத்து உணவுகள் என அனைத்தும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெறும் குழந்தைக்கு சென்றடையும். சிகிச்சைக்காக பல நாட்கள் இங்கு தங்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு தங்க இடம் இருக்காது. அதற்கான வசதியினை இலவசமாக வழங்கி வருகிறோம். தங்குபவர்களுக்கு உணவு மற்றும் மருத்துவமனைக்கு செல்ல போக்குவரத்துக்கான செலவு அனைத்தும் அமைப்பு ஏற்றுக் கொள்ளும்.

குழந்தைகளின் உணவு முறை அவர்களின் பிரச்னைக்கு ஏற்ப மாறுபடும் என்பதால், அதற்குத் தேவையான உணவுப் பொருட்களையும் வழங்குகிறோம். இங்கு உணவு ஆலோசகர் இருப்பதால் அவர்கள் குழந்தைகளின் உணவுத் திட்டங்களை பரிந்துரைப்பார். மனநல புற்றுநோய் நிபுணர்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் மனநிலையை அறிந்து கவுன்சிலிங் கொடுப்பார்கள். பேஷன்ட் நாவிகேட்டர்ஸ், இவர்கள் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள். இவர்களுக்கு வெளி இடங்களில் வேலை சுலபமாக கிடைக்காது.

அவர்களுக்கு எங்களின் நிறுவனத்தில் நாங்க வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறோம்’’ என்றவர், இந்தக் குழந்தைகளுக்காக கேன்ஷாலா என்ற பெயரில் சிறப்பு பள்ளி ஒன்றையும் அமைத்திருப்பதாக தெரிவித்தார்.‘‘பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சையின் காரணமாக பள்ளிக்கு செல்ல முடியாது. அதைத் தவிர்க்க தமிழ்நாடு கல்வித்துறை உதவியுடன் பள்ளி ஒன்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் எங்களின் குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லித் தருவது மட்டுமில்லாமல் தேர்வும் நடத்துவார்கள். நாங்க பெரும்பாலும் அரசு மருத்துவமனையுடன் தான் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அப்போதுதான் எங்களின் சேவையினை விரிவுபடுத்த முடியும். இந்தக் கொடிய நோயால் தங்கள் குழந்தை பாதிக்கப்பட்டு இருக்கும் போது என்ன செய்வது என்று பலருக்கு தெரியாது.

அவர்கள் எங்களை 9444096660 என்கிற இந்த எண்ணில் தொடர்பு ெகாண்டால் உடனடியாக எங்களால் முடிந்த உதவியினை செய்து தருவோம். இன்னும் ஐந்தாண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 100 சதவீதம் பராமரிப்பு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு சிறந்த சிகிச்சைகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் எண்ணற்ற குழந்தைகள் பயன்பெற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்’’ என்றார் லதா மணி.

தொகுப்பு: ஷம்ரிதி