Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முடி உதிர்வை தடுக்கும் கரிசலாங்கண்ணி எண்ணெய்!

நன்றி குங்குமம் டாக்டர்

முடி உதிர்வு, இளநரை, பொடுகு போன்ற பிரச்னையினால் அவதிப்படுபவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை கரிசலாங்கண்ணி எண்ணெய் தேய்த்து குளித்து வர முடி உதிர்வை தடுக்கிறது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, பொடுகு மற்றும் அரிப்பைப் போக்குகிறது, முடியை கருமையாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது. மேலும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அனைத்தையும் நீக்குகிறது.

மேலும், கரிசலாங்கண்ணி எண்ணெய், சருமத்திற்கும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலையும் ஆற்றும் தன்மை கொண்டுள்ளது.

ஆயுர்வேத மூலிகையான கரிசலாங்கண்ணி, தலைமுடி பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்தக்கூடியதாகும். இதனை வடமொழியில் பிருங்காராஜ் என அழைக்கின்றனர். கரிசலாங்கண்ணியை தலைக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதில் எப்படி எண்ணெய் தயாரித்து பயன்படுத்துவது? என்பதை தெரிந்துகொள்ளலாம்.

கரிசலாங்கண்ணி எண்ணெயின் முக்கிய பயன்கள்

கரிசலாங்கண்ணி எண்ணெயில் உள்ள மூலக்கூறுகள், வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வதை தடுக்கும்.

இந்த எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

கரிசலாங்கண்ணி எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், பொடுகு மற்றும் அரிப்பு போன்ற பிரச்னைகளை நீக்கும்.

இதில் உள்ள நிறமிகள், முடியின் நிறத்தை கருமையாக்க உதவும் மற்றும் நரை முடி தோன்றுவதை தாமதப்படுத்தும்.

கரிசலாங்கண்ணி எண்ணெய், சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை ஆற்றும்.

பயன்படுத்தும் முறை

*தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்து குளிக்கவும்.

*இரவில் தடவி, மறுநாள் காலை குளிக்கவும் செய்யலாம்.

*வாரம் இருமுறை அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.

கரிசலாங்கண்ணி எண்ணெய் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

கரிசலாங்கண்ணி - 1 கைப்பிடி அளவு

கறிவேப்பிலை - 1 கொத்து

தேங்காய் எண்ணெய் - அரை லிட்டர்.

செய்முறை

கரிசலாங்கண்ணி இலைகள் மற்றும் பூக்களோடு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைப்பதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டாம். (பிஞ்சி தண்டாக இருந்தால் அதையும் அரைக்கலாம்)

பின்னர் ஒரு வாணலியை வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் ஓரளவிற்கு சூடானதும், அரைத்து வைத்த கரிசலாங்கண்ணி விழுதைச் சேர்க்கவும். (அடுப்பை குறைந்த தீயில் வைக்க வேண்டும்)

எண்ணெய் நிறம் மாறியதும், கறிவேப்பிலை இலைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். எண்ணெயில் நுரைகள் எல்லாம் அடங்கி இலைகள் எல்லாம் நன்கு பொரிந்ததும் அடுப்பை அணைத்து ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்துவிடவும். மறுநாள் எடுத்து வடிகட்டி பயன்படுத்தலாம்.

தொகுப்பு: தவநிதி