Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முடி உதிர்வுக்குத் தீர்வாகும் கருஞ்சீரக எண்ணெய்!

நன்றி குங்குமம் தோழி

சுற்றுச் சூழல் மாசு, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் பல பெண்களுக்கு முடி உதிர்வு ஏற்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு எளிய தீர்வாக அமைகிறது கருஞ்சீரக எண்ணெய்.கருஞ்சீரகத்தில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வைப் போக்கி முடி வறட்சி, வெட்டு, அரிப்பு போன்ற பிரச்னைகளைத் தீர்க்கிறது.

கருஞ்சீரக எண்ணெய் தயாரிக்கும் முறை

கருஞ்சீரகம் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம், தேங்காய் எண்ணெய் - 150 மில்லி லிட்டர் எடுத்துக்கொள்ள வேண்டும். கருஞ்சீரகத்தையும், வெந்தயத்தையும் மிக்சியில் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியை சிறிய பாத்திரத்தில் கொட்டி, அதனுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும். அடுப்பில், ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்க வேண்டும். அந்த நீரில் தேங்காய் எண்ணெய்க் கலவை அடங்கிய வேறு பாத்திரத்தை வைத்து, டபுள் பாயிலிங் முறையில் சூடுபடுத்த வேண்டும். இந்த முறையில், எண்ணெய் தயாரிப்பதற்கு சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். பின்பு காய்ச்சிய எண்ணெயை ஆறவைத்து, கண்ணாடி பாட்டிலில் ஊற்றி 3 முதல் 4 நாட்கள் வரை வெயிலில்வைத்து எடுக்க வேண்டும். இதை தினமும் பயன்படுத்தலாம். இயலாதவர்கள் வாரத்தில் 2 அல்லது 3 முறை தலையில் நன்றாகத் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்த பிறகு மிருதுவான ஷாம்பு பயன்படுத்தி தலைக்குக் குளிக்கலாம்.

மற்றொரு முறை: கருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி, வெந்தயம் - 2 தேக்கரண்டி, கற்றாழை ஜெல் - 1 கப், தேங்காய் எண்ணெய் - 1 கப் எடுத்துக்கொள்ள வேண்டும். கற்றாழையின் தோலை நீக்கி, நடுவில் உள்ள ஜெல்லை எடுத்து நன்றாகக் கழுவ வேண்டும். அப்போதுதான், அதிலுள்ள அரிப்புத் தன்மை நீங்கும். அடுப்பில், வாணலியைவைத்து அதில் தேங்காய் எண்ணெயையும், கற்றாழை ஜெல்லையும் சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.

எண்ணெய் கொதிக்கும் போது, கருஞ்சீரகம், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து, மிதமான சூட்டில், அரை மணி நேரம் வரை காய்ச்ச வேண்டும். காய்ச்சிய எண்ணெயை ஒரு பாட்டிலில் ஊற்றி 6 மாதம் வரை பத்திரப்படுத்தி பயன்படுத்தலாம். இதை, வாரம் 2 அல்லது 3 முறை தலையில் நன்றாக மசாஜ் செய்து குளிக்கும்போது, உடல் சூடு குறைந்து குளிர்ச்சி ஏற்படும். இந்த எண்ணெயை ஆண், பெண் இருவரும் பயன்படுத்தலாம். தொடர்ந்து 1 மாதம் வரை பயன்படுத்தும் போது, முடியின் வளர்ச்சி நன்றாகத் தூண்டப்பட்டு, அடர்த்தியாக முடி வளரும்.

தொகுப்பு: தவநிதி