Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சரும வறட்சியைப் போக்கும் மஞ்சள்கிழங்கு!

நன்றி குங்குமம் தோழி

குளிர்காலம், கோடைக்காலம், மழைக்காலம் என பருவ காலங்கள் மாறும்போது நம்முடைய உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, சரும அழகும் அதே அளவுக்குப் பாதிக்கப்படுகிறது.

அதிலும் வெயிலில் சென்றாலும் குளிர் அதிகமாக இருந்தாலும் அதனால் பெரும்பாதிப்பு சருமத்துக்கு உண்டாகிறது. அந்தவகையில், பருவ கால மாற்றங்களால் நமக்கு ஏற்படுகிற முதல் பிரச்னை சரும வறட்சிதான். அந்த சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிறந்த தீர்வாக மஞ்சள் இருக்கிறது. இது சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கிறது.

பொதுவாக மஞ்சள் கிழங்கை பச்சையாகவோ அல்லது வேகவைத்து அரைத்தோ முகத்துக்குப் பூசினால் அழகு கூடும் என்பது நமக்குத் தெரியும். நம்முடைய முன்னோர்கள் நம்மைப் போன்று ஆயிரக்கணக்கான க்ரீம்களையெல்லாம் அந்தக் காலத்தில் பயன்படுத்தவில்லை. அவர்களுக்கு இருந்த ஒரு பியூட்டி க்ரீம் மஞ்சள் மட்டுமே.

மஞ்சள் ஆவி பிடித்தல்

மூன்று கப் அளவுக்கு தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்கும் தண்ணீரில் பசும் மஞ்சள் கிழங்கை ஒரு இன்ச் அளவுக்கு எடுத்து அரைத்து அதில் கலந்து சிறிது நேரம் கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்கிற தண்ணீரை எடுத்து நன்கு ஆவி பிடிக்க வேண்டும். சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறும். எல்லா சீசன்களிலும் பசுமஞ்சள் கிடைக்காது.

எனவே, மஞ்சள் கிழங்கு பசுமையாக கிடைக்கும் காலங்களில் இதனை செய்யலாம். பொதுவாக பொங்கல் நேரத்தில் மஞ்சள் செடியை அனைவரும் வாங்குவர். அதிலிருக்கும்

மஞ்சள் கிழங்கை சேகரித்து வைத்துக் கொண்டு அதில் இவ்வாறு செய்யலாம். மற்ற சமயங்களில் கஸ்தூரி மஞ்சள் கிழங்கு கடைகளில் கிடைக்கும். அதனை வாங்கி தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து பின்னர் பயன்படுத்தலாம்.

எலுமிச்சை

ஆவி பிடிப்பதற்கு எலுமிச்சையும் மிகச் சிறந்த பொருள். பொதுவாக ஆவி பிடிக்கிற பொழுது அதனுள் மஞ்சளுடன் சிறிதளவு எலுமிச்சை இலைகளைப் போட்டால் ஜலதோஷம், தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்னைகள் கூட குணமாகிவிடும். எலுமிச்சை இலைகள் கிடைக்காதவர்கள் எலுமிச்சை பழத்தை சாறெடுத்துவிட்டு, தோல்களைத் தூக்கி கீழே போட்டுவிடாமல் அதை பத்திரப்படுத்தி வைத்து அந்த தோல்களைக் கூட தண்ணீரோடு சேர்த்து கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம்.

ஆவி பிடித்த பின் செய்ய வேண்டியவை

பொதுவாக ஆவி பிடித்த பின்னால் நாம் அப்படியே டவலில் துடைத்துக் கொண்டு, அடுத்த வேலை பார்க்கக் கிளம்பிவிடுகிறோம். ஆனால் அப்படி செய்யக்கூடாது, ஆவி பிடித்து முடித்த பின்பு, துண்டால் துடைத்துக் கொண்டு பின் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்கு தேய்க்க வேண்டும். இதன்மூலம், ஆவி பிடித்த பின்னர், முகத்தில் உள்ள சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்கும். அதன்பின் ஏதாவது ஒரு பேஸ்பேக் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவிவிட முகம் பொன் போன்று ஜொலிக்கும்.

தொகுப்பு: ரிஷி