நன்றி குங்குமம் தோழி
முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். அதற்காக கெமிக்கல் நிறைந்த விலையுயர்ந்த கிரீம்களை நிறைய பயன்படுத்துவோம். இதனை பயன்படுத்தும் போது அப்பொழுது ரிசல்டை கொடுத்தாலும் நாளடைவில் அவை முகத்தில் பிரச்னையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான வழிமுறைதான் சிறந்தது. சிலர் முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். இயற்கையான பொருட்களை பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும் என்பது தெரியும். ஆனால், அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது நமக்குத் தெரிவதில்லை. இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை எவ்வாறு பயன்படுத்தினால் முகம் எப்போதும் பளிச்சென்று இருக்கும் என்பதனை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்...
* ஒரு கிண்ணத்தில் பால் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர், உங்கள் முகத்தை ஒருமுறை கழுவி நன்றாக துடைத்த பின்னர் தயாரித்து வைத்துள்ள பால், தேன் மற்றும் மஞ்சள் தூள் கலவையை முகத்தில் நன்றாக தடவி 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை வாரத்திற்கு இருமுறை செய்தால் போதும் உங்கள் முகம் கரும்புள்ளிகள் அற்று தெளிவாக மாறும்.
* முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். பின்னர் அதனை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் பால், கடலை மாவு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இந்த அரைத்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் பிறகு கழுவினால் உங்கள் முகத்தில் மாற்றங்கள் ஏற்படுவதை உணருவீர்கள். இதனை வாரத்திற்கு இருமுறை செய்வதன் மூலம் சிறந்த பலன்களை பெறலாம்.
- கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.