Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அழகுக் கலைக்கான தேவைகள் அதிகம் இருக்கிறது!

நன்றி குங்குமம் தோழி

‘‘இன்றைய நவீன யுகத்தில் பெண்கள் தங்கள் துறை சார்ந்த அனுபவங்களில் முறையாக தேர்ச்சிப் பெற்று, பல் தொழில் செய்யும் வல்லமை பெற்றவர்களாக இருந்து வருகிறார்கள். ஒரு துறை சார்ந்த அத்தனை விஷயங்களையும் கற்றுக்கொண்டு, அந்தத் தொழிலை தனித்து காண்பிப்பதோடு, அதில் நிலைத்து நிற்கவும் உதவி செய்யும்’’என்கிறார் தஞ்சாவூரில் அழகுக்கலை துறையில் கொடிகட்டிப் பறந்து வரும் மகேஸ்வரி. இவர் மணப்பெண் அலங்காரம், பொட்டிக் மற்றும் செயற்கை நகைகள் என எதையும் விட்டு வைக்காமல் தனது துறை சார்ந்த அனுபவத்தில் அசத்தி வருகிறார். அழகுக்கலையோடு அதற்கு தேவையான நகைகளையும் விற்பனை செய்து வரும் மகேஸ்வரி தனது துறை சார்ந்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

அழகுக்கலை குறித்து...

திருமணம் இன்று ஆடம்பர நிகழ்வு என்றாகிவிட்டது. பீச் திருமணம், தீம் வெட்டிங், ஆடம்பர திருமணம் என்பதெல்லாம் ஃபேஷனாகி வருகிறது. அதற்காக ஏற்படும் ஆடம்பரமான செலவினங்கள் குறித்து யாரும் பெரிய அளவில் கவலைப்படுவதில்லை. குறிப்பாக மேக்கப், உடைகள் மற்றும் நகைகள் விஷயத்தில் நவீன அழகோடு டிரெண்டியாகவும், மார்டனாகவும் இருக்க வேண்டும் என்பதே பலரின் கனவாக இருக்கிறது. இதில் மணமக்கள் மேக்கப் மற்றும் அலங்காரங்கள் குறித்து சொல்ல வேண்டுமா என்ன? திருமணத்திற்கு வரும் மக்களின் கண்கள் மொய்ப்பது மணமக்களைதானே.

அதிலும் குறிப்பாக மணமகளின் மேக்கப் நகைகள், உடைகள், அணிகலன்கள் என அனைத்துமே பெரும் கவனம் ஈர்ப்பது இயல்பு. ஒவ்வொரு மணப்பெண்ணும் திருமண வைபவங்களில் தன்னை ஸ்பெஷலாக உணர்ந்து கொள்ள நினைக்கிறார்கள். எனவே, தற்போது நவீன மேக்கப் வகைகள் மற்றும் வசதிகளை அனைவருமே பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். திருமணத்திற்கு பல மாதங்களுக்கு முன்பே அழகு நிலையங்களுக்கும் வந்து விடுகிறார்கள். அழகுக்கலைக்கான தேவைகள் அதிகம் இருக்கிறது.

பல தொழில்களில் ஆர்வம் ஏற்பட காரணம்...

இத்துறைகளில் எனக்கு இருபத்தி ஆறு வருட அனுபவம் உள்ளது. பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். அந்த அனுபவம் தான் எனக்கு பெரிதும் கைக் கொடுத்திருக்கிறது என நினைக்கிறேன். என்னிடம் வரும் மணப்பெண்களை மேக்கப் மூலம் ‘ப்ரிட்டி உமன்’ ஆக மாற்றிவிடுவேன். பொதுவாக அழகு நிலையத்தில் மேக்கப், ஃபேஷியல் போன்ற அழகு சார்ந்த சர்வீஸ்கள்தான் செய்வார்கள்.

அப்படி இல்லாமல் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்தால் என்ன என்ற யோசனை ஏற்பட்டது. முதலில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான புடவைகளை வாங்கி விற்பனை செய்ய பொட்டிக் ஒன்றை துவங்கினேன். உடைகளை, எங்களிடம் வாங்க வந்தவர்கள் எங்களின் வாடிக்கையாளர்களாகவும் மாறினார்கள். இதன் மூலம் நிறைய புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். பொட்டிக்கினை தொடர்ந்து மணப்பெண்களுக்கான நகைகளுக்கான புது செக்‌ஷனை ஆரம்பித்தேன். இப்படித்தான் ஒரே கூரையில் பல தொழில்கள் உருவானது.

அழகுக்கலையில் ஆர்வம் ஏற்பட காரணம்...

தஞ்சாவூரில் பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெங்களூரில் அழகு நிலைய பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து அழகுக்கலையை கற்றுக்கொண்டேன். அதன் பிறகு பெரிய நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் கார்ப்பரேட் அழகு நிலையங்களில் பணிபுரிந்தேன். அதில் நிறைய அனுபவங்கள் மற்றும் இந்த துறை குறித்த புரிதலும் கிடைத்தது. ஏறக்குறைய பதினெட்டு வருடங்கள் பெங்களூரில் நட்சத்திர ஓட்டலின் பார்லரில் பணிபுரிந்தேன்.

அதன் பிறகு திருமணமாகி தஞ்சாவூர் வந்தவுடன் சொந்தமாக அழகுக்கலை நிலையத்தை துவக்கி தற்போது இரண்டு பார்லர்களை நடத்தி வருகிறேன். தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் செயற்கை நகைகளும் விற்பனை செய்து வருகிறேன். மேலும், ஆன்லைன் பொட்டிக் நடத்தியும் வருகிறேன். அதில் புடவைகள், உடைகள் மட்டுமில்லாமல் மணப்பெண் புடவைக்கான டிசைனர் பிளவுஸ்களை நியாயமான விலையில் தைத்து தருகிறோம். திருமணத்திற்கான விதவிதமான மணப்பெண் அலங்காரமும் எங்களது பணிகளுள் ஒன்றுதான்.

மணப்பெண் அலங்காரங்கள்...

திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் ரொம்ப முக்கியமான வாழ்நாள் தருணம். அந்த நாளில் மணப்பெண் தன்னை தேவதை போல் அலங்கரித்துக் கொள்ளவே விரும்புவாள். அதற்கு நிறைய முன்னேற்பாடுகள் அவசியம். எங்களிடம் வரும் மணப்பெண்களை ப்ரிட்டி உமனாக மாற்றுவதுதான் எங்களின் கடமை. மேலும், இந்த துறையில் மேக்கப் குறித்து நான் என்னை அப்கிரேட் செய்துகொள்கிறேன். அது மிகவும் அவசியம். அப்போதுதான் டிரெண்டிங்கிற்கு ஏற்ப நாம் மணப்பெண்ணை அலங்கரிக்க முடியும்.

பெண்களுக்கு ஏற்ற தொழில்...

மணப்பெண் அலங்காரத்திற்கு என நிறைய பயிற்சிகள் உள்ளது. தற்போது ஹைட்ரா ஃபேசியல் மற்றும் கிளாஸி மேக்கப்பிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. புடவை ப்ரீ பிளிட் செய்வதிலும் நிறைய வகைகள் வந்துவிட்டது. மணப்பெண்களுக்கும், பார்ட்டி விழாக்களுக்கு செல்பவர்களுக்கும் புடவை கட்டி விடுவதில் கூட நல்ல வருமானம் பார்க்கலாம். புடவை ப்ரீ பிளிட்டிங் செய்வதற்கும், புடைவை கட்டுவதற்கும் தனிப்பட்ட பயிற்சிகள் வந்துவிட்டது. இத்துறையில் நல்ல கிரியேட்டிவ் இருந்தால் பெரும் வருமானத்தை ஈட்டலாம். பார்லர் மற்றும் திருமண நிகழ்வில் நேரிடையாக சென்று மேக்கப் செய்வதன் மூலமாக கணிசமான வருமானங்கள் கிடைக்கும்.

அழகுக்கலை பயிற்சி எடுத்தால் வீட்டிலிருந்தோ, பார்லர் வைத்தோ அல்லது வாடிக்கையாளர்கள் இடத்தில் சென்று இந்தத் தொழிலை நல்ல முறையில் நடத்தலாம். கற்றுக்கொள்ளும் ஆர்வமும் விடா முயற்சியும் தனித்திறமையும் இருந்தால், தொழிலில் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு எடுத்து செல்லும். பெண்களுக்கு ஏற்ற பாதுகாப்பான நல்லதொரு தொழில் இது. தற்போது தினந்தோறும் வளர்ந்து வரும் அழகுக்கலை பற்றிய புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு, முறையாக பயிற்சி பெற்று துவங்கினால் நல்லது என்கிறார் மகேஸ்வரி.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்