Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உங்களவருக்கு துணையாக இருங்கள்..!

நன்றி குங்குமம் தோழி

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் மைதிலி சிவக்குமார். +2விற்கு மேல் குடும்ப சூழல் காரணமாக மேற்படிப்பை தொடர முடியாதவர்... இன்று ஒரு தொழிலதிபராக வளர்ந்துள்ளார். தனக்கான ஒரு அடையாளத்தினை தேடிக் கொள்ள அவர் பல கடின பாதைகளை கடந்து வந்துள்ளார்.‘‘+2விற்கு மேல் என்னால் அந்த சமயத்தில் மேல் படிப்பு படிக்க முடியவில்லை. அப்ப இருந்த எங்க குடும்பச்சூழல். ஆனால் நான் மேலே படிக்க வேண்டும் என்று நினைத்தவர் என் அம்மா.

அவர்கள் எனக்கு கொடுத்த அந்த சப்போர்ட் தான் நான் இன்று ஒரு தொழிலதிபராக உயர்ந்திருக்கிறேன். +2விற்குப் பிறகு நான் ஒரு தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தேன். ஒரு மாதம் கூட அங்கு வேலை செய்திருக்க மாட்டேன். திடீரென்று ஒரு நாள் எனக்கு வேலை இல்லை என்றும் மறுநாளில் இருந்து வேலைக்கு வர வேண்டாம் என்றும் கூறிவிட்டார்கள். நான் வேலை பார்த்த 23 நாட்களுக்கும் சம்பளமும் தரவில்லை. ஏமாற்றத்தோடு வீட்டிற்கு வந்தேன். என்னுடைய அழுகையை என்னால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதைப் பார்த்துதான் அம்மா, ‘நீ இனிமேல் எங்கும் வேலைக்குப் போக வேண்டாம். மேலே படி’ என்றார்.

அம்மா அன்று சொன்ன அந்த வார்த்தை என் ஆழ் மனதில் ஆணி அடித்தது போல் பதிந்துவிட்டது. Bsc.,B.Ed.,M.A.,MBA., ADME.,ECCE., என என்னால் முடிந்த அனைத்தும் படித்தேன். நான் துவண்டு விழுந்த போது, எனக்கு ஊக்கமளித்து, குடும்பச் சூழலையும் சமாளித்து என்னை மேலும் படிக்க வைத்தார்கள் என் பெற்றோர். அவர்களுக்கு நான் திரும்ப செய்யும் நன்றிக் கடன்தான் இன்று பல நூறு குழந்தைகளுக்கு தரமான கல்வியை அமைத்து தருகிறேன்” என பெருமையுடன் கூறும் மைதிலி ஒருபக்கம் மழலையர் பள்ளி, இன்னொரு பக்கம் உணவகம் என இரண்டையும் நிர்வகித்து வருகிறார். ஓவியம் வரைவதிலும் இவருக்கு ஆர்வமுண்டு.

‘‘மழலையர் பள்ளி மனநிறைவு, மனஅமைதியும், உணவகம் அனுபவம் மற்றும் மனிதர்களை கையாளும் திறனையும், ஓவியம் உற்சாகமும், என் திறமையின் மீது நம்பிக்கையும் தருகிறது. நமக்கு கிடைக்கும் நேரத்தினை நான் பயனுள்ளதாக பிரித்து பயன்படுத்த நினைத்தேன். அப்படித்தான் என்னுடைய அனைத்து வேலைகளையும் பிரித்து பார்க்கிறேன். காலை முதல் மதியம் வரை பள்ளி நிர்வாக வேலையில் ஈடுபடுவேன். மதியம் முதல் இரவு வரை உணவகத்தில் இருப்பேன்.

அதன் பிறகு ஓய்வு நேரத்தில் என மனதிற்குப் பிடித்த ஓவியங்களை வரைவேன். எல்லோரும் கடுமையாக உழைத்தால் முன்னேறலாம் என்று சொல்வார்கள். அந்த உழைப்பினை விடாமுயற்சியுடன் செய்தால் பல மடங்காக முன்னேறலாம் என்பதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேல் இந்த சமூகத்தில் எனக்கு என தனிப்பட்ட அங்கீகாரம் வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு காரணம் என்னுடைய உழைப்புக்கு கிடைக்காத அங்கீகாரம்.

அந்த வலி என்னுடைய மனதில் ஒரு ஓரத்தில் இன்றும் புகைந்து கொண்டு தான் இருக்கிறது. எனக்கு என் பெற்றோர்தான் ரோல் மாடல். எனக்கும் அப்படித்தான். என் மனத்திரையை திறந்துப் பார்த்தால் அவங்க தான் இருப்பாங்க. உழைப்பது என்பது சிறுவயது முதலே என் பெற்றோரிடம் பார்த்து கற்றுக்கொண்டேன். அப்பா தபால் நிலையத்தில் காலை நேரத்தில் தினக் கூலியாகவும், மாலையில் டாக்டர் ஒருவரிடம் கம்பவுண்டராகவும், இரவு லாட்ஜ் ஒன்றில் வாட்ச்மேனாகவும் வேலை பார்த்து வந்தார். எப்போது தூங்குவார், எப்போது சாப்பிடுவார் என்று நான் வியந்திருக்கிறேன்.

அம்மா கவர் ஒட்டுவது, கிளிஞ்சல்கள் கோர்ப்பது, புடவை விற்பது என அப்பாவைப் போல் கடுமையாக உழைத்தார். இவர்களை பார்த்து வளர்ந்த நான் உழைப்பதில் ஆச்சரியம் இல்லை. என்ன வித்தியாசம்... நான் பட்டப்படிப்பு முடித்து அதற்கேற்ப வேலையில் என் உழைப்பினை வெளிப்படுத்துகிறேன். நான் படிக்க வேண்டும் என்று அம்மா ரொம்பவே ஆசைப்பட்டாங்க. படிப்பு மட்டும் தான் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்னு அவங்க நம்பினாங்க’’ என்றவர் இந்த உயரத்தை தொட்டது குறித்து விவரித்தார்.

‘‘நான் சாதாரண பெண்தான். ஆனால் பல பெண்களுக்கு முன் உதாரணமா இருக்க விரும்பினேன். இன்றும் பல பெண்கள் திருமணத்திற்குப் பிறகு குடும்பத்திற்கு மட்டுமே வேலை செய்வதை தங்கள் வாழ்க்கையின் லட்சியமாக நினைக்கிறார்கள். குடும்பத்தை பார்ப்பது அவசியம் தான். அதே சமயம் தனக்கான ஒரு பாதையை வகுத்துக் கொள்ளவும் வேண்டும். குடும்பம், வேலை இரண்டையும் இரண்டு தண்டவாளம் போல் சிறப்பாக பயணிக்க வேண்டும். அப்படி கையாளும் பெண்கள் அனைவருமே சாதனையாளர்கள்தான்.

ஒரு பெண்ணின் தந்தை லட்சாதிபதியாக இருந்தாலும் சரி அல்லது அவளின் கணவர் கோடீஸ்வரராக இருந்தாலும் சரி அவளுக்கென்று சுய சம்பாத்தியம் அவசியம். அது அவளுக்கான சுயமரியாதையை கொடுக்கும். பல தொழிலில் ஈடுபட்டாலும் நான் வாழ்க்கையில் சாதித்துவிட்டேன் என்று நினைச்சதில்லை. இப்போதுதான் என் பயணம் தொடங்கியுள்ளதாக நினைக்கிறேன். இன்னும் கடந்து செல்ல வேண்டிய தூரம் உள்ளது. அதற்கு ஒவ்வொரு பெண்ணும் கல்வியினை பெறவேண்டும். அது அவளுக்கு ஒரு தைரியத்தை கொடுக்கும். அதே சமயம் அவளுடன் இருக்கும் ஆண்கள் அப்பா, கணவன் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. துணையா இருந்தாலே போதும். கண்டிப்பாக அவர்கள் உலகை ஆள்வார்கள். அதில் சந்தேகமில்லை” என்றார் மைதிலி சிவக்குமார்.

தொகுப்பு: ஆர்.கணேசன்