Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாழை இலை தோரணம்!

நன்றி குங்குமம் தோழி

பண்டிகை வந்துவிட்டாலே வீட்டை சுத்தம் செய்து அலங்கரிக்க ஆரம்பித்துவிடுவோம். குறிப்பாக பிள்ளையார் சதுர்த்தி வந்துவிட்டாலே வரிசையாக அடுத்தடுத்து பண்டிகை வரிசைக்கட்டி நிற்கும். பண்டிகையின் போது நம் வீட்டை நாமே எளிய முறையில் அலங்கரிக்கலாம். பார்க்க அழகாக இருக்கும். வாழையடி வாழை என வாழை மரம் போல் தழைத்து வாழ வேண்டும் என்று பெரியவர்கள் வாழ்த்துவார்கள். அந்த வாழை இலையைக் கொண்டு அழகான தோரணம் எவ்வாறு வடிவமைக்கலாம் என்று பகிர்கிறார் சுதா செல்வகுமார்.

தேவையான பொருட்கள்

வாழை இலை - 6, (டிஃபன் இலை அல்லது தலை வாழையிலை), சாட்டின் ரிப்பன் (விருப்பமான கலர்) - தேவையான அளவு, சாமந்திபூ, ரோஜாப்பூ -சிறிது, பட்ஸ் அல்லது மல்லிகை மொட்டு - 7, கத்தரிகோல் - வெட்டுவதற்கு, டபுள் வே ஸ்டிக்கர், ஸ்டாபிளர் - ஒட்டி அலங்கரிக்க.

செய்முறை

வாழையிலை தோரணம் செய்ய அதாவது, ஒரு சமோசா மடிப்பு இதழ் செய்ய 7 வெட்டிய இலை வேண்டும். உங்களுக்கு எவ்வளவு நீளம் வேண்டுமோ அதற்கு ஏற்றாற் போல சாட்டின் ரிப்பனும் சமோசா வாழையிலை மடிப்பு இதழும் செய்து கொள்ள வேண்டும். அவை எப்படி செய்ய வேண்டும் என்ற படமும் விளக்கமும் இனி வருபவை.

1- வாழை இலையை நீளவாக்கில் இரண்டு இஞ்ச் அளவில் வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதை சமமாக மடக்கி படத்தில் காட்டி உள்ளபடி இரண்டிரண்டாக வெட்டிக் கொள்ளவும்.

2- 7 வெட்டிய வாழையிலை பகுதியை முதலில் எடுத்துக் கொள்வோம். அதில் ஒரு இலை நடுவில் படத்தில் இருப்பது போல் பட்ஸ் அல்லது மல்லிகை மொட்டு வைக்கவும். மொட்டு மேற்புறம் இருக்க வேண்டும். வலது புறம், இடது புறம் சமோசா மடிப்பு அதாவது, முக்கோணமாக படத்தில் உள்ளபடி மடித்து பிரிந்து வராமல் இருக்க ஸ்டாபிளர் அடிக்கவும்.

3- பிறகு மீதமுள்ள 6 இலைகளையும் எடுத்துக் கொண்டு வலது, இடது புறம் முக்கோண வடிவில் மடித்து ஒரு மடிப்பை மற்றொரு முக்கோண மடிப்பினால் மூடவும்.

4- இந்த சமோசா முக்கோண மடிப்பை 6 இலைகளிலும் செய்து எடுத்துக் கொண்டு முதலில் பட்ஸ் அல்லது மல்லிகை மொட்டு வைத்து செய்த இலையை நடுவில் வைத்து வலது புறம், இடது புறம் என மாறி மாறி கீழே இறக்கி இறக்கி அடுக்கவும்.

5- கடைசியாக அனைத்தையும் சேர்த்து ஸ்டாபிளர் பின் அடிக்கவும். ஒரு முழு சமோசா வடிவ இலை இதழ் ரெடி.இது மாதிரி 6 அல்லது 7 இலை சமோசா வடிவம் செய்து எடுத்துக்கொள்ளவும்.

6- சாட்டின் ரிப்பனில் இந்த வாழைஇலை சமோசா மடிப்பை டபுள் வே ஸ்டிக்கர் கொண்டு ஒட்டி ஸ்டாபிளர் பின் அடிக்கவும். அனைத்து வாழையிலை மடிப்பையும் சாட்டின் ரிப்பனில் ஒட்டவும். நடு நடுவே சாமந்தி, ரோஜா இதழ் ஒட்டி மேலும் அழுகுபடுத்தவும்.

தண்ணீர் தெளித்து வைத்தால் 2, 3 நாட்கள் வரைகூட இத்தோரணம் வாடாது. செலவும் குறைவு. வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கும். செய்வதும் சுலபம். மங்களகரமானதும் இது ஆகும்.

தொகுப்பு: சுதா செல்வகுமார்