நன்றி குங்குமம் தோழி
பெண்களுக்கான அடையாளங்கள் பல இருந்தாலும், அவர்கள் புடவையினை அணிந்து வரும் போது அவர்களின் தோற்றத்திற்கு கூடுதல் மதிப்பு மற்றும் மரியாதையை கொடுக்கும். பட்டு, பருத்தி, ஷிஃபான், டசர் என பல வகை புடவைகள் இருந்தாலும், சென்னை பல்லாவரம் அருகே, அனகாபுத்தூரில் பரம்பரை பரம்பரையாக பாரம்பரிய முறையில் நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த பத்மா சேகர் இயற்கையை மீட்டெடுக்கும் வகையில் வாழை நாரில் இருந்து புடவையினை நெய்து விற்பனை செய்து வருகிறார். இந்தப் புடவைகள் நம்மூரில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
‘‘நாங்கள் மூன்றாம் தலைமுறையாக நெசவு செய்கிறோம். காட்டன், பட்டினைத் தொடர்ந்து வாழை நாரிலும் புடவைகள் நெய்து வருகிறோம். நாங்க நெசவாளர் குடும்பம். எட்டாவது வரைதான் படிச்சேன். என்னுடைய பதினாறு வயதிலிருந்தே நெசவு செய்து வருகிறேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் இந்த தறி, நூல், சாயங்கள்தான். தறியடிக்கும் சத்தத்தில்தான் நான் வளர்ந்தேன் என்று சொல்ல வேண்டும். என் தாய்மாமாவைதான் நான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு மூன்று பசங்க. பட்டப்படிப்பு முடித்துவிட்டு அவர்களும் இந்தத் தொழிலுக்கு வந்துட்டாங்க’’ என்றவர், ராமாயண கதையினால் ஈர்க்கப்பட்டுதான் வாழை நாரில் புடவையை நெய்ய ஆரம்பித்துள்ளார்.
‘‘புத்தகத்துல ராமாயண கதையினை படித்த போதுதான் வாழை நாரிலும் புடவையினை நெய்ய முடியும் என்று எனக்குத் தெரிந்தது. ராவணன் சீதையை அசோக வனத்திற்கு கடத்தி செல்கிறான். அங்கு சீதையிடம் மாற்றுத் துணி இல்லை. ராவணன் பட்டாடை கொடுத்தும் அதை நிராகரித்துவிட்டு, அங்கிருந்த வாழை நாரை எடுத்து ஒன்று சேர்த்து ஆடையாக உடுத்திக் கொள்கிறாள். இதைப் படித்து என் கணவரிடம் சொன்னேன். எங்க இருவருக்குமே வாழை நாரில் உடை நெய்ய முடியுமா என்ற கேள்விதான் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
எங்கு வாழை மரத்தைப் பார்த்தாலும் என் கணவர் அதை கீறிப் பார்ப்பார். ஒருமுறை கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம். அங்கு வாசலில் கட்டப்பட்டிருந்த வாழை மரத்தை இவர் கீறிய போது அதில் இருந்து நூல் நூலாக வந்தது. அந்த நூலைக் கொண்டு நெசவு செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அதற்கான பரிசோதனைகளை செய்ய துவங்கினார். இதற்கிடையில் சணல் மற்றும் கைவினைப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தோம். ஆனால், பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. வாழை நாரில் புடவை பற்றிய சிந்தனை மட்டும் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் கோவில்பட்டியிலிருந்து கலைக் கல்லுரி மாணவர்கள் எங்களை சந்திக்க வந்திருந்தார்கள். அவர்கள்தான் எங்களின் சிந்தனைக்கு உயிர் கொடுத்தார்கள். வாழை நார் புடவை குறித்து முழு மூச்சாக களத்தில் இறங்கினோம். வாழை மட்டையிலிருந்து அழகாக நாரினை எடுக்க முடியும் என்று நாங்க நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால், அது சுலபமாக இல்லை. கத்தியால் கீறி நாரினை பிரித்து, காயவைத்து, பிறகு சாயத்தில் நனைத்து, காய்ந்தவுடன் தறியில் சேர்க்க வேண்டும். நார் பாதி, பருத்தி பாதி சேர்த்துதான் வாழை நார் புடவையினை தயாரிக்கிறோம். பலரும் பாராட்ட... அதில் கிடைத்த ஊக்கத்தினால் முழுமூச்சாக அதன் தயாரிப்பில் இறங்க ஆரம்பித்தோம்.
முதன் முதலில் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு கடையில் எங்களின் புடவையினை விற்பனைக்கு கொடுத்தோம். இப்போது அவர்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆர்டர் கொடுத்து வருகிறார்கள். இது எங்களின் பல நாள் போராட்டம். பல்வேறு சோதனைக்குப் பிறகுதான் எங்களின் நாரினை தறியில் ஏற்ற முடிந்தது. அந்த சோதனைகள் எல்லாம் சாதனையாக மாறியது. ஒரு தறி ஐந்தானது. தற்போது பத்து தறி போட்டு புடவையினை நெய்து வருகிறோம். நாங்க பயன்படுத்தும் சாயங்களும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டவை. எந்த ரசாயனமும் கலப்பதில்லை.
ஒரு புடவை முழுமையா நெய்வதற்கு இரண்டு வாழை மரம் தேவைப்படும். நாரினால் நெய்யப்பட்ட புடவை என்பதால் உடுத்தும் போது கொஞ்சம் கனமாக இருப்பது போல் இருக்கும். ஆனால், உடலை உறுத்தாது, மென்மையாக இருக்கும். ெவயிலுக்கு ஏற்றது. சரும பிரச்னையை ஏற்படுத்தாது. உடுத்தினால் மிடுக்கான தோற்றம் கொடுக்கும்.
இப்புடவையை சோப்பு கொண்டு துவைக்கக்கூடாது. சீயக்காய் மற்றும் பூந்திக் கொட்டை போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து துவைக்க வேண்டும். தினமும் இப்புடவையை கட்டிக் கொண்டாலும் ரெண்டு வருஷம் வரை உழைக்கும். அயர்ன் பண்ண வேண்டாம். கையால் மடித்து வைத்தால் போதும்.
வாழை நார் புடவை மட்டுமல்ல கத்தாழை, மூங்கில், வெட்டிவேர், தேங்காய் நார், கோங்குரா, நில்லன் மற்றும் இதைத்தவிர மூலிகை சாரில் நெய்த புடவைகள் உள்பட இருபத்தைந்துக்கும் மேலான புடவைகளை தயாரிக்கின்றோம். 25 வகையான நார்களை கொண்டு புடவையை நெய்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறோம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வருகிறோம்.
புடவை நெய்ய போதுமான இடவசதி, இயந்திரங்களுக்கு அரசு உதவி செய்தால், இதனை மேலும் பெரிய அளவில் உற்பத்தி செய்ய முடியும். பலருக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தர முடியும். வாழை நார் புடவையை உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்க்க முடியும்’’ என்று கூறும் பத்மா சேகர் சிறந்த தொழில்முனைவோர், IIT விருது, கோவா ஆளுநர் விருது, மத்திய தொழில் துறை அமைச்சக விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
தொகுப்பு: மதுரை ஆர்.கணேசன்
