நன்றி குங்குமம் தோழி
பலர் சிரிக்கும் போது பற்கள் வெள்ளை வெளீராகத் தெரிந்தாலும், பேசும் போது துர்நாற்றம் வீசும். பற்களை பலமுறை துலக்கினாலும், நாக்கை வழித்து சுத்தம் செய்தாலும், ‘மவுத் வாஷ்’ கொண்டு வாயை சுத்தம் செய்தாலும், ஆயில் புல்லிங் செய்தாலும் சிறிது நேரத்தில் வாயில் துர்நாற்றம் மீண்டும் குடிபுகுந்துவிடும். அதன் காரணமாக பலர் முன்னிலையில் பேசுவது அல்லது சிரிப்பது கூட சிலருக்குத் தர்ம சங்கடமாக இருக்கிறது. வாய் துர்நாற்றம் என்பது அனைவருக்குமான பிரச்னை.
வாய் துர்நாற்றம் பலரைச் சங்கடப்படுத்தும் என்றாலும் ஒருவரின் தன்னம்பிக்கையை பாதிக்கும். ஒருவர் எவ்வளவு நன்றாக பல் துலக்கினாலும், ஏலக்காய் மென்றாலும், நறுமண ஸ்ப்ரே வாயில் செய்து கொண்டாலும், வாய் துர்நாற்றம் ஏற்பட என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாம். வாய் துர்நாற்றத்திற்குப் பல காரணங்கள் உள்ளன. வாயில் உருவாகும் பாக்டீரியாக்கள் ஒரு காரணம். வயிற்றில் செரிமான பிரச்னைகள் இருந்தாலும் அது வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். நீரிழிவு, சிறுநீரக, கல்லீரல் நோய், புகைப்பிடித்தல், மது அருந்துதல், நீரிழப்பு (Dehydration), உட்கொள்ளும் சில மருந்துகளும் வாய் துர்நாற்றத்திற்கு காரணங்களாக அமையும்.
வாயில் உள்ள பாக்டீரியாக்கள்தான் இதற்கு முக்கிய பொறுப்பு. பற்களுக்கு இடையில் தங்கும் உணவுத் துகள்கள், வாயின் இறந்த செல்கள், உமிழ்நீர் ஆகியவை நாக்கில் ‘பிளேகினை’ ஏற்படுத்தி ‘கந்தக’ (Sulphur) சேர்மங்களை உருவாக்குகின்றன. இது வாயில் பாக்டீரியாக்கள் வளரக்கூடிய சூழலை உருவாக்குகிறது. சுத்தமற்ற வாய் காரணமாக ரத்தத்தில் பாக்டீரியாக்கள் அதிகரித்து, உடலில் அழற்சியை ஏற்படுத்தும். பற்களில் இருக்கும் கிருமிகள், பற்களுக்கிடையில் சிக்கிக் கொள்ளும் உணவுத் துகள்கள் பற்கள் மற்றும் ஈறுகளை சேதப்படுத்தும். இவற்றைத் தவிர்க்க, நாக்கை தினமும் இருமுறை (காலை, இரவு) சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாயைச் சுத்தம் செய்வதில் உமிழ்நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. உமிழ் நீர் சுரப்பது குறைந்தால் அல்லது உமிழ்நீரில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக, வாய் அடிக்கடி வறண்டு பாக்டீரியாக்கள் வளரக்கூடும். இதைத் தவிர்க்க, நீங்கள் இனிப்பு சுவை இல்லாத ‘பபிள் கம்’மை மெல்லலாம் அல்லது அவ்வப்போது தண்ணீர் குடிக்கலாம்.பூண்டு, வெங்காயம் மற்றும் சில மசாலாப் பொருட்கள் பல் துலக்கிய பிறகும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இது தவிர, மது அல்லது புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தாலும், அது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். எனவே, காய்கறிகள், பழங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ‘கிரீன் டீ’, ‘லெமன் டீ’யை உணவுகளுக்கு இடையிடையே குடிக்கலாம். சில நேரங்களில் நெஞ்செரிச்சல், இரைப்பையில் ஏற்படும் அழற்சி போன்ற செரிமானப் பிரச்னைகள், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாய் துர்நாற்றத்திலிருந்து காப்பாற்றும். ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குதல் கை கொடுக்கும். ‘ஃப்ளாஸ்’ (floss) செய்தல், அதாவது, பற்களுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்களையும், அழுக்குகளையும் நீக்குவது. நாக்கை சுத்தம் செய்தல், தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்தல், ‘மவுத் வாஷ்’ போன்றவற்றை பின்பற்ற வேண்டும். இத்தனை செய்தும், தொடர்ந்து வாயில் துர்நாற்றம் போகவில்லை என்றால் பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை கேட்கத் தயங்க வேண்டாம்.
தொகுப்பு: பாரதி
 
  
  
  
   
