Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலங்கமில்லாத அன்பினை மட்டும்தான் இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘எந்த ஒரு கடுமையான சூழ்நிலையிலும் நாம் எங்கோ கேட்கும் ஒரு இசை நம்மை சாந்தப்படுத்தி அமைதிப்படுத்திவிடும். இசைக்கு மயங்காதவர்களே இல்லை. இசை நம்முடைய மனநிலையை எப்படி எல்லாம் அமைதிப்படுத்தும் என்பது பற்றி பலரும் பேசக் கேட்டிருப்போம். அழகான ஒரு இசையை கொடுத்ததற்கு நாம் இசைக் கலைஞர்களை குறித்து வியந்து பேசுவோம். அதே இசை சிறப்புக் குழந்தைகளுக்குள் உள்ளது. அதனை வெளிக்கொண்டு வருவதுதான் நம்மிடையே இருக்கும் சவால்’’ என்கிறார் லட்சுமி. இவர் கடந்த 20 வருடமாக சிறப்புக் குழந்தைகளுக்கு இசை வகுப்புகள் நடத்தி அந்தக் குழந்தைகளின் திறமைகளை மேடையேற்றி அழகு பார்த்து வருகிறார்.

‘‘நிலக்கோட்டைதான் என்னோடசொந்த ஊர். அம்மா பாடல்கள் பாடுவாங்க. அதனால எனக்கு சின்ன வயசில் இருந்தே கர்நாடக சங்கீதம் சொல்லி கொடுத்தாங்க. நான் பயின்றது மட்டுமில்லாமல் நிறைய மேடைகளில் பாடல் பாடி பரிசுகளும் பெற்றிருக்கேன். அதே சமயம் எனக்கு சிறு வயது முதல் இருந்தே சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அதை எப்படி செய்யணும்னு அந்த வயசில் தெரியல.

அதன் பிறகு படிப்பு மற்றும் என் சங்கீதக் கலையில் என்னை ஈடுபடுத்த ஆரம்பித்தேன். அந்த காலக்கட்டத்தில் இணையம் என்பது கிடையாது. குரு-சிஷ்யை என்ற முறையில்தான் பாடல்களை கற்றுக் கொண்டோம். சந்தேகம் என்றாலும் குருவிடம்தான் நேரடியாக சென்று கேட்டு தெரிந்து கொள்ளணும். ஆனால் இப்போது அப்படி இல்லை. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். அதற்கு இணையம் மிகவும் உதவியாக உள்ளது.

காரணம், பல வித்வான்கள் இணையத்தில் தங்களின் அனுபவங்கள் மற்றும் சங்கீதம் குறித்த விவரங்களை பகிர்ந்து வருகிறார்கள். அதனைக் கொண்டு நான் ராகங்கள் குறித்த ஆய்வு மற்றும் அதனை குறித்து படித்துக் கொண்டிருந்தேன். அப்போது சில ராகங்களை ஆட்டிசம் பாதித்தவர்கள் கேட்கும் போது அது அவர்களுக்குள் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும் என்று தெரிய வந்தது. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது’’ என்றவர் அதன் பிறகுதான் சிறப்புக் குழந்தைகளுக்கு இசை வகுப்பு எடுக்க முடிவு செய்துள்ளார்.

‘‘நான் ஏற்கனவே ராகங்கள் குறித்த ஆய்வில் இருந்ததால், அதனை சிறப்புக் குழந்தைகளுக்கு செல்லித்தர முடிவு செய்தேன். என் வீட்டு அருகில் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி இருந்தது. அதில் நான் இசை ஆசிரியராக சேர்ந்து, அவர்களுக்கு இசை வகுப்பினை எடுக்க ஆரம்பித்தேன். நான் இவர்களுக்கு இசை சொல்லித் தரப்போகிறேன் என்று சொன்ன போது, இவர்களுக்கு இசை சொல்லிக் கொடுப்பது அவ்வளவு சுலபமில்லை. மற்ற குழந்தைகள் போல் கவனம் செலுத்த மாட்டார்கள்.

ஒருவருக்கு ஒருவர் சண்டைப் போட்டுக் கொள்வார்கள் என்றார்கள். ஆனால், அதெல்லாம் உண்மை இல்லை. ஆரம்பத்தில பாடல்கள் சொல்லிக் கொடுத்த போது அவர்கள் குனிந்து உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். முதலில் எனக்கும் மற்றவர்கள் சொன்னது போல் கவனிக்க மாட்டார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் ஒருநாள் நான் இசை வகுப்பிற்கு போகல, என்னுடைய வகுப்பினை வேறு ஒரு ஆசிரியர் எடுத்துக் கொள்வதாக கூறினார்.

நானும் சரி என்று சொன்னேன். ஆனால் அந்த ஆசிரியர் உடனடியாக என்னிடம் வந்து வகுப்பிற்கு அழைத்து சென்றார். காரணம், இவர் வகுப்பிற்கு சென்ற போது, மாணவன் ஒருவன் என் வருகைக்காக வகுப்பின் வாசலில் காத்திருந்திருக்கிறான். அவர் எதற்காக இங்கு நிற்பதாக கேட்ட போது, அவனுக்கு அதற்கு சரியான பதில் சொல்லத் தெரியல. மாறாக நான் பாடிய பாடல் ஒன்றை பாடி இருக்கான். அவர் அப்படி சொன்னதும்தான் எனக்கு புரிந்தது. சிறப்புக் குழந்தைகளுக்கு தனக்கு என்ன வேண்டும் என்பதை சொல்லத் தெரியவில்லை என்றாலும், அவர்களை சுற்றி நடப்பதை கூர்ந்து கவனிப்பார்கள். அதை உள்வாங்கிக் கொள்கிறார்கள்.

அவர்களுக்கு தேவையான போது அதை வெளிப்படுத்துவார்கள். இதை புரிந்து கொண்ட நாள் முதல் நான் இந்தக் குழந்தைகளுக்கு இசையினை முழு மூச்சாக சொல்லித்தர ஆரம்பித்தேன். பல பள்ளிகளுக்கு சென்று சிறப்பு வகுப்புகளும் எடுத்தேன். அதில் சில குழந்தைகளின் பெற்றோர்கள் வகுப்பில் சொல்லித் தரும் பாடல்களை அவர்கள் வீட்டில் பாடுவதால், பள்ளிக்கூடம் தாண்டி இசை வகுப்பினை வீட்டில் எடுக்கச் சொல்லி கேட்டுக் கொண்டார்கள். மாலை நேரங்களில் இவர்களுக்காக சிறப்பு வகுப்பினை எடுத்தேன். நான் வகுப்பு எடுப்பதைப் பார்த்து நிறைய சிறப்புக் குழந்தைகள் என்னிடம் இசையை கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் வந்தார்கள். தற்போது இதற்காக இசைப்பள்ளி அமைத்து அதில் கற்றுக் கொடுத்து வருகிறேன்’’ என்றவர், சிறப்புக் குழந்தைகளின் குணநலன்கள் குறித்து விவரித்தார்.

‘‘இவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்டவர்கள். ஒரே மாதிரி சிந்திக்கவும், நடந்து கொள்ளவும் தெரியாது. அவர்களால் அவர்களையே புரிந்துகொள்ள முடியாது. அதனால் அவர்களால் அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாது. அதனால்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை நான் அவர்களுடன் பழகிய பிறகுதான் புரிந்து கொண்ேடன். அதே குழந்தைகளை இசை மயக்கிவிடுகிறது. அது நல்ல அமைதியான மனநிலையை அவர்களுக்கு கொடுக்கிறது.

இதனாலேயே சிறப்புக் குழந்தைகள் இசை மீது ஆர்வம் செலுத்துகிறார்கள். இப்போது அவர்களிடம் நிறைய வித்தியாசங்கள் தெரிகிறது. அவர்களின் நடவடிக்கைளில் மாற்றம் தெரிகிறது. இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். ஆனால் பாடுவதில் திறமைசாலியாக இருக்கிறார்கள். இசையை கேட்டு உள்வாங்கி அதை தெளிவாக வெளிப்படுத்துகிறார்கள். அதை பார்த்து நானே வியந்திருக்கிறேன். பாடல்கள் பாடுவது தவிர இசைக் கருவிகளை வாசிப்பதிலும் ஆர்வம் செலுத்துகிறார்கள்.

டோலக்கு, கஞ்சிரா, மிருதங்கம் வாத்தியங்களை புரிந்து கொண்டு வாசிக்கிறார்கள். என்னிடம் இசைக்காக பயிற்சிக்கு வந்தாலும், அவர்களுக்கு கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் இருப்பதை அறிந்து அதற்கான பயிற்சி கொடுப்பது மட்டுமில்லாமல் அவர்களை மேடையில் ஏற்றியிருக்கிறேன். அவர்களுக்குள் இருக்கும் மனநிலையை அவர்களுக்கு வெளியே சொல்லத் தெரிவதில்லை என்பது மட்டும்தான் அவர்களின் பிரச்னை. சொல்லப்போனால் எல்லாம் தெரிந்த நாம்தான் அவர்களை விட ஆபத்தானவர்கள்.

இங்கு பயிற்சிக்கு வந்த பிறகு இவர்களின் மனநிலையினை பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மற்றவர்களும் புரிந்து கொள்ள முடிகிறது. இதுவே இவர்கள் பற்றிய விழிப்புணர்வு என்றுதான் நான் சொல்வேன். அவர்களை புரிந்து கொண்டாலே அவர்கள் நம்மிடம் நெருக்கமாகிடுவார்கள். இவர்களின் எதிர்பார்ப்பு கலங்கமில்லாத அன்பு மட்டும்தான்’’ என்றவர், இவர்களின் இசைப் பயணம் என்ற பெயரில் இவருக்கு கிடைத்த அனுபவங்களையும் தகவல்களையும் கொண்டு மூன்று தொகுதிகளாக புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

தொகுப்பு: மா.வினோத்குமார்