Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பனையில் பளபளக்கும் நகைகள்!

நன்றி குங்குமம் தோழி

தமிழகத்தில் அடிக்கிற வெயிலுக்கு பனை ஓலையில் பதநீர், கொஞ்சம் நுங்கும் சேர்த்து குடிக்கும் ேபாது உடலும் மனமும் குளுகுளுவென்று இருக்கும். பனைமரத்தில் இருந்து நுங்கு மட்டுமில்லாமல், பனம்பழம், பனங்கிழங்கு, பனைவெல்லம், பனங்கருப்பட்டி என பல உணவுப் பொருட்களை அந்த ஒற்றை மரம் நமக்கு தாரை வார்த்து தந்து வருகிறது.

அரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் தகவல் பரிமாற்றத்திற்காக பனை ஓலைச்சுவடிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. பல்லாயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்த அந்த சுவடிகள் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. உணவுப் பொருட்களாக மட்டுமில்லாமல், நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்தப்படும் பெருக்குமாறு, கைவிசிறி, கூடை, முறம், பெட்டி, குழந்தைகளுக்கான கிலுகிலுப்பை, தாம்பூலத்தட்டு, கூடை, பந்திப்பாய் என பல ெபாருட்கள் பனைஓலைகளைக் கொண்டு செய்யப்படுகின்றன. தமிழகத்தின் மாநில மரமான ‘பனை’யினை கொண்டு மாற்று வடிவில் பெண்களுக்கான ஆபரணங்களை வடிவமைத்து செய்து வருகிறார்கள் திருவண்ணாமலை அருகேயுள்ள வேடந்தவாடி கிராமத்தை சேர்ந்த நீலவேணி, கார்த்திகேயன் தம்பதியினர். இவர்கள் பெண்கள் அணியும் தோடு, ஜிமிக்கி, வளையல், நெக்லஸ் போன்ற விதவிதமான நகைகளை தயாரித்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்து வருகிறார்கள்.

‘‘நான் கணிதத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் பி.எட்டும் படிச்சிருக்கேன்’’ என்று பேசத் துவங்கினார் நீலவேணி. ‘‘ஆசிரியருக்கான பட்டப்படிப்பு முடித்ததால், அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அந்த வேலை கிடைக்கும் வரை சும்மா இருக்கப் பிடிக்காமல், எங்களுக்கு சொந்தமாக இருந்த மூன்று ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தோம். பாரம்பரிய விதைகள் தொடர்பான இயற்கை விவசாய கண்காட்சிகள் நடக்கும் போது அதில் நாங்களும் கலந்து கொண்டு, விதைகளைப் பற்றி தெரிந்து கொண்டோம்.

அந்த சமயத்தில்தான் பனை ஓலைகளில் பெண்களுக்கான நகைகளை வடிவமைக்க முடியும் என்று தெரிய வந்தது. அதற்கான பயிற்சியினை முறையாக எடுக்க ஆரம்பித்தேன். இப்போது கடந்த ஏழு வருடமாக பெண்களுக்கான நகைகளை பனை ஓலைகளில் வடிவமைத்து விற்பனை செய்து வருகிறேன்’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் கணவர் கார்த்திகேயன்.

“நான் ஆட்டோகேட் டிசைனிங் முடித்திருக்கிறேன். இயற்கை விவசாயத்தின் மேல் ஆர்வம் ஏற்பட நானும் என் மனைவியும் அதில் ஈடுபட்டு வந்தோம். அப்போது பனை சார்ந்த பொருட்கள் தெரிய வந்ததால், முதலில் பனை ஓலையில் இருந்து சதுர வடிவில் கம்மல் செய்து பார்த்தோம்.

நன்றாக வந்தது. அதைத் தொடர்ந்து வளையல், ஜிமிக்கி எல்லாம் செய்ய ஆரம்பித்தோம். நாங்க செய்த நகைகளை விதை திருவிழா ஒன்றில் விற்பனை செய்தோம். வரவேற்பு நன்றாக இருந்தாலும், போதிய வருமானம் கிடைக்கவில்லை. இருந்தாலும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று அதில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தோம்.

இந்த நகைகளை முழுக்க முழுக்க கைகளால்தான் செய்கிறோம். அதற்கான பிரத்யேக கருவிகள் உள்ளதா என்று தெரியவில்லை. அவ்வாறு இருந்தால் நிறைய நகைகளை செய்ய முடியும். பனை ஓலையை இரண்டு அல்லது மூன்று மி.மீ அகலத்திற்கு கிழிக்க வேண்டும். அதில் எந்த வித சாயமும் நாங்க சேர்க்காமல் நகைகளை செய்து வருகிறோம். சின்னதாக ஒரு கம்மல், ஜிமிக்கி செய்ய அரை மணி நேரமாகும். பெரிய நகைகள் செய்ய இரண்டு மணி நேரம் பிடிக்கும்.

திருமண நகைகளை இரண்டு நபர்கள் சேர்ந்து செய்தால் மூன்று நாட்களில் முடித்துவிடலாம். இதில் கற்கள் பதித்தால் பார்க்க மேலும் அழகாக இருக்கும். ஒரு மணப்பெண் அலங்காரத்திற்கு தேவையான கம்மல், நெத்திச்சூடி, நெக்லஸ், ஆரம், ஒட்டியாணம், வங்கி, ஜடைபிள்ளை வளையல் அனைத்தும் 2,500 ரூபாய் வரும். ரூ.50 முதல் 2,500 வரை நகைகளை விற்பனை செய்யலாம். பலர் பொன்னியின் செல்வன் குந்தவை செட் நகைகளும், திருமண செட் நகைகளைதான் விரும்பிக் கேட்கிறார்கள். பெண்களிடம் இந்த நகைகளுக்கு நல்ல

வரவேற்பு உள்ளது.

நகைகள் மட்டுமில்லாமல், எங்க வேடந்தவாடி கிராமத்தில் உள்ள வேதநாதீஸ்வரர் திருக்கோயில் திருவிழாவிற்கு பனையில் 16 அடி உயரத்தில் சிவலிங்கம் செய்து கொடுத்தோம். அதே போல் கும்மிடிப்பூண்டி விதை திருவிழாவிற்கு வந்திருந்த முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு மூன்றடி உயரத்தில் ஒரு சிவலிங்கம் செய்து பரிசாக ெகாடுத்தோம். இதைத் தவிர குழந்தைகளுக்கான ஹேர்பேண்ட் கிளிப் மற்றும் வேறு என்ன செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறோம்’’ என்றவர் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் மற்றும் நகைகள் செய்வது குறித்தும் பயிற்சி அளித்துள்ளனர்.

‘‘தமிழ், ஆங்கிலம் என தனித்தனி சப்ஜெக்ட் இருப்பது போல் கைவினைக்கு என தனிப்பட்ட பயிற்சி வகுப்பு இருக்க வேண்டும். இது குழந்தைகளின் கற்பனை திறனை மேலும் அதிகரிக்க உதவும். அவர்களின் சிந்தனை சிதறாமல் இருக்கும். மேலும், மகளிர் குழுவில் உள்ள பெண்களுக்கும் இதற்கான பயிற்சி அளித்தால், அதனைக் கொண்டு அவர்களும் ஒரு சிறு தொழில் ஆரம்பிக்க உதவியாக இருக்கும். மக்களிடம் பனை ஓலை நகைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இருப்பினும் பனை மரம் அதன் பயன்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்’’ என்றவர்கள், பனை மர நாயகன், பூம்புகார் மாநில விருது போன்ற விருதுகளை தம்பதி சகிதமாக பெற்றுள்ளனர்

தொகுப்பு: ஆர்.கணேசன்