Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிரச்னைகளை சமாளித்தாலே எந்தத் தொழிலும் நம் கைவசம்!

நன்றி குங்குமம் தோழி

உணவுத்துறையை பொறுத்தவரை பெரும்பாலும் அனுபவமிக்கவர்கள்தான் தலைமுறை தலைமுறையாக நடத்தி வருவார்கள். அதேபோல, முறைப்படி உணவு துறை சார்ந்த பட்டப்படிப்பு படித்தவர்கள் உணவகம் அமைப்பார்கள். சிலர் நன்றாகவும் சுவையாகவும் சமைப்பார்கள். அவர்கள் உணவுத் தொழிலுக்குள் இறங்குவாங்க. ஆனால் உணவகம் சார்ந்த எந்த அனுபவம் இல்லாமல் உழைப்பாலும் நம்பிக்கையாலும் ‘கைமணம்’ என்ற உணவகத்தை நடத்தி வெற்றிப் பாதையில் பயணிக்கிறார் விஷ்ணுபிரியா.

‘‘கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போதே எனக்கு ரேடியோ ஜாக்கியா வேலை கிடைத்தது. காலையில் கல்லூரி, மாலை நேரங்களில் ஆர்.ஜே.வாக வேலை பார்த்தேன்’’ என்று கூறும் விஷ்ணுபிரியா தனது வெற்றிக்கதையை நம்மோடு பகிர்ந்தார். ‘‘சென்னைதான் எனக்கு பூர்வீகம். பத்து வருடங்களுக்கு மேலாக ஆர்ஜேவாக வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் எனக்கு சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

அந்த ஆசைதான் இந்த உணவகத்தை தொடங்க வைத்தது. பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு முழு மூச்சாக உணவகம் அமைக்க முடிவு செய்தேன். ஆனால் அதில் பெரிய அளவில் அனுபவம் இல்லாததால், கிளவுட் கிச்சன் போல் ஆரம்பித்தேன். சென்னை, கோபாலபுரத்தில் உள்ள என்னுடைய வீட்டின் மாடிப் பகுதியில் கிளவுட் கிச்சனை அமைத்தேன். உணவுகளை ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ேதன்.

கொரோனா காலத்தில்தான் துவங்கினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த சமயத்தில் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்ததால் வீட்டில் சமைக்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. அவர்கள் எல்லோரும் என்னிடம் உணவினை ஆர்டர் செய்ய ஆரம்பித்தார்கள். அந்த நேரத்தில் அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டுமென நினைத்தேன். அதனால் மிளகும், சீரகமும் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட ரசம் சாதத்தினை எங்களின் மெனுவில் சேர்த்தோம்.

நல்ல வரவேற்பு கிடைத்தது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றவர்களும் இதனை ஆர்டர் செய்ய துவங்கினார்கள். அந்த நேரத்தில் மருத்துவர்கள் அறிவுறுத்திய ரசம் சாதம், முட்டை, சூப் என அனைத்தையும் நாங்க தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வந்ததால் அந்த ரசம் சாதம் காம்போ இன்று வரையிலுமே நமது உணவகத்தின் ஸ்பெஷலாக இருக்கிறது.

ஒரு கட்டத்தில் கிளவுடு கிச்சனாக இருந்ததை உணவகமாக மாற்ற விரும்பினேன். அதனை நான் தற்போது வசிக்கும் வீட்டில் அமைக்க திட்டமிட்டேன். அதனால் நாங்க வாடகை வீட்டிற்கு சென்றுவிட்டோம். கிளவுடு கிச்சன் நடத்தி வந்த வீட்டை முழுமையாக ரெஸ்டாரன்டாக மாற்றினேன். அப்படித்தான் ‘கைமணம்’ உருவானது’’ என்றவர் உணவகத்தின் சிறப்பு உணவுகள் குறித்து பகிர்ந்தார்‘‘உணவகமாக மாற்றிய பிறகு அதில் மக்கள் விரும்பும் உணவினை கொடுக்க வேண்டும். அதனால் செட்டிநாடு, சைனீஸ், அரேபியன் என அனைத்து உணவுகளையும் அறிமுகப்படுத்தினேன். காலை 11:30 முதல் இரவு 12 மணி வரை உணவகம் செயல்படுகிறது.

சீரகச்சம்பா மற்றும் பாசுமதி அரிசியில் பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், சிக்கன், மட்டனில் பல வெரைட்டியான உணவுகள், கடல் உணவுகள் இங்குண்டு. மினிமீல்ஸ் இங்கு ஸ்பெஷல். அதில் ஒரு சப்பாத்தி, ஆம்லேட், குலோப் ஜாமூன் இதனோடு மூன்று வகையான வெரைட்டி ரைஸ் இருக்கும். இதனை ரூ.99க்கு தருகிறோம்.

செட்டிநாடு சிக்கன் ஃப்ரைடு ரைஸ், பொரிச்ச கோழி இரண்டுமே எங்களின் சிக்னேச்சர் உணவுகள். ஃப்ரைடு ரைசில் நம்ம ஊர் மசாலாக்கள் சேர்த்து அதை செட்டிநாடு ரைஸாக மாற்றி கொடுக்கிறோம். சைவத்தில் மஸ்ரூம், பன்னீர், கோபி என அனைத்து ஃப்ரைடு ரைஸ் உண்டு. சிக்கன் கபாப், சிக்கன் தந்தூரி, சிக்கன் சூப், மட்டன் சூப், வெஜ் சூப், மட்டன் தலைக்கறி, மட்டன் சுக்கா, மட்டன் குடல், கறிதோசை, புரோட்டாவும் இங்குண்டு. கடைக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் என்ன சாப்பிட வேண்டுமென நினைக்கிறார்களோ அதை நாங்கள் கொடுக்க வேண்டும். அதனால், மதியம் கொடுக்கும் உணவுகளை இரவு நேரத்திலும் வழங்கி வருகிறோம்.

பல வகை உணவுகள் இங்கு கொடுத்தாலும், எங்களின் பிரியாணி உணவினை சாப்பிடவே மக்கள் விரும்பி வருகிறார்கள். சிக்கன், மட்டன், இறால் என அனைத்தையும் தொக்கு பிரியாணியாக கொடுத்து வருகிறோம். இவை தவிர பாசுமதி அரிசி பிரியாணியும் உண்டு.நான் ஓட்டலுக்கு சாப்பிட போகும் போது அங்கு என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைப்பேனோ அவை அனைத்தும் என்னுடைய உணவகத்தில் கொடுக்கிறேன்.

இங்கு சமைக்கப்படும் உணவுகள் சுவையாக மட்டுமில்லாமல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு உணவினையும் பார்த்து பார்த்து சமைக்கிறேன். காய்கறி முதல் இறைச்சி வரை நானே நேரில் சென்று வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். கடல் சார்ந்த உணவினை நேரடியாக மீனவர்களிடம் இருந்தே வாங்குகிறேன். அதேபோல் உணவிற்கு தேவையான மசாலாவும் அம்மா, சித்தி அவர்களின் ஆலோசனைப்படி வீட்டிலேயே தயார் செய்கிறேன். கடை மசாலாக்களை பயன்படுத்துவதில்லை. எந்த சமையலுக்கு என்ன எண்ணெய் தேவையோ அதைத்தான் பயன்படுத்துகிறேன்.

உணவுத்தொழிலை பொறுத்தவரை பிரச்னைகள் இருக்கும். அதை சமாளித்து வர வேண்டும். அதே சமயம், நம்மை நம்பி சாப்பிட வரும் வாடிக்கையாளர்களையும் கவனிக்க வேண்டும். உண்மையான உழைப்பு இருந்தால் எந்தத் தொழிலிலும் சாதிக்க முடியும். அதற்கு நானே சாட்சி’’ எனக் கூறி மகிழ்கிறார் விஷ்ணுபிரியா.

தொகுப்பு: ச.விவேக்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்