Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குடியுரிமை பெற்றவர்களால் நிறைந்தது அமெரிக்கா!

நன்றி குங்குமம் தோழி

கவிதா இராமசாமி

டாலர் தேசமான அமெரிக்கா செல்வது சுலபமில்லைதான். அதற்கான சட்ட வழிமுறைகள், முறையான அனுமதி எனக் கனவு தேசத்திற்காக காத்திருப்போரின் பட்டியல் நீளம். அதிலும் இந்தியாவில் இருந்து H-1B, F-1 மற்றும் B-2 விசாக்களுக்கு விண்ணப்பித்தவர்களின் காத்திருப்போர் பட்டியல் மிக மிக நீண்டது.அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்தே, முறையான ஆவணமின்றி குடியேறியவர்கள் நிலை என்ன என்பதை, செய்திகளில் தொடர்ந்து பார்த்து வரும் நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்க நாட்டின் இமிகிரேஷன் அட்டர்னியாகவும்... அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் வழக்காடும் உரிமை பெற்றவராகவும்... அந்நாட்டின் பிரபல பதிப்பு ஒன்றில் The Top Attorneys of North America என்கிற பட்டியலில் இடம்பிடித்தவராகவும் வலம் வரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் கவிதா இராமசாமியை சமீபத்தில் சந்தித்து, இமிகிரேஷன் அட்டர்னியாக அவரது செயல்பாடுகள் குறித்து பேசியதில்...

‘‘பெண் வழக்கறிஞர்கள் இணைந்து செயல்படும், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் அலுவலகம் என்னுடையது. அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்ஸி மாநிலத்தில் உள்ள சட்ட அலுவலகத்தில் 7 பெண் வழக்கறிஞர்களும், இந்தியாவில் செயல்படும் அலுவலகத்தில் 6 பெண் வழக்கறிஞர்களும் வேலை செய்கிறார்கள்’’ என்ற கவிதா இராமசாமியின் அப்பா பிரபல மரபுக் கவிஞர் இலந்தை இராமசாமி என்பது குறிப்பிட்டத்தக்கது. அமெரிக்க இமிகிரேஷன் அட்டர்னி வழக்கறிஞர் கவிதாவிடம் மேலும் பேசியதில்...

‘‘நான் அமெரிக்கா வந்து 29 வருடங்கள் ஆகின்றது. எனக்குத் திருமணம் நடந்தது 1996. சென்னை சட்டக் கல்லூரியில் அப்போது பி.எல். முடித்திருந்தேன். எனது கணவர் பாலாஜி H-1B விசாவில் அமெரிக்க நாட்டின் மென்பொருள் துறை ஒன்றில் பணியில் இருந்தார்.

எனவே அவருடன் அமெரிக்கா வந்து, இங்குள்ள ஜான் மார்ஷல் லா ஸ்கூலில் சட்ட மேல் படிப்பை முடித்து, பார் எக்ஸாம் தேர்வெழுதி, நியூயார்க் மாநிலத்தில் பிராக்டிஸ் செய்வதற்கான உரிமம் பெற்றதோடு, அமெரிக்க குடியேற்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் (AILA) உறுப்பினராகவும் இருக்கிறேன்’’ எனப் புன்னகைத்தவர், ‘‘கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்காவின் இமிகிரேஷன் அட்டர்னியாக செயல்பட்டு வருகிறேன்’’ என சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டவரிடம், அமெரிக்க நாட்டின் குடியேற்ற உரிமைக்கான விசா நடைமுறைகள் குறித்த கேள்விகளை முன்வைத்ததில்...

‘‘அமெரிக்கா என்கிற நாடே குடியுரிமை பெற்றவர்களால் நிறைந்ததுதான். எங்கெல்லாம் திறமையானவர்கள் இருக்கிறார்களோ அவர்களைக் கொண்டுவந்து, உருவானதே அமெரிக்கா என்கிற நாடு’’ என மீண்டும் புன்னகைத்தவர், ‘‘அமெரிக்க நாட்டிற்குள் வருவதற்கு, A to Z 26 விதமான விசா நடைமுறைகள் உள்ளது. அதிலும் சில உள்பிரிவுகள் உண்டு. இதில் H-1B விசா என்பது, பிற நாட்டின் தொழில்நுட்ப வல்லுநர்கள் (IT) அமெரிக்க நாட்டில் தங்கி குறிப்பிட்ட காலம் பணி செய்கிற விசா நடைமுறை. இது தற்காலிக விசாதான். இவர்களை non imigrant எனச் சொல்வார்கள்.

பெரும்பாலும் இந்தியர்கள் உள்ளே வருவது H-1B விசாவில். இதில் திருமணம் ஆனவர்கள், வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளையும் அழைத்து வந்தால், அவர்களுக்கு வழங்கப்படுவது H-4 டிபென்டென்ட் விசா. H-1B விசாவில் இருந்து க்ரீன் கார்டுக்கு மாற நினைத்தால், குறைந்தது 15 முதல் 20 வருடங்கள் எடுக்கும். அதேபோல் நிரந்தரக் குடியுரிமைக்கான க்ரீன் கார்டில் EB1, EB2, EB3 எனவும் இருக்கிறது. அதாவது, வேலை வாய்ப்பு அடிப்படையிலான விசா நடைமுறையில் இருந்து க்ரீன் கார்டுக்குச் செல்லும் நடைமுறை இது.

தங்கள் தனித் திறமைகளை காட்ட அமெரிக்க நாட்டிற்கு வரும் கலைஞர்களுக்காக அவுட்ஸ்டான்டிங் எபிளிட்டி விசா என்கிற நடைமுறையும் உள்ளது. இது சுருக்கமாக O1 விசா எனப்படும். இதுபோல் பல்வேறுவிதமான விசா நடைமுறைகள் உள்ளது. இதில், நான் எம்ப்ளாய்மென்ட் இமிகிரேஷன், ஃபேமிலி இமிகிரேஷன், சிட்டிஷன்ஷிப், பெர்மனென்ட் ரெசிடென்ஷி, லேபர் சர்டிபிகேஷன், non imigrant விசா நடைமுறைகளை கவனித்து வருகிறேன். எனது அலுவலகம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, மற்றும் பெங்காலி மொழிகளிலும் சட்ட ஆலோசனை வழங்குகிறது.

அமெரிக்க நாட்டிற்கு வர முயற்சிப்பவர்களின் சரியான ஆவணங்களைப் பெற்று, சட்ட நடை முறைகளுக்கு உட்பட்டு, பேப்பர் வொர்க்காக மாற்றி, டாக்குமென்ட் செய்து அனுப்புவதே எனது பணி. சுருக்கமாகச் சொன்னால் ஆவணங்களின் வழியாக குடியேற்ற உரிமை பெற வாதிடுவது.இது தவிர நானும் எனது கணவருமாக 25 வருடங்களுக்கு மேலாக ‘மித்ர’ என்கிற அமைப்பை இங்கு நடத்தி வருகிறோம். ‘மித்ர’ என்றால் தோழமை. வெளிநாடுகளில் இருந்து வந்து, அமெரிக்க நாட்டில் குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களின் சட்டப் பிரச்னைக்கு உதவுவதே ‘மித்ர’வின் நோக்கம். குறிப்பாக பாதிக்கப்படுவதில் தமிழ்ப் பெண்களே அதிகம்.

காரணம், அமெரிக்கா வந்த பிறகு, கணவனால் அவர்கள் நிராதரவாக மாறினால், அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வு இன்றி இருப்பார்கள். இந்த நிலையில் அவர்களை மீட்டு கவுன்சிலிங் கொடுப்பது, சரியான வழிமுறைகளைக் காட்டுவது, அதிகாரிகள் முன்பு அவர்களையே ரெப்ரெசென்ட் செய்ய எஜுகேட் செய்வது எனசெயல்படுகிறோம். மேலும், இவர்களின் குடியுரிமை சார்ந்தும், வேலை தொடர்பாகவும் ஆதரவுக்கரம் நீட்டி, தொடர்புகளை உருவாக்கித் தருவது, சட்ட உதவிகள் எனவும் உதவுகிறோம். இதுவரை 300க்கும் மேற்பட்ட பெண்களை ‘மித்ர’வில் தங்க வைத்து, வாழ்வை மீட்க உதவியுள்ளோம்.

உதாரணத்திற்கு திருமணம் முடிந்து இங்கு வந்த பிறகே, கணவர் இன்னொரு பெண்ணோடு உறவில் இருக்கிறார் என்பது பெண்ணுக்குத் தெரியவரும். இந்த நிலையில் குழந்தையும் பிறந்திருக்கலாம். வாழ விரும்பாமல் அந்தப் பெண் விவாகரத்து பெற்றால், H-1B விசாவில் உள்ள கணவனின் டிபென்டென்ட் விசாவை மனைவி இழக்க நேரிடும். ஒருவேளை குழந்தை அமெரிக்க நாட்டில் பிறந்திருந்தால், குழந்தைக்கு மட்டுமே குடியுரிமை இருக்கும். கணவர் க்ரீன் கார்டு பெற்றவர் எனில், U விசா நடைமுறை மனைவிக்கும் உள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தாய்நாடு திரும்பவும், வேறு விசா நடைமுறைக்கு மாறவும், 30 நாட்கள் தங்குவதற்கு அரசு இடம் கொடுக்கும். அதன் பிறகு அந்தப் பெண் நடுத்தெருவில் நிற்கும் நிலைதான். இப்படியாக எதிர்பாராத சூழலில் பாதிக்கப்படும் பெண்களை மித்ரவில் தங்கவைத்து, கவுன்சிலிங் வழங்கி, வேறு விசாவுக்கு மாற, நானும் எனது கணவரும் பாலமாக செயல்படுவோம்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் பெற்றோர் இருவரும் கண்முன் தற்கொலை செய்து இறந்துவிட்ட நிலையில், தனியாக தவித்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை மீட்க, தமிழகத்தில் இருந்து வந்த குழந்தையின் சித்தி அபிநயா, இங்கேயே ஒன்றரை ஆண்டுகள் தங்கி, அமெரிக்க குடியுரிமை பெற்ற குழந்தையை மீட்க சட்டப் போராட்டம் நடத்துவதற்கு நானும் எனது கணவர் பாலாஜியும், தேவையான வழிகாட்டுதல்களை, சட்ட உதவிகளை செய்தோம்’’ என்பதைக் குறிப்பிட்டவர், ‘‘இத்தனை கஷ்டங்களுக்கு நடுவிலும், சொந்த தேசத்தையும், ரத்த உறவுகளையும் விட்டுவிட்டு வருகிறவர்களை, இங்கேயே நிரந்தரமாக இருக்க வைப்பது பணம் அல்ல... இங்கிருக்கும் வாழ்க்கை முறைதான்’’ என்கிறார் மிகவும் அழுத்தமாக.

‘‘அமெரிக்காவைப் பொறுத்தவரை வாழ்வது இங்கு சுலபம். அதற்கான சுதந்திரம் நிறைய இருக்கிறது. அதேபோல் நேர்மையாக உழைக்கத் தயாரெனில், வாய்ப்பையும் வருமானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்... முன்னேறலாம். அதற்கான வழி இருந்து கொண்டே இருக்கும். அரசு சார்ந்த வேலைகள், அதற்கான வழிகாட்டுதல் முறைப்படி முடிக்கப்பட்டு மெயிலில் நம்மைத் தேடி வந்து சேரும். இதற்காக யாரையும் நேரில் பார்க்க வேண்டும், வரிசையில் காத்திருக்க வேண்டும், லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் எதுவும் கிடையாது.

பொதுவெளிகளில் கடைபிடிக்கப்படும் சட்டதிட்டங்களை யாரும் இங்கு தவிர்க்க முடியாது. நள்ளிரவு என்றாலும், விதிகளை மதித்து சிக்னலில் நின்றுதான் யாராக இருந்தாலும் கடந்து செல்வார்கள். இயல்பிலேயே அது வந்துவிடும்’’ என்றவர், கணவர் பாலாஜியோடு இணைந்து, சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில், பெற்றோரை இழந்து நிராதரவான குழந்தைகளுக்காக, அரசு அனுமதியோடு ‘கனவகம்’ என்கிற தொண்டு நிறுவனத்தை சத்தமில்லாமல் நடத்தி வருவதையும் குறிப்பிட்டு விடைபெற்றார்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்