Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்னொரு கைகளிலே நானா..?

நன்றி குங்குமம் தோழி

வட்ட மேசை விவாதம் போல்…

அப்பா, அம்மா, மாமா, அத்தை என்று நால்வரும் வாணியை சூழ்ந்திருந்தனர். அனைவர் கண்களிலும் வாணியை எப்படியாவது மீண்டும் வாழவைக்கும் ஆர்வம் தெரிந்தது.இரண்டு வருடங்களுக்கு முன்பு… இதே ஊரில் வாணியின் திருமணம் விமரிசையாகவே நடைபெற்றது. அவள் கணவன் அதிர்ஷ்டக்காரனாக தெரிந்தான்.படிப்பு, பண்பு, உருவம் என்று சிறப்பாக திகழ்ந்த வாணி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, அரசு ஊழியராகவும் ஆனாள்.வரன்களுக்கு கேட்கவா வேண்டும்… குவிந்தன. மதன் தேர்வு செய்யப்பட்டான். பெண் பார்த்த அன்று “என்னை பிடிச்சிருக்கா..?” என்ற கேள்விக்கு… “என் குடும்பத்துக்கு உங்கள பிடிச்சா… எனக்கும் பிடிக்கும்” என தைரியமாக கூறியவள் வாணி.

வழக்கம்போல் விதி நல்லவர்களிடம் விளையாடும் என்றநிலை வாணிக்கும் வந்தது.ஒரு சாலை விபத்தில் மதன் மறைந்தான். அவன் ஞாபகமாக ஹரிஷ் என்ற குழந்தை சிரித்துக் கொண்டிருந்தது.

வாணியை இளம் விதவையாக யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எனினும் அதுதானே உண்மை!ஒரே மகளின் எதிர்காலம் பற்றிய பயம் பெற்றோர்களுக்கு வர ஆரம்பித்தது. தங்களுக்குப் பிறகு..?ஒரு வருடம் கழித்து ஒரு டிவி விவாதத்தில் மறுமணம் அவசியம் என ஒருத்தி வாதிட்டபோது… ‘கரெக்ட்தான’ என்று அம்மா கைதட்ட, வாணி அம்மாவை வெறுப்பாக பார்த்து…“ஒருவேளை அப்பா போயிருந்தா… நீ மறுபடியும் கழுத்த நீட்டியிருப்பியா?” கோபத்ேதாடு கேட்க… அம்மா திணறிப்போனாள்.

இது தெரிந்த அப்பா… “என்ன இவ…? இப்படியே இருக்கப்போறாளா… இருக்கத்தான் முடியுமா? இந்த உலகம் விடுமா?” மனைவியிடம் வருந்தினார்.பிறகு, சில சமயங்களில்… மறுமணம் சரிதான் என்ற தொணியில் பெற்றவர்கள் பேசினாலும்… உடனே வாணி நெருப்பாக மாறினாள்.எல்லாம் ஒரு எல்லையை தொடத்தானே வேண்டும்? அம்மா தம்பியையும், அப்பா தங்கையையும் துணைக்கு அழைத்து, வாணியை கட்டாயப்படுத்த நினைத்து… இன்று பஞ்சாயத்து ஆரம்பித்தது.குழந்தை தூங்குவதை உறுதி செய்து, கதவை மெதுவாக சாத்திவிட்டு, ஹாலுக்குள் வந்த வாணி… தான் பேச தயார் என்பது போல் நின்றாள்.

அம்மாவின் பாசம், கோபம் கலந்து வெளிப்பட்டது. “இங்க பாருடி… உன்னோட காலம் இப்படி ஒத்தைல போறத என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியாது. அப்பா போய்ட்டா என்ன செய்வேன்னு கேக்கறதுல நியாயம் இல்ல. நாம் நடந்தத வெச்சுதான் பேசணும். யூகமா கேக்கறது தப்பு. இப்ப நாங்க ஆசப்படறது உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கணும். குழந்த மட்டும் வாழ்க்கை இல்ல. அது கடமை. நாளைக்கு வயசானா நாங்களும் பாரமாய்டுவோம். உன்னால சமாளிக்க முடியாது. உனக்குன்னு ஒரு துணை வேணும்… இப்ப உன்னோட சூழ்நிலை தைரியம். யாரும் வேண்டாம்னு தோணும். ஆனா, பின்னாடி உடம்பும் மனசும் சோர்வானா அனாதையா உணருவ. நாங்க பல விஷயங்கள பாத்து, கேள்விப்பட்டு அனுபவத்துல சொல்றோம். புரிஞ்சுக்க!” கொட்டித் தீர்த்தாள் அம்மா.

இப்போது அப்பா முறை.“உனக்கு என்ன? எல்லாம் தெரியும்கிற நெனப்பா? உன்னை பெத்தவங்க மனசுல என்ன எதிர்பார்ப்பு இருக்கும்… அதுல நியாயம் இல்லாமலா போகும். நாளைக்கு நமக்கும் ஒரு ஆம்பள குழந்த இருக்கே… அப்பா இல்லாம அது எப்படி நடந்துக்கும்னு யோசிக்கமாட்டியா…? எதுலயும் உன்ன வச்சுத்தான் முடிவு எடுப்பியா? இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும்!”வாணி அமைதியாகவே இருந்தாள். பெற்றவர்களது நிர்பந்தம் புரிந்தது. ஒருவகையில் அவர்களது மனதை காயப்படுத்துவதும் புரியாமல் இல்லை. ஆனாலும்..?அத்தை வாணியை நெருங்கி வந்து அவள் தலையை வாஞ்சையுடன் தடவி விட்டாள்.

“கண்ணு… உங்கப்பா, அம்மா சொல்லாதத நான் சொல்லப்போறதில்ல… ஆனா, எனக்கு என்ன தோணுதுன்னா… இந்த உலகத்துல நாம நல்ல வாழ்க்கை வாழப் பிறந்திருக்கோம். அதுக்கான வசதியையும் கடவுள் கொடுத்திருக்கான். அப்பறம் ஏன் துறவி மாதிரி தனியா கஷ்டப்படணும்? மனைவி இறந்திட்டா ஆம்பளைங்க ஏன் இரண்டாம் தாரம் தேடிக்கிறாங்க? மீதி வாழ்க்கைய நரகமா மாத்திக்கணும்னு சாஸ்திரமா என்ன? ஆணும், பெண்ணும் சமம்னு நினைச்சா… நீ இன்னொருத்தருக்கு வாழ்க்கைப் படறதுல தப்பில்ல கண்ணு..!” அழகாக சொன்னாள் அத்தை!

வாணி குனிந்த தலை நிமிராமல், “மாமா… உங்க கேள்வியும் கேட்டீங்கன்னா நான் மொத்தமா பதில் சொல்ல வசதியா இருக்கும்” என்று சொல்ல… மாமா கனைத்துக் கொண்டு ஆரம்பித்தார்.

“நான் பேசறது உனக்கு வருத்தமா இருந்தா சாரி... மன்னிச்சிடு. நீ எந்தக் காலத்துப் பொண்ணு? அந்தக் காலம்னா உடன்கட்டை ஏறி இருக்கணும். இல்ல இந்தக் காலம்னா இப்ப மாடர்ன்டேஸ்ல ஒரு கம்பேனியன் இல்லாம பாதுகாப்பா வாழமுடியாது! கம்பேனியன்னா விஷயங்கள ஷேர் பண்ணிக்கறதும்தான்! பெண்கள் எவ்வளவோ முன்னேறிட்டாங்க.

சாதனைகளுக்கும் பஞ்சமில்ல. இதுல இந்த வயசுல செகன்ட் மேரேஜ் வேண்டாம்னா என்ன அர்த்தம்? நீ எதுக்கோ பயப்படற..? சிங்கிள் பேரன்ட்டா ஒரு கஷ்டத்த ஏன் அனுபவிக்கணும்? இப்ப கல்யாணம் செஞ்சுகிட்டா… ஒரு ஃபாதரோட கான்ட்ரிபியூஷனும் குழந்தைக்கு கிடைக்கும்! நல்ல ஆண்களும் இருக்காங்க. நம்பனும்… இல்ல உன் இஷ்டப்படிதான் இருப்பேன்னு அடம்பிடிச்சா அது உன்னோட இழப்பா மட்டும் இருக்காது. மத்தவங்க மனசை நோகடிக்கிற பாவத்தையும் பண்ற புரிஞ்சுக்க! பெரிய பெண்ணியவாதியா காட்டிக்காத…” உறுதியுடன் கூறினார். பிறகு ஒரு கனத்த அமைதி அங்கு நிலவியது. இப்போது வாணியின் முறை… தன் மனசாட்சியுடன் பேசிய அவள் தற்போது அவர்களுடன் பேசத் துவங்கினாள்.

“முதல்ல ஒரு விஷயத்த நான் தெளிவுபடுத்திக்கிறேன். உங்களோட பேச்சுல உள்ள அக்கறைய நான் புரிஞ்சுக்கறேன். அதேமாதிரி என் பேச்சுல உள்ள என் உணர்வை நீங்களும் புரிஞ்சுக்கணும்.

அம்மா… நீ குழந்தைய வளக்கறது மட்டும் வாழ்க்கை இல்லே. ஒரு துணையோட வாழணும். அதுதான் வாழ்க்கைன்னு சொன்ன… ஆனா, வாழ்க்கைல கணவன்கிறது ஒரு பகுதிதான். அந்த ஒரு வாய்ப்பு எனக்கு அமையல. ஒரு வேளை இரண்டாவது கணவனும் ஒரு பேச்சுக்கு கேக்கறேன் திடீர்னு போய்ட்டா… நான் மூணாவதை தேடிப் போகணுமா… சொல்லும்மா… அப்பறம் அப்பா…! பெத்தவங்களோட எதிர்பார்ப்புக்கு என்ன மரியாதை.

அப்பறம் அந்தக் குழந்தை அப்பா இல்லாம எப்படி நடந்துக்கும்னு கேட்டாரு. எந்த புது ஆணும், தன் மனைவியோட முதல் கணவனுக்கு பிறந்த குழந்தைய முழுமனசா ஏத்துப்பார்னு எனக்குத் தோணல… அதனால குழந்தையோட நடவடிக்கை மோசமாகத்தான் போகும். விதிவிலக்கு இருக்காதான்னு கேக்காதீங்க... அதை நம்பி வாழ்க்கைய அமைச்சுக்க முடியாது. பொதுவாகத்தான் அணுகனும், அப்பறம் பெத்தவங்க எதிர்பார்ப்புன்னா… அதுக்குதானே முதல் கல்யாணம் செஞ்சுகிட்டேன். மறுபடியும்னா நோ! இப்ப அத்தை பாவம் அவங்க! நான் துறவியா இருக்கணுமான்னு கேக்கறாங்க… என் குழந்தைய வளத்துகிட்டு இந்த சமுதாயத்தோட ஒத்து வாழத்தான போறேன்..? உறவுகள நேசிக்கத்தான போறேன். இது எப்படி துறவு வாழ்க்கையாகும்?

ஒருவேளை கணவனோட இணைந்து தாம்பத்தியமா வாழனும்னா அதுபத்தி கடைசியா சொல்றேன்.கடைசியா மாமா…! ஒண்ணு உடன்கட்டை ஏறு… இல்ல மறுகல்யாணம்… அப்படின்னு சொன்னாரு. இதுக்கு மாறா பெண்ணியவாதம் பேசாதே… அப்பறம் ஒரு அப்பாவோட அன்பு குழந்தைக்கு கிடைக்காம போய்டும்னு சொன்னாரு ஸ்டெப்பாதர். உண்மையான அப்பாவா மாற முடியாது. பெண்ணியவாதிங்க மறுமணத்த ஆதரிப்பாங்க. நான் மறுக்கறேன்.

எனக்குன்னு ஒரு எண்ணம், கருத்து இருக்கக்கூடாதா? அதைவிட உணர்வுன்னு ஒரு முக்கிய விஷயத்த நீங்க எல்லோரும் மறந்திட்டீங்க! ஆமாம். அந்த மன உணர்வுதான் என்னோட இரண்டாம் கல்யாணத்த தடுக்குது! அத தயவுசெய்து புரிஞ்சுக்குங்க. நான் ஏதோ ஒரு காரணத்துக்காக இன்னொரு ஆண்மகன கணவரா ஏத்துக்கிட்டா அவர் என்ன சும்மா பேசிட்டு வேலைக்கு மட்டும் போறவரா இருப்பாரா? நான் உளமார என்னோட கொஞ்ச காலம் வாழ்ந்த கணவர மறந்து இவர என் கணவரா வரிச்சு உள்ளத்துல ஏத்துக்கணும். ஒன்னா பேசி, சிரிச்சு, தூங்கி, இன்னும் புரியும்படி சொல்லனும்னா கட்டில்லயும் வாழ்ந்தாகணும்.

ஒரு புது கையோட ஸ்பரிசத்த நான் அனுமதிக்கணும். அதுக்கு ஒரு மனதைரியம் வேணும். சத்தியமா அது என்கிட்ட இல்ல. இன்னொரு ஆணோட நான் ஐக்கியமாக முடியும்னு தோணல. சொல்லப் போனா அருவெறுப்பா இருக்கு! நினைக்கவே பதட்டமா இருக்கு. இப்படியான உள்ளுணர்வோட நான் எப்படி இன்னொரு துணைய தேடிக்க முடியும்? நம்ப மாமா எந்தக் கல்யாணத்துக்குப் போனாலும் பாயசம் சாப்பிட மாட்டாரு. காரணம், ஏலக்காய் வாசனை அலர்ஜி! ஒரு சாதாரண ஒவ்வாமையே ஒரு பொருள தள்ளிவைக்க சொல்லுது.

என்னோட அலர்ஜி எவ்வளவு பெரிய விஷயம்! இது புரியாம சர்வசாதாரணமா ‘கல்யாணம் பண்ணிக்க... கல்யாணம் பண்ணிக்க’ன்னு வற்புறுத்தறது நியாயமா? ஊர்ல மத்தவங்க பண்ணிக்கறாங்கன்னா… அது அவங்க உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம்! ஒரு பெண்ணுக்கு தனிப்பட்ட உணர்வு இருக்கக்கூடாதா..? ஊரோட ஒத்துபோய்தான் ஆகணும்னு சொல்லி கட்டாயப்படுத்தி ஒரு ஆணோட சேர்த்து வச்சா அதுக்கு பேரு என்ன தெரியுமா..? தயவு செஞ்சி என்னை என் போக்குல விடுங்க!”ஒரு அமைதியான கர்ஜனையுடன் வாணி சொல்லி முடிக்க… மாமா ஸ்தம்பித்து கையெடுத்து கும்பிட்டார்.அத்தை கண்களில் நீர் கசிய… வாணியின் கைபிடித்து முத்தமிட்டாள். அப்பா, என்ன பதில் சொல்வதென்று புரியாமல் தலைகுனிந்தார். அம்மா, வாணியை கட்டிக் கொண்டாள். அந்த அணைப்பால் ஒரு புரிதல் தெரிந்தது.

தொகுப்பு: கீதா சீனிவாசன்