Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கற்றாழையும் கூந்தல் பராமரிப்பும்!

நன்றி குங்குமம் தோழி

வெயில் காலம் வந்தாச்சு... சருமம் மற்றும் கூந்தல் இரண்டையும் நாம் பராமரிக்க ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக கூந்தலுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முறையான பராமரிப்பு மேற்கொண்டாலே போதும் கூந்தலின் வளர்ச்சியும், பொலிவும் இழக்காமல் பாதுகாக்க முடியும். கோடைக்காலத்தில் கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களை பயன்படுத்தும் போது அவை சருமத்திலும், கூந்தல் மயிர்க்கால்களான தலையின் ஸ்கால்ப் பகுதியிலும் வேறுவிதமான அரிப்பு க்பிரச்னையை உண்டாக்கும் வாய்ப்புள்ளது. அதனால் கூந்தலுக்கு பாதுகாப்பு தரும் இயற்கை பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது.

அதில் கூந்தலின் பாதுகாப்புக் கவசமாக முதல் இடத்தில் இருப்பது ஆலோவேரா என்று சொல்லக்கூடிய கற்றாழை மட்டுமே. இவை கூந்தலின் பிசுபிசுப்பை போக்குவதில் சிறப்பாக செயல்படும். இதனை எவ்வாறு மற்றும் எதனுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம். அதற்கு முதலில் கற்றாழை மடல்களை எடுத்து சுற்றிலும் இருக்கும் முட்களை நீக்க வேண்டும். பிறகு அதனை தண்ணீரில் அரைமணி நேரம் ஊறவிடவும். கற்றாழையில் இருக்கும் மஞ்சள் நிற திரவமானது நீரில் வெளியேறிவிடும். இந்த மஞ்சள் திரவத்தை வெளியேற்றிய பிறகுதான் கற்றாழையை பயன்படுத்த வேண்டும்.

கற்றாழை + தயிர்

கற்றாழை மடல்களை வெட்டி உள்ளிருக்கும் நுங்கு போன்ற பகுதியை எடுத்து அதில் சம அளவு தயிர் கலந்து மிக்ஸியில் மைய அரைக்கவும். இதனை அரைக்க தண்ணீர் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. திக்கான பேஸ்ட் அல்லது ஜெல் போன்ற கன்சிஸ்டென்சியில் இருந்தால் போதும். தலையை சிக்கில்லாமல் சீவிக்கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்துள்ள ஆலோவேரா தயிர் கலவையை தலையின் ஸ்கால்ப் பகுதி முதல் நுனிவரை தடவி 20 நிமிடங்கள் ஊறவைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் கூந்தலின் உஷ்ணம் நீங்கும். வாரம் ஒருமுறை இதை செய்துவந்தால் கடும் வெப்பத்திலும் கூந்தலில் பிசுபிசுப்பு இல்லாமல் பளபளப்பை காணலாம்.

​கற்றாழை + வெந்தயம்

அதிகப்படியான குளிர்ச்சியை கொண்டது ​கற்றாழை + வெந்தயம். கூந்தலுக்கு அதிக வெப்பமும் இருக்கக்கூடாது. அதிக குளிர்ச்சியும் இருக்கக்கூடாது. வெப்பம் அதிகரித்தால் தலையில் வியர்வை அதிகரிக்கும். குளிர்ச்சி அதிகரித்தால் அவை உடலையும் சேர்த்து பாதிக்கும். அதனால் இவை இரண்டையும் மிகவும் கவனமாக உபயோகிக்க வேண்டும்.

கற்றாழை மடல்களை நன்கு சுத்தம் செய்து நுங்கு பகுதியுடன் வெந்தயத்தை சேர்த்து அரைத்து தலையில் தடவி, 20 நிமிடங்களுக்கு ஊறவிட வேண்டாம். அதற்கு மேல் தலையில் ஊறவைக்க வேண்டாம். இவை கூந்தல் பிசுபிசுப்பு தாண்டி கூந்தலை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். சிலருக்கு அதிக குளுமை வேறு விளைவை ஏற்படுத்தும் என்பதால், அவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. தேவைப்பட்டால் 10 துளசி இலைகளை உடன் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். துளசி குளிர்ச்சியை தடுக்கும்.

கற்றாழை + தேங்காய் எண்ணெய்

கற்றாழை ஜெல்லை பிரித்து தேவையான அளவு எடுத்து மசித்துக்கொள்ளுங்கள். அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து பத்து நிமிடங்கள் வைத்துவிடுங்கள். பிறகு அந்த கற்றாழை சேர்த்த எண்ணெயை கூந்தலில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து 30 நிமிடங்கள் மசாஜ் செய்யும் போது கூந்தலுக்கு போஷாக்கு கிடைக்கும்.கூந்தல் வெடிப்பு பிரச்னைகள் நீங்கும். கண்டிஷனர் பயன்படுத்தாமலேயே கூந்தல் பட்டு போல் மின்னுவதை பார்க்கலாம். இவை எல்லோருக்கும் ஏற்ற பராமரிப்புதான். எல்லா காலங்களிலும் இதை பயன்படுத்தலாம். வாரம் இரண்டு முறை செய்துவந்தாலே கூந்தலில் தொடரும் பளபளப்பை காணலாம்.

கற்றாழை

கற்றாழையுடன் எதையும் சேர்க்காமல் வெறும் கற்றாழையை மட்டும் கூந்தலில் தடவி குளிக்கலாம். கற்றாழையில் இருக்கும் ஈரப்பதமும் வழவழப்புமே கூந்தலுக்கு வேண்டிய போஷாக்கை தரும். கற்றாழை கூந்தலின் அடர்த்தியை அதிகரிப்பதோடு வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. கூந்தலுக்கும் சருமத்துக்கும் கற்றாழை சாறை மட்டும் தடவினாலே கோடை வெயிலில் இருந்து எளிதாக தப்பிக்கலாம். உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்துக்கும் ஏற்ற பொருள் இந்த கற்றாழைதான்.

கற்றாழையில் உள்ள போஷாக்கு

கற்றாழை முதலில் கூந்தலின் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. இவை தலையில் உள்ள பூஞ்சைக் கிருமி தொற்றை நீக்கி கூந்தலின் வறட்சியை போக்குகிறது. கற்றாழையில் புரொட்டியோலைட்டிக் என்னும் என்சைம், புரதம், வைட்டமின் மற்றும் தாதுக்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை தருகிறது. கற்றாழையை பயன்படுத்திய முதல் நாளே கூந்தலின் வழவழப்பை உணர முடியும்.

தலைமுடி பராமரிப்பு

கடுமையான வெயிலில் வாரம் இரண்டு முறை தலைக்கு குளிக்க வேண்டும். அதை தவறாமல் பின்பற்றும் போது கற்றாழையை மட்டுமே தலையில் தேய்த்து குளித்தால் போதும். முடி பிசுபிசுப்பும் இருக்காது. தலைமுடி பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்கும். உடலுக்கு எப்படி ஜில் ஜில் உணவுகள் தேவையோ அதேபோல் கூந்தலுக்கு கற்றாழை அவசியம்.