Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேளாண் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரித்து கோடிகளில் வருமானம் ஈட்டலாம் - தனா ஃபுட் பிராடக்ஸ் உரிமையாளர் தனலட்சுமி

குழந்தைகளுக்கு அடிப்படை உணவுகள் தொடங்கி, சர்க்கரை நோய் குறைபாடுள்ளவர்கள் வரை தரமான, ஆரோக்கியமான உணவுகளை மதிப்புக்கூட்டல் மூலமாக தயாரித்து கோடிகளில் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்கிறார் மதுரை தனா ஃபுட் பிராடக்ஸ் உரிமையாளர் தனலட்சுமி.

இதுகுறித்து, நம்மிடம் அவர் கூறியது: “என் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருள்களைத் தர வேண்டும் என்ற தேடுதல் இருந்தது. என் கணவர் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டு இருந்தார். அவரை அதில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக முதல் முயற்சியாக சத்துமாவு கஞ்சி தயாரிப்பைத் தொடங்கினேன். அடுத்ததாக, சிறுதானிய உணவுப் பொருள்கள் உற்பத்தியைத் தொடங்கினேன்.

இதைத் தொடர்ந்து, நம் முன்னோர்களின் உணவுகளை, உணவு முறையை ஆராய்ந்திட தொடங்கினேன். அதன் பிறகு, சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசிகளில் உணவுப் பொருள்கள் தயாரிப்பை தீவிரமாக மேற்கொண்டோம்.

ஆரம்ப காலத்திலேயே குழந்தைகளுக்கு நாம் இதுதான் ஆரோக்கியமான உணவு எனத் தர வேண்டும். இந்த விழிப்புணர்வை செயல்படுத்தி,

அக்கம் பக்கத்தினருக்கு சிறுதானிய உணவுகளை ஆர்டரின் பேரில் செய்யத் தொடங்கினேன். அதில், குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் தயாரிக்கப்பட்ட சிறுதானிய, சத்துப் பொருள்களால் குழந்தைகளின் பெற்றோர்களிடம் இருந்து பாராட்டுகள் வந்தன. இதோடு, இதை நிறுத்தாமல் அதிகப்படியான குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, நஞ்சில்லாத, தரமான உணவு தயாரிக்கும் பணியை விரிவுபடுத்தினேன்.

என் கணவருக்கு சர்க்கரை நோய் குணமானதால், அவரும், என்னை உற்சாகப்படுத்தினார். அந்த உத்வேகத்தால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கான பிரத்யேக சத்துமாவு தயாரித்தோம். ஒரு பாரம்பரிய அரிசி வகையைக் கொண்டு இந்த சத்துமாவு தயாரிக்கப்படுகிறது. சத்துமாவில் தொடங்கிய எங்கள் தயாரிப்புகள், தற்போது100 வகையான உணவுப் பொருள்களைக் கடந்து விட்டன

ஆரம்பத்தில் இதை ஒரு வியாபாரமாகக் கொண்டு செல்லும் எண்ணம் இல்லை. நமது தயாரிப்பை மற்றவர்கள் பாராட்டினாலே போதுமானது என்று நினைத்தேன். ஆனால், ஆரோக்கியமான உணவை நிறையப் பேருக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் வியாபாரமாகத் தொடர்ந்து வருகிறோம். முதல் 20 ஆண்டுகள் குழந்தைகள் உண்ணும் உணவுகள் தான் அடுத்த 80 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். குழந்தைகளுக்கு உணவை மருந்தாக கொடுக்க மறந்து விட்டோம். அந்த மரபை நாங்கள் மீண்டும் கொண்டு வருகிறோம். சரிவிகித உணவை தரும் போது குறைபாடுகள் இல்லாமல் வாழ முடியும்.

இந்த தொழில் மனநிறைவை மட்டுமில்லாமல், வருமானத்தையும் கொடுத்தது. இதை வைத்து, அடுத்தடுத்து என் வியாபாரத்தைத் பெருக்கத் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் என் பக்கத்து வீட்டில் தொடங்கிய இந்த வணிகம், உள்ளூர், மாவட்டம், வெளி மாநிலம் எனக் கடந்து தற்போது, 8 நாடுகளுக்கு சிறுதானியம் மற்றும் ஆரோக்கியமான உணவு வகைகளை அனுப்பி வருகிறோம். ஆண்டுக்கு ரூ.1.20 கோடிகள் வரை வருமானம் ஈட்ட முடிகிறது.15 பெண் பணியாளர்கள் மூலமாகவே இதை சாத்தியப்படுத்துகிறோம். இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் தரமான, நஞ்சில்லாத உணவு வகைகளை செய்து கொடுப்பது மட்டும் தான்.

முழு விவரங்கள், ஆலோசனைகளுக்கு வருகின்ற 17.08.2025 (ஞாயிற்றுக்கிழமை) சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் "அக்ரி ஸ்டார்ட்அப் திருவிழா 2.0" கலந்து கொள்ளுங்கள். முன்பதிவுக்கு 83000- 93777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.