Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாதனைக்கு வயது தடையல்ல!

நன்றி குங்குமம் தோழி

முனைவர் ரவி சந்திரிகா!

வயது அதிகரித்தாலும் அதைப் பற்றி நினைக்காமல் என்றும் துடிப்புடன் இளமையாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். தினமும் உடற்பயிற்சி, லைஃப் ஸ்டைலில் மாற்றம் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உடற்பயிற்சி போல் மற்ெறாரு சிறப்பான பயிற்சிதான் யோகாசனம். இதனை மற்ற வீட்டுப் பணிகள் மற்றும் புத்தகம் வாசிப்பு போல் தினமும் கடைபிடிக்க வேண்டும் என்கிறார் புதுச்சேரியை சேர்ந்த முனைவர் பட்டம் ெபற்ற ரவி சந்திரிகா.

‘‘சொந்த ஊர் சீர்காழி. சின்ன வயசில் வீட்டில் சினிமாவிற்கு அழைத்து செல்வார்கள். அதில் துப்பாக்கியால் சுடும் சண்டைக்காட்சி எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனை ரசித்து பார்ப்பேன். அது எனக்குள் துப்பாக்கிச்சுடும் பயிற்சியினை எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தினை தூண்டியது. என் மாமாவிடம் லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி இருந்தது. அதனை கொண்டு இரவு ேநரங்களில் வேட்டைக்கு போவார். நானும் அவருடன் செல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பேன். சின்னப்பெண் அங்கெல்லாம் வரக்கூடாதுன்னு சொல்லிடுவார். இரவு வேட்டைக்கு சென்று காலையில் காடை, கௌதாரி, முயல் எல்லாம் கொண்டு வருவார்.

அவரிடம் அந்த துப்பாக்கியை கையில் தரச்சொல்லி கேட்பேன். நான் தவறாக பயன்படுத்தி விடுவேன் என்று பயந்து தரமாட்டேன் என்று சொல்லிடுவார். தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதிப்பார். மாமாவின் மறைவிற்குப் பிறகு அவர் பயன்படுத்திய துப்பாக்கியை காவல் துறையிடம் ஒப்படைத்துவிட்டோம்’’ என்றவருக்கு துப்பாக்கி மேல் காதல் அதிகமானதே தவிர குறையவில்லை.

‘‘பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்தேன். தேசிய மாணவர் படை பயிற்சி முகாமிற்காக மூன்று நாட்கள் வெளி மாநிலத்திற்கு அழைத்து சென்றார்கள். அதில் மோர்ஸ்கோடு, வரைப்பட வாசிப்பு, பதுங்கி இருத்தல். முதலுதவி, பகுதி சுத்தம் செய்தல், சமூக சேவை, நடைப்பயிற்சி, கலை நிகழ்வுகள் என பல பிரிவு இருந்தாலும், என் நினைவெல்லாம் துப்பாக்கிச்சுடுதலில்தான் இருக்கும்.

அதே தேசிய மாணவர் படையில் மூன்று ஆண்டுகள் சார்ஜன்ட் மேஜராக இருந்து துப்பாக்கிச்சுடுதலை கற்றுக் கொண்டேன். 50 மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை 303 துப்பாக்கியால் 10 வட்டம் போட்ட அட்டையில் 5 குண்டுகளும் நெருக்கமாக இருக்கும்படி சுடுவதுதான் சாதனை. அதையும் நான் செய்து சாதித்து இருக்கிறேன். கல்லூரியிலும் என்னுடைய துப்பாக்கிச்சுடுதல் திறமையை பாராட்டி ஊக்குவித்தார்கள். அதனால் அதனை மிகவும் சிரத்தையுடன் கற்றுக்கொண்டேன். தொடர்ந்து கல்லூரியின் துப்பாக்கிச்சுடுதல் குழுவில் இணைந்து பல போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வென்றிருக்கிறேன்.

துப்பாக்கிச்சுடும் பயிற்சி இருந்ததால், குறுக்கு வில்வித்தைப் போட்டிகளிலும் பங்கு பெற்றேன். அம்புகளை வில்லில் வைத்து, இலக்கை நோக்கி துல்லியமாக செலுத்த வேண்டும். வில் அம்பு, துப்பாக்கிச்சுடுதலுக்கு இணையான விளையாட்டு என்பதால் அதையும் ஆர்வமாக கற்றுக் கொண்டேன். மாவட்ட, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றிருக்கிறேன்’’ என்றவர் தன்னை ஃபிட்டாக வைத்துக்கொள்ள விரும்பி யோகாசன பயிற்சியினை மேற்கொண்டுள்ளார்.

‘‘நான் துப்பாக்கி மற்றும் வில்வித்தைப் போட்டிகளில் பங்கு பெற்றதால், என்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்பினேன். அதற்கு யோகாசனம் சிறந்தது என்பதால், அதனை முறையாக கற்றுக் கொண்டேன். அதே போல் நான் கற்றுக் கொண்டதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எப்போதும் பின்வாங்கியது கிடையாது. யோகாசனத்தை முழு மனதோடு கற்க விரும்புபவர்களுக்கு சொல்லித் தருகிறேன். மேலும் பள்ளி, கல்லூரிகளில் யோகாசனப் பயிற்சி அளிக்க சொல்லி கேட்டால் அங்கு சென்று சொல்லித் தருகிறேன்.

ஒருமுறை வெளியூர் சென்ற போது, என் அருகில் 50 வயது தக்க பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் தன் உடலில் உள்ள பிரச்னை குறித்து என்னிடம் பேசிய போது, நான் அவருக்கு அதற்கான ஆசனம், முத்திரை, உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு குறித்து தெரிவித்தேன். நான் சொன்னதை அவர் அலட்சியப்படுத்தாமல், அதனை வீட்டில் சென்று செய்துள்ளார். இப்போது நன்றாக இருப்பதாக என்னை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

தனியார் ஜவுளிக்கடை, பள்ளி, கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வீட்டுப் பணிப் பெண்கள் போன்றவர்களுக்கு இலவசமாக யோகாப் பயிற்சி அளித்து வருகிறேன். மலேசியாவில் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு 15 நாட்கள் இலவசமாக பயிற்சி எடுத்துள்ளேன். புதுச்சேரியில் நடக்கும் அகில உலக யோகா போட்டிக்கு குழந்தைகளுக்கு ஆசனங்கள் கற்பித்து அவர்களை தயார் செய்து வருகிறேன்.

எனக்கு 70 வயதாகிறது. நான் தொடர்ந்து யோகாசனம் செய்து வருவதால், இந்த வயதில் ஏற்படும் மன அழுத்தம், உடல் சோர்வு குறைந்து என்றும் பிரஸ்காக இருக்கிறேன். ஒரு வேலையை சுறுசுறுப்பாக செய்ய முடிகிறது. வளைவு மற்றும் நெகிழ்வுத் தன்மையால் உடல் வலி, எடை குறைதல் போன்ற நன்மைகள் கிடைக்கிறது. முக்கியமாக மாணவர்களுக்கு படிப்பில் கவனம் சிதறாமல் அதிக மதிப்பெண் பெற யோகாசனம் சிறந்த பயிற்சியாகும்.

பெண்கள் இன்றைய சூழலில் கண்டிப்பாக தங்களின் உடல்நிலையை கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம். உடற்பயிற்சி, ஆசனங்கள், நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஓடுதல், நீச்சல், நடனம், விளையாட்டுகள் இதில் ஏதாவது ஒன்றில் கண்டிப்பாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வது அவசியம். இதனால் உடல் பிரச்னை, மாதவிடாய், குழந்தையின்மை, தூக்கமின்மை போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்’’ என்றவர், துப்பாக்கி, யோகாசனம் மற்றும் குறுக்கு வில்வித்தை போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட விருதுகள் மற்றும் மாநில அளவிலான பரிசுகளை வென்றுள்ளார்.

தொகுப்பு: பொ.ஜெயச்சந்திரன்