Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பெண்களின் அழகுக்கு அழகூட்டும் புடவை!

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

பெண்கள் நாகரீகமாக உடை அணிந்து காட்சி அளித்தாலும், புடவை கட்டிக் கொண்டு வலம் வரும்போது அதன் அழகே தனிதான். மார்டன் பெண்களும் புடவை அணியும் போது பார்க்க அழகாகவும் மங்களகரமான தோற்றத்தில் காட்சியளிப்பார்கள். புடவை உடுத்தும் போது சில எளிய வழிமுறைகளை கையாண்டால் சாமானியத் தோற்றமுடைய பெண்களும் கட்டழகிகளாகக் காட்சி தர முடியும்.

*பெண்கள் தங்கள் உடல் வண்ணத்துக்கேற்ற நிறத்தில் உடை உடுப்புகளை தேர்வு செய்து அணியும் போது பார்க்க மிக அழகாக இருக்கும்.

*கருமை நிறமுடைய பெண்கள் அதிக கறுப்பு நிறமுடைய உடைகளை தவிர்க்க வேண்டும். இது அவர்களின் கருமை நிறத்தை அதிகப்படுத்திக் காட்டும்.

*மாநிறம் கொண்ட பெண்கள் வெண்மை நிற புடவைகளை அணிந்தால் எடுப்பாகவும், எழிலாகவும் இருக்கும்.

*நல்ல சிவப்பு நிறமுடைய பெண்கள் அழுத்தமான வண்ணத்தில் புடவை அணிந்தால் எடுப்பாக தோற்றமளிக்கும்.

*மிகவும் உயரமான தோற்றமுடைய பெண்கள் அகலக்கரையும், படுக்கைக் கோடுகளும் கொண்ட அழுத்தமான வண்ணங்களில் புடவைகளை அணிந்தால் உயரம் குறைவாக இருப்பது போன்ற தோற்றத்தைத் தரும்.

*புடவையின் வண்ணத்துக்கு முற்றிலும் மாறுபட்ட வண்ணத்தில் பிளவுஸ் அணிந்தால் உயரமான தோற்றத்தை குறைத்துக் காட்டும்.

*சிறு சிறு புள்ளிகள், சிறு அளவில் பூக்கள் பிரின்ட் செய்த புடவைகளை அணிந்தால் உயரமான தோற்றம் குறைத்து காண்பிக்கும்.

*அணியக்கூடிய புடவையில் அமைந்த கோடுகள் குறுக்குவாட்டில் இருந்தால் உயரமான பெண்களும் உயரம் குறைந்த தோற்றத்தைக் காண்பிக்கும்.

*புடவையின் கோடுகள் நேர்வாக்கில் இருந்தால் குள்ளமான பெண்களும் உயரமான தோற்றமளிப்பார்கள்.

*பொது இடங்களுக்கு குடும்பத்துடன் செல்லும் போது மிக நெருக்கமான கட்டம் போட்ட அழுத்தமான நிறத்தில் உள்ள கைத்தறி புடவைகளை அணிந்தால் எளிமை தவழும்.

*ஒரே வண்ணத்தில் புடவையும், பிளவுசும் அணிந்தால் கவர்ச்சியாக இருக்காது. இப்போது மாறுபட்ட வண்ணத்தில் புடவை, சோளி அணிவது நாகரீகமாகி விட்டது. அப்படி தேர்ந்தெடுத்து அணிந்தால் மிக அழகாக இருக்கும்.

*அணியக்கூடிய புடவையின் அமைப்பே தோற்றத்தை மாற்றிஅமைக்கும் தன்மை கொண்டதாகும்.அழகாக உடுத்துவோம், வசீகரத்துடன் வலம் வருவோம்.

தொகுப்பு: எஸ்.உஷாராணி, கோயமுத்தூர்.