Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாலின பேதங்கள் ஒரு பார்வை

நன்றி குங்குமம் தோழி

பாலினங்கள் இரண்டல்ல!

இந்தப் பாலின பேதங்கள் எத்தனை பிரச்னைகளை உருவாக்கி வைத்திருக்கிறது பாருங்கள். அஜித், விஜய் ரசிகர்கள் அர்த்தமில்லாமல் தனித்தனியாக கூட்டம் சேர்த்துக்கொண்டு தங்களுக்குள் அடித்துக்கொள்வது போல், ஆண்கள் கூட்டமாக பெண்கள் மீது ஒட்டுமொத்தமாக குறை கூறிக்கொண்டிருப்பதும், பெண்கள் ஒரு கூட்டம் சேர்த்து ஆண்கள் எல்லோருமே இப்படித்தான் என்று குறை கூறிக்கொண்டிருப்பதும் வேலையாகவே போய்விட்டது பலருக்கு.ஆண்களுக்கும் பெண்களுக்குமான இலக்கணங்கள் வகுத்து பிரித்து வைத்ததில், இப்பொழுது அந்த இலக்கணங்களுக்குள் அறிந்தோ அறியாமலோ விழுந்து உலவிக்கொண்டிருக்கும் ஆண்களும் பெண்களும், அந்தந்த பாலினத்தவருக்கான குணங்களையும் முடிவுசெய்துவிட்டார்கள்.

குணம் என்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும் மாறுபட்டிருக்கும் என்ற உண்மையையே மறந்து, பெண்கள் என்றால் இந்த குணங்களுடன்தான் இருப்பார்கள், ஆண்கள் என்றால் இந்த குணங்களுடன் தான் இருப்பார்கள் என்று முத்திரை குத்தி, இரு வேறு கட்சிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் ஏசிக்கொண்டு காலம் தள்ளுகிறார்கள். ஆணும் பெண்ணும் இணைந்துதான் இந்த மனித குலத்தையே உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

ஆக, வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பதை விடுத்து, வேற்றுமையிலேயே வேறூன்றி நிற்கும் நிலையில் இருக்கிறோம். தன் வாழ்நாளில் தவறான ஓரிரு ஆண்களை சந்தித்துவிட்ட பெண்களோ ஆண் வர்க்கமே மோசம் என்று முழங்குகிறது. சில பெண்கள் இப்படிப்பட்ட எண்ணம் காரணமாக, ஆண்களிடமிருந்தே ஒதுங்கி வாழும் முடிவிற்கே வந்துவிடுகிறார்கள். தன்னிடம் பாலியல் கொள்ளும் எண்ணத்துடன் பழகிய சில ஆண்களை வைத்து, ஆண்கள் அனைவரின் நோக்கமே பாலியல் மட்டும்தான் என்று ஆணித்தரமாக பல பெண்கள் நம்புவதை நாம் அனைவருமே சந்தித்திருப்போம். ஏன்? நம் வீட்டு பெரியவர்களே, அது அப்பாவோ, அம்மாவோ, தன் மகளை மற்ற ஆண்களுடன் பழகவிடாமலே வளர்ப்பார்கள். கேட்டால், ஆண்களை நம்பி என் மகளை அவர்களுடன் பழக விடமாட்டோம் என்பார்கள்.

ஆண்களும் பெண்களும் சேர்ந்துதான் இங்கு வாழ இயலும். அப்படித்தான் இந்த உலகம் சுழன்று கொண்டிருக்கிறது. ஆண்களை, பல வழிகளில் ஏமாற்றும் பெண்களும் இருக்கிறார்கள், பெண்களை ஏமாற்றும் ஆண்களும் இருக்கிறார்கள். இது ஆண்/பெண் பிரச்னையல்ல. தனி மனிதர்களின் குணப்பிரச்னை. எத்தனையோ விதத்தில், ஆண்களை ஆண்களோ, பெண்களை பெண்களோ தன் சுய லாபத்திற்காக ஏமாற்றும் மனிதர்கள் இல்லையா என்ன?

எல்லாவிதமான குணமும் கொண்டவர்கள்தான் மனிதர்கள். வெறும் பாலியல் மட்டும் இங்கு பிரச்னையில்லை. அதற்காக நாம் மனிதர்களிடமே பழகாமல் இருக்க முடியுமா என்ன? மற்ற விஷயங்களில் நாம் ஏமாறாமல் இருக்க கற்றுக்கொள்வது போல் பாலியல் பிரச்னைகளிலும் சிக்கிக்கொள்ளாமல் இருக்க கற்றுக்கொள்ளலாமே அன்றி, ஒரு பாலினத்தாரையே ஒட்டுமொத்தமாக குறை கூறுவது எப்படி சரியாகும்?

எத்தனையோ கோடிக்கணக்கான நல்ல மனிதர்கள் வாழும் பூமிதான் இது. ஆனாலும் ஒருசில துர் அனுபவங்களை வைத்து நல்ல மனிதர்களை சந்திப்பதையும் நாம்தான் தவற விடுகிறோம்.

ஒட்டுமொத்தமாக ஓர் பாலினத்தாரை இழிவாக பேசுவது நம்மை நாமே இழிவுபடுத்திக்கொள்ளும் நிலைதான். ஏனெனில் இங்கு ஆண்/பெண் என்ற இருவேறு பாலினங்களின் சேர்க்கையில்தான் நாம் உலவிக் கொண்டிருக்கிறோம். இருக்கும் பிரச்னைகள் போதாதென்று இப்படிப்பட்ட பிரச்னைகளை உருவாக்கியதற்கும் இந்த பாலினபேதங்களை நீறூற்றி வளர்த்து வைத்திருக்கும் நாம்தான் காரணம்.

இந்த இருபாலினத்தவருக்குள்ளேயே இத்தனை பிரச்னைகள் இருக்கையில், நம்மால் எப்படி மற்ற பாலினங்களை சேர்ந்தவர்களை அத்தனை சுலபமாக ஏற்றுக்கொள்ள இயலும்? இயற்கையின் படைப்பில் நூற்றுக்கணக்கான பாலினங்கள் இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. அவற்றை வெளியில் தெரியும் உடல் உறுப்புகளை கொண்டு மட்டுமே நிர்ணயித்துவிட இயலாது. நம் உடல் சம்பந்தப்பட்ட ரசாயனம், வேதியியல், உயிரியல் போன்ற பல கூறுகளின் வித்தியாசங்களினால் தோன்றும் உணர்வுகள் சம்பந்தப்பட்டவை. உடல் உணர்வுகள் மட்டுமல்லாமல் அவரவர் வாழ்வின் பாதைகள் கூட அவற்றை நிர்ணயிக்கலாம்.

ஒவ்வொரு உயிரும் தன் வாழ்வை வாழ்வதற்கே இங்கு பிறக்கிறது. ஆனால் எல்லா உயிரையும் நாம் செய்து வைத்திருக்கும் ஒரே மாதிரியான பெட்டியில் அடைத்து வைக்கவே விழைகிறோம். அந்தப் பெட்டிகளில் விழாதவர்களை வாழவே தகுதியற்றவர்களாக எண்ணி நகைக்கிறோம். சற்றேனும் சிந்தித்துப் பார்த்தால் இது எத்தனை மடமையான எண்ணம் என்பது புலப்படும்.

இங்கு நாம் யாருமே காலத்தை வென்று இங்கேயே தங்கிவிடப்போகிறவர்கள் அல்ல. ஓர் நாள் நாம் எதிர்பாராத ஒரு நொடியில் நாமெல்லாருமே இங்கிருந்து தொலைந்துபோக வந்தவர்கள்தான். நம்மை சுமந்திருக்கும் இந்த உடல் கூட நெருப்பில் வெந்தோ இல்லை மண்ணுக்கடியில் புதைக்கப்பட்டோ காணாமல் போய்விடப் போகிறவைதான்.

ஆனால் ஏதோ நாம்தான் இந்த உலகை கட்டிக்காப்பவர்கள் போல, நாம் என்றென்றும் இங்கேயே இருந்து இந்த உலகை வழிநடத்தப் போகிறவர்கள் போல நம் கட்டுக்குள் அனைவரையும் விழ வாழ்நாள் முழுவதும் போராடுகிறோம். மற்றவர்கள் வாழ்வில் கவனத்தை வைத்தே நம் வாழ்வு தொலைத்து ஏதோ சாதிக்கப் போவதாக அகந்தை கொண்டு அலைகிறோம்.

இங்கு இயற்கை மட்டுமே உண்மை என்ற உண்மையை செளகரியமாக மறந்துவிட துணிந்துவிட்டோம்.

அத்தனையும் நம் கட்டுக்குள் வைக்கும் கவனத்தில், நம் வாழ்வே நம் கட்டுக்குள் இல்லை என்பதை மறந்துவிட்ட பேதைகள் நாம். இல்லையெனில், மற்றவர்களின் வாழ்வில், அவர்தம் வழியில் அவர் நடக்க நாம் ஏன் முட்டுக்கட்டை போடுகிறோம்?

ஆண்களின் உடற்குறிகளுடன் பிறந்தவர், பெண்ணாக வாழ விரும்பினால், அதில் நமக்கென்ன நஷ்டம்? பெண்ணாக பிறந்தவர் ஆணாக வாழ விரும்பினால், அதில் நமக்கென்ன பிரச்னை? ஆண் இன்னொரு ஆணிடம் அன்பு ஏற்பட்டு, அவ்வன்பின் வெளிப்பாடாக அவர்களுள் உடலுறவு கொண்டால் நமக்கெங்கு வலிக்கிறது? பெண் இன்னொரு பெண் மேல் மையல் கொண்டு, அவர்கள் இருவரின் சம்மதத்தோடு ஒருவரை ஒருவர் பிணைத்துக்கொண்டால், நாம் ஏன் அதில் குறுக்கிட வேண்டும்? இயற்கையிலேயே அவர்களுக்கு அப்படி ஒரு உந்துதல் இருப்பின், அதில் தலையிட நமக்கு யார் உரிமை அளித்தது?

இந்தப் பிரச்னை எல்லாமே பொது நலத்தினால் விளைபவை அல்ல. மற்றவர்கள் அவரவர் வாழ்வை அவருக்கு பிடித்தார் போல் விரும்பி வாழ்வதில், மற்றவருக்கு தீங்கிழைக்காமல்

வாழ்வதில், நமக்கு எங்கோ குடைகிறது என்றால், அதற்கு நம் தன்னம்பிக்கையின்மையும், அதனால், மற்றவரின் மேல் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் நானும் இங்கு முக்கியம்தான் என்று பறைசாற்றிக்கொள்ளும் உந்துதலுமே அடிப்படை. மேலும் இப்படி அவர்கள் விருப்பத்திற்கு வாழ்பவர்களை நாம் ஆதரித்துவிட்டால், தன் வீட்டு மனிதர்கள் தங்களின் ஆதிக்க சிறையிலிருந்து விடுபட்டுவிடுவார்களோ என்ற பயமும் காரணம்.

இங்கு குழந்தைகள் பெரும்பாலும், நாம் குழந்தை பெறவேண்டும் என்ற ஆசையினாலோ அன்பினாலோ பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. அது வெறும் சம்பிரதாயம். திருமணம் புரிவது எப்படி சம்பிரதாயமோ அது போல் பிள்ளை பெற்றுக்கொள்வதும் ஒரு சம்பிரதாயம். மேலும் பெற்றுக் கொள்ளாவிடில், பெண்ணாக இருந்தால் மலடி என்றோ, ஆணாக இருந்தால் ஆண்மை இல்லாதவன் என்றோ அந்த நான்கு பேர் சொல்லிவிடுவார்களோ என்றொரு பயம்.

தன்னை இந்தச் சமுதாயம் ஒதுக்கி வைத்துவிடுமோ என்றொரு அர்த்தமற்ற பயம். என் மகள், மகன் இப்படித்தான், அவர்கள் விருப்பத்திற்கு வாழவே என் மூலமாக பிறந்திருக்கிறார்கள், அவர்கள் விருப்பில் நாம் தலையிட மாட்டேன் என்று நிமிர்ந்து சொல்வதற்கு கூட பெற்றோர்களுக்கு பயம்.

நாம் பிடித்தோ பிடிக்காமலோ உழன்றுகொண்டிருக்கும் நரகத்தில் நம் சந்ததியினரையும் எப்படியாவது உள்ளே இழுத்துவிட வேண்டும். அவர்களின் மகிழ்வு நமக்கு முக்கியமே இல்லை. அந்த நான்கு பேர் மெச்ச அவர்கள் உள்ளுக்குள் உடைந்து புழுங்கி வாழ்ந்தாலும் நமக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் நம்மை விட்டு அகலப்போகும் உடலில் இருந்துகொண்டு, நாம் மற்றவர்களின் வாழ்வை சூறையாடுகிறோம்.

அத்தனை மனிதர்களையும் அவரவர் இயல்பில் ஏற்றுக்கொண்டு அனைவரையும் சக மனிதர்களாக மதித்து வாழும் காலம் எப்பொழுது வரும் என்றால், மனிதர்களை குறை கூறுவதற்கும் சரி, கொண்டாடி மகிழ்வதற்கும் சரி, ஒரு கூட்டத்திலிருந்து, இன்னொரு கூட்டத்தை எதிர்க்கும் மனநிலையிலிருந்து வெளி வந்து, ஒவ்வொரு மனிதரையும் தனித்தனி உயிராக மதித்து வாழும் காலம் பிறக்க வேண்டும்.

இங்கு ஒவ்வொரு தனி மனிதரும், தன் சுயம் இழந்து வாழ்வதாலேயே மற்றவர் வாழ்வில் நாம் தலையிட்டு அவரையும் வாழவிடாமல் செய்வதில் புளங்காகிதம் அடைகிறோம். நாமும் வாழ்ந்து மற்றவரையும் வாழ வைத்தால், இங்கு அனைவர் மனதிலும் இன்பம் தழைத்தோங்கும். இந்த உலகம் அன்பால் சூழ்ந்து இன்னும் சிறிது அழகாகும்.

(தொடர்ந்து சிந்திப்போம்!)

தொகுப்பு: லதா