Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

7 மாத கர்ப்பம் 145 கிலோ எடை வெற்றிப் பதக்கம்!

நன்றி குங்குமம் தோழி

“நீ தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கிறாய். விளையாட்டு அரங்கம் குழந்தைகளுக்கு, இளம் பெண்களுக்கானவை. உன்னை மாதிரி கர்ப்பம் தரித்தவர்களுக்கு அல்ல... நீ விளையாட்டு அரங்கிலிருந்து விலகி இருக்க வேண்டும்...” “நீங்கள் உங்கள் வயிற்றில் சுமக்கும் குழந்தையைப் பற்றி சிந்தியுங்கள். ஏதாவது தவறாக நடந்துவிடக்கூடாது” என்று என் குடும்பத்தினரும் உடன் வேலை பார்த்த சக பெண் போலீசாரும் எச்சரித்தனர்’’ என்று பேசத் துவங்கினார் 31 வயதாகும் சோனிகா யாதவ்.

‘‘நான் டெல்லி காவல்துறையில் போலீஸ் பணியில் இருந்து வருகிறேன். நான் ஒரு கபடி வீராங்கனை மட்டுமல்ல... பளு தூக்கும் வீராங்கனையும் கூட. ஆந்திராவின் தலைநகரான அமராவதியில் இந்தாண்டு அகில இந்திய போலீஸ் பளு தூக்குதல் போட்டி நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்டேன். அந்தப் போட்டியில் என்னை கலந்து கொள்ள வேண்டாம் என்றுதான் என் நண்பர்கள், குடும்பத்தினர் எச்சரித்தார்கள். காரணம், அப்போது நான் ஏழு மாத கர்ப்பம். அதை எல்லாம் புறக்கணித்து அக்டோபர் 17ம் தேதியன்று ‘டெட் லிஃப்ட்’ பிரிவில் 145 கிலோ எடையைத் தூக்கத் தயாரானேன். போட்டி வளாகத்தில் என்னை அந்த நிலையில் ஆண்களே அதிர்ச்சியாக பார்த்த போது பெண்களைப் பற்றி சொல்லவா வேண்டும்.

நான் இந்த முடிவு எடுக்க காரணமே வெளிநாட்டு வீராங்கனைகள்தான். வெளிநாட்டில் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் கர்ப்பமாக இருந்தாலும் கலந்து கொள்வார்கள். சென்ற வருடம் எகிப்திய வாள் வீச்சு வீராங்கனை நாடா ஹஃபீஸ் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அஜர்பைஜான் வில்வித்தை வீராங்கனை யேலாகுல் ரமஸனோவா ஏழு மாத கர்ப்பமாக இருந்தபோது 2024 ஒலிம்பிக்ஸில் போட்டியிட்டார். ஜெர்மன் ஸ்கெலிட்டன் அதிவேக பந்தய வீராங்கனை டயானா சார்ட்டர் 2006 குளிர்கால விளையாட்டுகளில் ஒன்பது வார கர்ப்பத்தில் பங்கேற்றார். பளு தூக்கும் போட்டியில், லூசி மார்ட்டின் பங்கேற்கும் போது அவர் 30 வார கர்ப்பத்தை சுமந்திருந்தார். இவர்களால் போட்டியில் பங்கேற்கும் போது என்னால் ஏன் முடியாது என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

போட்டியில் முதல் முயற்சியில் 125 கிலோ எடை மற்றும் பெஞ்ச் பிரஸ்ஸில் 80 கிலோ எடையை தூக்கினேன். பின்னர் ஒரு திருப்பமாக, 145 கிலோ எடையைத் தூக்க தீர்மானித்தேன். வயிற்றை அழுத்தி, மூச்சை பலமாக உள்ளே இழுத்து பளுவை தூக்கி, வெண்கலப் பதக்கம் வென்றேன். பெண்கள் உடலைப் பேண வேண்டும். பெண்கள் சாதிக்க விரும்பும் எதையும் அவர்களால் செய்ய முடியும் என்பதைச் சொல்லத்தான் இந்தப் பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டேன்.

கர்ப்பம் ஒரு தடையாகக் கருதப்படுவதை நான் விரும்பவில்லை’’ என்றார். ‘‘எங்க வீடு டெல்லி இந்திரா காந்தி ஸ்டேடியத்திற்கு அருகில்தான் இருந்தது. அதனால் நானும் என் சகோதரியும் இளம் வயதிலேயே ஜிம்னாஸ்டிக்ஸில் பயிற்சி பெற்றோம். இருவரும் மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்று பதக்கங்களை வென்றிருக்கிறோம். என் சகோதரி ஜிம்னாஸ்டிக்ஸில் தொடர்ந்தார், நான் கபடிக்கு மாறினேன்.

படிப்பு முடித்துவிட்டு டெல்லி காவல்துறையில் காவலராகப் பணியில் சேர்ந்தேன். பிறகு திருமணம். முதல் குழந்தை பிறந்தான். அவனைப் பார்த்துக் கொள்வதற்காக விடுப்பு எடுத்தேன். உடல் பயிற்சியிலிருந்தும் தற்காலிகமாக விடை பெற்றேன். 2019ல் டெல்லி போலீஸ் கபடி அணியில் சேர்ந்தேன். ஆனால், கைக் குழந்தையை வைத்துக் கொண்டு கபடி குழுவை நிர்வகிப்பது கடினமாக இருந்தது. அப்போதுதான் நான் பவர்லிஃப்டிங்கைத் தேர்ந்தெடுத்தேன். அதில் 2023-ல் நடைபெற்ற டெல்லி மாநில பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றேன். இடையில் இரண்டாம் முறையாக கர்ப்ப முற்றேன். ஆகஸ்ட் மாதம் போட்டியை பற்றி அறிந்ததும், அதற்கான பயிற்சியில் ஈடுபட்டேன்.

நான் போட்டியில் பங்கு பெறப் போவதாக வீட்டில் சொன்ன போது, ‘குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும்... அதனால் இதில் கலந்து கொள்ள வேண்டாம்’ என்றார்கள். மருத்துவரை கலந்தாலோசித்தேன். அவர்கள் ‘வரம்புகளைத் தாண்டி பளு தூக்க வேண்டாம்’ என்றார்கள். உடல் எடையை விட குறைவான எடையை தூக்க அனுமதித்தார்கள். எனது உடல் எடை 165 கிலோ என்பதால், 145 கிலோ எடையை தூக்க முடிவு செய்தேன். வெற்றியும் பெற்றேன். இதைப் பற்றி எனக்கு பிறக்க இருக்கும் குழந்தையிடம் கண்டிப்பாக கூறுவேன்’’ என்றார் சோனிகா.

தொகுப்பு: கண்ணம்மா பாரதி