Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலவச நூலகங்களை அமைக்கும் 13 வயது சிறுமி!

நன்றி குங்குமம் தோழி

சிறுவர்கள் என்றாலே அவர்களிடம் விளையாட்டு ஆர்வம்தான் அதிகம் இருக்கும் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளும் சிறுவர்களும் ஆச்சர்யப்படவைக்கும் அளவிற்கு ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகின்றனர். 13 வயதே ஆன ஆகர்ஷனா இதுவரையில் 19 இலவச நூலகங்களை அமைத்திருக்கிறார் என்பது பாராட்டுக்குரிய விஷயம். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆகர்ஷனா தனது 9 வயதில் இருந்தே நூலகம் அமைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்.

“நான் ஒருமுறை என் அப்பாவுடன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருக்கின்ற மருத்துவமனைக்கு உணவு வழங்குவதற்காக சென்றிருந்தேன் . அங்கு நிறைய குழந்தைகளும் சிறுவர்களும் கீமோதெரபி சிகிச்சை காலத்தில் இருந்தனர். அப்போது ஒரு குழந்தை என்னிடம் ஓடிவந்து, ‘கலரிங் புக் இருந்தால் எங்களுக்கு தர முடியுமா? எங்களால் இங்கு வேறு எந்த விளையாட்டும் விளையாட முடியல’ என்று கேட்டாள். மேலும் அங்குள்ளவர்களிடம் புத்தகம் வாசிக்கும் ஆர்வம் இருப்பது தெரிய வந்தது.

இந்த சிகிச்சை காலத்திலும் அவர்கள் சந்தோஷமாக இருக்க அவர்களுக்கு நிச்சயம் ஏதேனும் செய்ய வேண்டும் எனத் தோன்றியது” என அங்குள்ள குழந்தைகளின் ஏக்கத்தை புரிந்துகொண்டவர் உடனடியாக உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் என எல்லோரிடமிருந்தும் புத்தகங்களை நன்கொடையாக சேகரித்து மருத்துவமனையில் முதல் நூலகத்தை அமைத்துள்ளார்.

குழந்தைகள் மத்தியில் படிக்கும் ஆர்வம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் இலவச நூலகங்களை அமைக்க வேண்டும் என்பதையே நோக்கமாக கொண்டுள்ளார். பின்னர் பல இடங்களில் புத்தகங்களை நன்கொடையாக கொடுக்கும் இயக்கங்களை நடத்தியுள்ளார். நன்கொடையாக பெறப்பட்ட புத்தக சேகரிப்புகளை கொண்டு பள்ளிகள், காவல் நிலையங்கள், சிறார் இல்லங்கள் என பல்வேறு இடங்களில் இலவச நூலகங்களை அமைத்துள்ளார். ‘‘நன்கொடையாக சேகரிக்கப்பட்ட புத்தகங்களை கொண்டு நான் அமைத்த எல்லா நூலகங்களில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சிறுவர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை எடுத்து வாசிப்பதாக நேர்மறையான பின்னூட்டங்கள் கிடைத்தன. நூலகங்கள் அர்த்தமுள்ளதாக இருப்பதை கேள்விப்படும் போது உண்மையில் எனக்கு சந்தோஷமாக இருந்தது. 70% பேர் தினமும் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கும் ேபாது சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. புத்தகங்களை சேகரிக்கும்போது நான் நேரத்தை வீணடிப்பதாக பலரும் சொன்னார்கள். ஆனால் நான் என் நோக்கத்தை விடவில்லை.

தொடர்ந்து ஆர்வத்துடன் இலவச நூலகம் அமைக்க முயன்றேன்” என்றவரின் கடின உழைப்பு பிரதமரின் கவனத்திற்கு வரவே, மேலும் 2,000 புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்படும் என்பதை பிரதமர் உறுதிப்படுத்தினார். நன்கொடையாக கிடைத்த புத்தகங்களை கொண்டு இப்போது ஹைதராபாத் முழுவதும் உள்ள 57 மெட்ரோ நிலையங்களில் சிறு நூலகங்களை அமைத்துள்ளார். வாசிக்கும் பழக்கத்தை அனைவரிடமும் ஊக்கப்படுத்தும் ஆகர்ஷனா, ‘வாசிக்கத் தொடங்குங்கள், இது உங்கள் சிந்தனை, மனம், கற்பனை போன்றவற்றை கூர்மைப்படுத்தும்’’ என்கிறார்.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்