Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குரங்கம்மை பரவல் எதிரொலி தமிழ்நாட்டில் விமான நிலையங்கள் துறைமுகங்கள் தீவிர கண்காணிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், குரங்கம்மை குறித்தான விழிப்புணர்வு கருத்தரங்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, குரங்கம்மை தொற்று சிறப்பு வார்டை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு குரங்கம்மை பாதிப்புகள் இருக்கிறதா என்பதை கண்டறிய, தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் கருவிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேலும் பன்னாட்டு விமான பயணிகள் தூத்துக்குடி துறைமுகத்திற்கும், சென்னை துறைமுகத்திற்கும் வருகிற சூழல் இருக்கிற காரணத்தினால் இந்த இரு துறைமுகங்களில் வருகிற பயணிகளை கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இதுவரை குரங்கம்மை கண்டறியப்படவில்லை.

சென்னையில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் இதற்கான சிறப்பு வார்டுகள் பிரத்யேகமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு பரிசோதனை நிலையத்தில் குரங்கம்மை பரிசோதனை செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 5 படுக்கைகள் கொண்ட ஆண்களுக்கான வார்டும், 5 படுக்கைகள் கொண்ட பெண்களுக்கான வார்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு குரங்கம்மை பாதிப்புகள் இருப்பது தெரியவந்தால் அவர்களுக்கு தேவையான சிகிச்சை மேற்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 200 மருத்துவர்களுக்கு குரங்கம்மை பாதிப்புகளை எப்படி கையாள்வது, குரங்கம்மை நோய் பாதித்தவர்களுக்கு எப்படி சிகிச்சை செய்வது, அவர்களுக்கான விழிப்புணர்வு எப்படி ஏற்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்களுக்காக கருத்தரங்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. குரங்கம்மை தொற்று நோய் குறித்து முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் அனைத்துமே முழுமையாக தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறை மிகச் சிறப்பாக செய்திருக்கிறது. மேலும் டெங்கு காய்ச்சலைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்து வருகிறது. டெங்கு பாதிப்புகள் வரும் காலங்களில் கூடுதலாக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் இதுகுறித்து விழிப்புணர்வு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.