Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குபேர வாழ்வருளும் கும்பேஸ்வரர்

கும்பேஸ்வரர் கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில் 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 26ஆவது சிவத்தலமாகும். கல் நாதசுவரம் உள்ள பெருமையினையும் இக்கோயில் பெற்றுள்ளது.

பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இறைவன் தந்த அமுதகலசம் தங்கியதால் இத்தலம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றதென்பது தொல்நம்பிக்கை. கும்பத்தில் இருந்த அமுதத்தினின்றும் வெளிப்பட்டவராதலால், இக்கோவிலில் குடிகொண்டுள்ள இறைவன் கும்பேசர் என அழைக்கப்படுகிறார். இந்த வரலாற்றைக் கும்பகோணத் தலபுராணம் கூறுகிறது. பிரளய காலத்தில் மிதந்து வந்த அமுத கும்பத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவியதால் குடமூக்கு என்று சொல்லப்படும் இக்கோயில் ஏற்பட்டது. அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருள்களான மாவிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய், பூணூல், முதலிய பொருள்கள் காற்றினால் சிதைக்கப்பட்டு, அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக்கோயில்களாக விளங்குகின்றன.

இத்தலத்து இறைவன் ஆதிகும்பேஸ்வரர், அமுத கும்பேஸ்வரர், அமுதேசர் என அழைக்கப்படுகிறார். உலகிற்கு ஆதிகாரணமாகிய பராபரம் கும்பத்தில் இருந்து தோன்றியதால் ஆதி கும்பேஸ்வரர் என்றும், நிறைந்த அமுதத்திலிருந்து உதித்ததால் அமுதேசர் என்றும் அழைக்கப்படுகின்றார். திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில் இறைவனை குழகன் என்றும் காட்டுகின்றார். சிவபெருமான் வேடர் உருவத்தில் தோன்றி அமுத கும்பத்தை அம்பால் எய்தபோது கிராதமூர்த்தி என்ற (வேடர்) பெயரைப் பெற்றார். மகா பிரளயத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலை பிரம்ம தேவன் தொடங்குவதற்கு, இறைவர் இத்தலத்தில் எழுந்தருளி லிங்கத்துள் உறைந்து சுயம்பு வடிவானவர்.

இத்தலத்து இறைவி மங்கள நாயகி, மந்திர பீடேசுவரி, மந்திரபீட நலத்தள், வளர்மங்கை என அழைக்கப்படுகிறார். தம்மை அன்போடு தொழுவார்க்குத் திவ்விய மங்களத்தை அருளும் மாட்சியமையால் மங்களநாயகி என்றும், சக்திபீடங்களுள் ஒன்றான மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேசுவரி என்றும், தம் திருவடிகள் அடைந்தவர்களுக்கு மந்திர பீடத்தில் இருந்து நலம் தருதலால் மந்திரபீட நலத்தள் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தம்மை வணங்குவோருடைய நோய்களைப் போக்கச் செய்வதால் நோயறுக்கும் பரை என்ற பெயரும் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தல அம்பாளை வளர்மங்கை என தேவாரப்பதிகத்தில் குறிக்கின்றார்.

இறைவன் திருச்செங்கோட்டுத்தலத்தில் தம்முடைய சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு அளித்தது போன்று, இத்தலத்தில் தம்முடைய 36,000 கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கியதால் அம்பாள் மந்திர பீடேஸ்வரியாகத் திகழ்கின்றாள். அத்துடன் தமக்குரிய 36,000 கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து, இந்தியாவிலுள்ள சக்திபீடங்களுக்கும் முதன்மையான சக்தி பீடமாகி, 72,000 கோடி சக்திகளுக்கு அதிபதியாக அருள்பாலிக்கின்றாள். அம்பாளின் உடற்பாகம் பாத நகம் முதல் உச்சிமுடி வரை 51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சியளிக்கின்றன. மற்றைய தலங்களில் உள்ள சக்தி பீடங்கள் ஒரே ஒரு சக்தி வடிவை மட்டும் கொண்டது. இத்தலத்து அம்பாள், 51 சக்தி வடிவங்களையும் தன்னகத்தே ஒன்றாய் உள்ளடக்கி சக்தி பீடங்களுக்கெல்லாம் தலையாயதாக விளங்கி அருள் பாலிக்கின்றாள்.

மாசி மகத்தன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். பங்குனி மாதத்தில் மகாமக குளத்தில் தெப்பத்திருவிழாவும், சித்திரையில் சப்த ஸ்தானம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழாவின்போது சுவாமியும் அம்பாளும் 20 கி.மீ, தூரத்தில் உள்ள ஏழு தலங்களுக்கு எழுந்தருளுவார்கள். வைகாசியில் திருக்கல்யாணம், ஆனியில் திருமஞ்சனம், ஆடியில் பதினெட்டாம் பெருக்கு, ஆடிப்பூரம், பங்குனித்திருவிழா ஆகியவை கொண்டாடப்படுகிறது.

மாசி மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடி ஏறி, எட்டாம் நாளில் வெண்ணெய்த்தாழி நிகழ்ச்சியும், ஒன்பதாம் நாளில் தேரோட்டமும், பத்தாம் நாளில் மூஷிக, மயில், ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக திருவிழா ஆதி கும்பேஸ்வரர் கோயிலின் சார்பிலேயே நடத்தப்படும். தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா இது. கோயில் நகரம் என்று புகழப்படும் கும்பகோணத்தில் பாடல் பெற்ற தலமும், மாசி மகமும் மஹா மகமும் சிறப்பாக கொண்டாப்படும்.

குடந்தை நடேசன்