தேன்கனிக்கோட்டை, டிச.1: தேன்கனிக்கோட்டையில் பலத்த காற்று, மழையால் ராகி அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அறுவடைக்காக வந்த இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம் பகுதியில் கடந்த 15 நாட்களாக ராகி அறுவடை துவங்கி நடைபெற்று வருகிறது. கூலி ஆட்கள் பற்றாக்குறை மற்றும் யானைகள் தொந்தரவால், அறுவடை பணிகளை விரைந்து முடிக்க திட்டமிட்டு நெல் அறுவடைக்காக வரவழைக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் ராகி அறுவடை செய்து வந்தனர். கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் அறுவடை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை கிடைக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர்.
இதுகுறித்து அறுவடை இயந்திரங்கள் ஓட்டும் டிரைவர்கள் கூறுகையில், ‘சேலம் மாவட்டம் ஆத்தூர், கடலூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவையில் சாகுபடி செய்த நெல் அறுவடை பொங்கல் முதல் துவங்கும். அதுவரை 100க்கும் மேற்பட்ட இயந்திரங்களுடன் கர்நாடக மாநிலம் கனகபுரா, மைசூரு, கொள்ளேகால், ஆறுவள்ளி, குடகு மாவட்டங்களில் முகாமிட்டு நெல் அறுவடை பணியில் ஈடுபடுவோம். மூன்று மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து நெல், ராகி அறுவடையை முடித்துக்கொண்டு பொங்கலுக்கு சொந்த ஊருக்கு திரும்பி விடுவோம். கடந்த ஒரு வார காலமாக புயல் -மழையால் தேன்கனிக்கோட்டை, தளி பகுதியில் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வாடகை கிடைக்காமல் அறுவடையை நிறுத்தியுள்ளோம்.

