Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிருஷ்ண ஜெயந்தி சிறப்புகள்

*திருமால் கிருஷ்ணனாக அவதரித்த போது கலி துவங்கியதால், வைகுண்டத்தில் தான் பூஜித்து வந்த விக்கிரகத்தை பூமியில் மக்களின் நலனுக்காக தேவரின் குருவான பிரகஸ்பதி வாயுவிடம் கொடுத்து, பிரதிஷ்டை செய்தார். குருவும் வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்தபடியால் இத்தலம் குருவாயூர் என அழைக்கப்படுகிறது.

*மதுராவில் உள்ள பிரதான கோயிலான துவராக்ஷ்வில் உள்ள கர்ப்பக்கிரகத்தை நோக்கி ரூபாய் மற்றும் நாணயங்களை பக்தர்கள் வீசுவது விசேஷம். இதன் அருகே பாகவத பிர்லா மந்திரில் ராதையும் கிருஷ்ணரும் நந்தவனத்தில் நிற்பது போல் காட்சியளிக்கும் காட்சி நம் நெஞ்சை விட்டு என்றும் அகலாது.

*கிருஷ்ணருக்கு வெண்ணெய் பட்சணம் ஏன்? ஒரு பெரிய பானை தயிரைக் கடைந்தால் சிறிய அளவு வெண்ணெய் கிடைக்கும். உலகில் உள்ள ேகாடிக்கணக்கான மக்களில் சிலரே பகவானை அடைய பிரயத்தனப்படுகிறார்கள். அவர்களை வெண்ணெயைப் போன்று தனதாக்கிக் கொள்கிறான் கண்ணன் என்பது தாத்பர்யம்.

*ஒருநாள் நந்தகோபரின் வீட்டு வாசலில் வயதான பெண் ஒருத்தி நாவல் பழங்களை கூவி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். அவளது சப்தத்தைக் கேட்ட குழந்தை கிருஷ்ணர் வீட்டிலிருந்த அரிசியை தமது பிஞ்சுக் கையில் எடுத்துக் கொண்டு பழம் வாங்க வந்தார்.

அவரது தளிர் கரங்களால் அரிசியை சரியாகப் பிடிக்க முடியவில்லை என்பதால் தானிய மணிகள் கீேழ விழுந்து சிதறின. இதைக் கண்ட அந்த வயதான பாட்டி கண்ணனின் அபார அழகில் மனதை பறிகொடுத்து கூடையிலிருந்து கைநிறைய நாவல் பழங்களை குழந்தை கிருஷ்ணனுக்கு கொடுத்தாள். பாட்டி வீட்டிற்கு வந்து தன் பழக்கூடையை பார்த்த போது, அதில் பொன்னும் மணியும் நிறைந்திருந்தது.

*துவாரகையில் கோயில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகீசன் என்று பெயர். இந்த ஆலயத்தில் பிரதான வாசல் திறந்தே இருக்கும். இதை தாண்டி சென்றால் மோட்ச துவாரம் வரும். அதையும் தாண்டி சென்றால் தான் கண்ணனின் தரிசனம் கிடைக்கும்.

*உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் பூஜைக்குரிய பொருட்கள் வாங்கும் போது மரத்தால் ஆன மத்து ஒன்றையும் வாங்கும் பழக்கம் பக்தர்களுக்கு உண்டு. உடுப்பியை அன்னப்பிரம்மா என்றும். பண்டரிபுரத்தை நாதப் பிரம்மா என்றும் போற்றுகின்றனர்.

*கேரளாவில் ஆலப்புழை அருகே உள்ள அம்பலப்புழை கிருஷ்ணனுக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. இங்கு தினமும் பாலை சுண்டக் காய்ச்சி பால் பாயசம் தயாரிக்கின்றனர்.

*ராமநாதபுரத்துக்கு அருகிலிருக்கும் திருத்தலம் திருப்புல்லாணி. இங்குள்ள சந்தான கோபாலன், எட்டு யானைகள் மற்றும் எட்டு நாகங்களுடன், ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். கோபாலனுக்கு பாயசம் நிவேதிக்கின்றனர். குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இந்த பாயசத்தை பக்தியுடன் அருந்தினால் குழந்தை செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கை.

*உடுப்பி கோயில் கருவறையில் தாய்க்கு உலகைக் காட்டிய மாயக்கண்ணன் குழந்தை வடிவத்தில் எழுந்தருளியிருக்கிறார். ஒரு கையில் மத்தும், இன்னொரு கையில் கயிறுமாய் உண்ட திருக்கோலத்தில் கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் கண்ணபிரான் காட்சியளிக்கிறார். இப்படி களங்கமற்ற குழந்தையாகக் கண்ணனை இந்த திருத்தலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும்.

*ஸ்ரீநாதத்துவாரா ஸ்ரீநாத்ஜி என்று அழைக்கப்படும் பாலகிருஷ்ணனுக்கு சுத்த நெய்யில் தயாரித்த இனிப்புகளே பிரசாதம். தினமும் எட்டு வகை இனிப்புகள் படைக்கப்படுகிறது. தீபாவளியன்று மட்டும் ஐம்பத்தெட்டு வகை இனிப்புகள் நிவேதனம் செய்யப்படும்.

*கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுகளில் ஈடுபட்டதை ராசலீலா என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.

*குருவாயூரில் உள்ள உன்னிகிருஷ்ணன் விக்கிரகம் பாதாள அஞ்சனம் என்னும் அபூர்வ மூலிகைப் பொருளால் ஆனது.

- ஆர்.ராமலட்சுமி, திருநெல்வேலி.