கோவை,ஆக.1: கோவை கணபதியில் உள்ள ஒரு வீட்டு மாடியில் 3 பறவை குஞ்சுகள் இருந்துள்ளன. அவற்றின் சத்தம் வித்தியாசமாகவும் இருந்துள்ளது.அப்பகுதி மக்கள் பார்த்த போது, அவை வழக்கமான ஆந்தைகள் போல இல்லாமல் முகம் மற்றும் முன்பகுதி வெண்மையாகவும், உடலில் ஆங்காங்கே கருப்பு நிறத்திலும் இருந்துள்ளன.காக்கை மற்றும் பூனைகளால் அவை தாக்கப்படும் அபாயம் இருந்ததால், இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பர்ஸ்ட் ஆர்ட் பவுண்டேசன் என்ற தன்னார்வ அமைப்பினருக்கு தகவல் அளித்தனர்.
அவ்வமைப்பின் மீட்பு மற்றும் பயிற்சியாளர் சாந்தகுமார் பார்த்த போது, அவை கூகை வகை ஆந்தை குஞ்சுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து குஞ்சுகளையும் பத்திரமாக மீட்ட அவர், கோவை வனத்துறையிடம் ஒப்படைத்தார். இதையடுத்து 3 குஞ்சுகளும் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் உள்ள பறவைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து சாந்தகுமார் கூறியதாவது, ‘‘மீட்கப்பட்டவை ஒன்றரை மாத குஞ்சுகள். இந்த வகை ஆந்தைகள் அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளன. குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளின் சந்து பொந்துகளில் வசிக்கும் பழக்கம் கொண்ட இவை,தவறி விழுந்து இருக்கலாம் அல்லது பறக்க முயற்சித்த போது கீழே விழுந்து இருக்கலாம். தற்போது பறவைகள் மறுவாழ்வு மையத்தில் உணவு அளிக்கப்பட்டு, அவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. பறக்கும் சூழல் அவற்றுக்கு வந்த பின்னர், வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவிப்பார்கள்’’ இவ்வாறு அவர் கூறினார்.