Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு 15 நாளில் உபரி நீர் வந்தால் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் துவக்கம்

*அமைச்சர் முத்துசாமி விளக்கம்

ஈரோடு : கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு அடுத்த 15 நாளில் உபரி நீர் வந்தால் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் துவங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அத்திக்கடவு-அவிநாசி திட்ட முன்னேற்ற நிலை தொடர்பான அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமை தாங்கினார். தொடர்ந்து, அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்துவது தொடர்பான சம்பந்தப்பட்ட விவசாயிகளுடன், கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற நாள் முதல் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தி திட்டப்பணிகளின் நிலை குறித்து தொடர்ந்து, கேட்டறிந்து வருவதுடன், விரைவாக திட்டத்தினை முடித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தி வருகிறார். இத்திட்டத்தில் மொத்தம் உள்ள 6 நீரேற்று நிலையங்களில் 1 முதல் 3 நீரேற்று நிலையங்கள் உள்ள பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதில் சிறு தொய்வு ஏற்பட்டதன் காரணமாக பணிகள் சிறு காலதாமதமானது.

நீரேற்று நிலையம் 1 முதல் 3 இடையில் உள்ள பட்டா நிலங்களின் வழியாக பிரதான குழாய் பதிக்கும் பணிகளை தொடங்கும் முன் நில இழப்பீடு மற்றும் பயிர் இழப்பீடு தொகை வழங்கிய பின் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதால் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை குழாய் பதிக்கும் பணிகளை தொடங்க இயலவில்லை. மாவட்ட கலெக்டர் மற்றும் நீர் வளத்துறை அலுவலர்கள் மூலம் பல்வேறு பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டும் நில உரிமையாளர்கள் முன் வரவில்லை.

தொடர்ந்து நில உரிமையாளர்களிடம் அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குழாய் பதிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு, கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பணிகள் நிறைவு செய்யப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம் தேதி அத்திக்கடவு-அவிநாசி திட்ட சோதனை ஓட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. இருப்பினும் பயன்பாடு இல்லாத காரணத்தல் பல்வேறு இணைப்பு குழாய்களில் பழுது ஏற்பட்டு நீர்கசிவு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து, பிற துறைகள் மூலம் கிளை குழாய்களில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 750 குளம் குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டது.

அதன் பின்னர் போதிய உபரி நீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இல்லாத காரணத்தினால் மீண்டும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டு, நடப்பாண்டு கடந்த ஜனவரி மாதம் 1,045 குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் உபரிநீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இல்லாத காரணத்தினால், இத்திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலவில்லை. மேலும், கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி முதல் காலிங்கராயன் அணைக்கட்டில் உபரிநீர் வரத்தொடங்கி, காவேரி ஆற்றில் வெள்ள நீர் வரத்தொடங்கியதால், இத்திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்னேற்பாடாக சோதனை ஓட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதியன்று உறுதியாக பவானி சாகரில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி, தண்ணீர் திறந்துவிட்ட பிறகு கிடைக்கும் அதிகப்படியான உபரிநீர் பெற்றவுடன் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் உள்ள 6 நீரேற்று நிலையங்களிலும் ஒரே நேரத்தில் இயக்கும் வாய்ப்புகள் அமைந்தவுடன் உடனடியாக இத்திட்டப்பணியினை விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இத்திட்டத்தில் சிறு, சிறு பழுதுகள் ஏதேனும் இருப்பின் அந்த பழுதுகளையும் விரைந்து முடிக்க தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் பட்டா நிலங்களின் வழியாக செல்லும் அத்திக்கடவு அவிநாசி திட்ட குழாய்களை இயக்கம் மற்றும் பராமரிப்பு காலங்களில் சென்று ஆய்வு மற்றும் பழுது பார்ப்பதற்கு ஏதுவாக நில உரிமையாளர்களுக்கு நிரந்தர குத்தகை மூலம் பாதை உரிமை தொகை பெறுவதற்கு ஒப்புக்கொண்டவர்களுக்கு கலெக்டர் மூலமாக அரசிற்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டு, தற்பொழுது அரசாணை கிடைக்கபெறும் நிலையில் உள்ளது. அரசாணை பெற்றவுடன் மாவட்ட கலெக்டர் மூலமாக நில உரிமையாளர்களிடம் பாதை உரிமைக்கான ஒப்பந்தம் இடப்பட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.

இதில், மொத்தம் 1,416 விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டதில், பெரும்பாலானவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. 100 பேருக்கு இனி தான் நஷ்ட ஈடு வழங்குவது குறித்து பேச உள்ளோம். இத்திட்டம் திறப்பு குறித்து பல தேதிகளை அறிவித்ததற்கு காரணம், திட்டப்பணியை அதிகாரிகள் விரைந்து முடிப்பதற்காக மட்டுமே. யாரையும் ஏமாற்றுவதற்காக அல்ல. கூடுதல் தண்ணீர் வந்து விடும் என நம்பி தான் செய்தோம். ஆனால், வரவில்லை. இத்திட்டம் துவங்கும் முன்பே நிலத்தை கையகப்படுத்தியிருந்தால், இவ்வளவு காலதாமதம் ஆகியிருக்காது. கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் திறக்கப்பட்டு, 10 அல்லது 15 நாட்களில் கசிவு நீர் கூடுதலாக வந்தால், அன்றைய தினமே அத்திக்கடவு-அவிநாசி திட்டம் திறப்பு விழா செய்யப்பட்டு, 1,045 குளங்களுக்கும் தண்ணீர் தொடர்ந்து நிரப்பப்படும்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் 1,045 குளங்களை தவிர பிற குளங்களை சேர்க்க முடியாது. அதற்கான பம்பிங் ஸ்டேஷன், குழாய்கள் இணைப்பு, கட்டுமானங்கள் இல்லை. விவசாயிகளின் கோரிக்கைபடி, கூடுதலாக குளங்களை இணைக்க வேண்டும் என்பதுதான் திமுகவின் எண்ணமும், முதல்வரின் எண்ணமுமாக உள்ளது. அதற்கு தனி திட்டம் தான் போட வேண்டும். அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக பாஜ சார்பில் அறிவித்துள்ள உண்ணாவிரத போராட்டம் நியாயமானது. அவர்கள் அரசியல் செய்வதாக நான் கூறவில்லை. இத்திட்டத்தின் கால தாமதத்திற்கு என்ன காரணம் என்பதை இங்கு கூறியுள்ளேன். அவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் திறப்புக்கு பின், கசிவு நீர் வரவில்லை என்றால், நாங்களும் அவர்களுடன் சென்று போராடுவோம். பாஜ மாநில தலைவர் அண்ணாமலையோ, விவசாய சங்க அமைப்போ எங்களிடம் கேட்டால் திட்டத்திற்கு உண்டான விளக்கத்தை அளிக்கிறோம். இது தான் உண்மையான நிலைமை. எனவே, 20ம் தேதி பாஜ சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.இந்த கூட்டத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், வருவாய் கோட்டாட்சியர்கள் சதீஷ்குமார், கண்ணப்பன், நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் திருமலைகுமார், செயற்பொறியாளர்கள் நரேந்திரன், சுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முகமது குதுரத்துல்லா, பிரேமலதா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.