Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கார்த்திகையில் தொடங்கும் சாஸ்தா ப்ரீதி திருவிழா

இயற்கை எழில் பொங்கும் கேரள மாநிலத்தில், கார்த்திகை மாதம் முதல் தேதியிலிருந்து மார்கழி மாதம் இறுதி வரை ‘‘மண்டல காலம்’’ என்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் பழக்கம் இருந்து வருகிறது. அச்சமயத்தில், மாநிலத்தில் உள்ள பல ஆலயங்களில் விமரிசையாக விழாக்களும் உற்சவங்களும் நடைபெறும். விரதம் இருப்பதற்கும், தங்கள் பிரார்த்தனைகளைச் செலுத்துவதற்கும் கேரள மக்கள் இந்த ‘மண்டல காலத்தைப் புனிதமாகக் கருதுகிறார்கள்.’ முக்கியமாக, ஸ்ரீ ஐயப்பசுவாமிக்கு கார்த்திகை மண்டலகாலத்தில் பூஜைகளும், பஜனைகளும், விளக்குகளும், சாஸ்தா ப்ரீதி விழாக்களும் மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன. இவ்வாறு சிறப்புடன் நடைபெறும் உற்சவங்களில், ஆண்டுதோறும் பாலக்காடு நகருக்கு அருகிலிருந்து தெற்கே சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நூறணி என்ற கிராமத்தில் நடைபெறும்.

‘சாஸ்தா ப்ரீதி’ மிகவும் புகழ் வாய்ந்ததாகும். அங்கு சாஸ்தா ப்ரீதிக்கு முதல் நாள் துளசியம்மனுக்குப் பூஜை செய்யும் பழக்கமும் இருந்து வருகிறது. மலையாள மொழியில் உள்ள சாஸ்தா துதிப் பாடல்களில், ‘‘நூறணி செல்லப்பிள்ளை’’ என்று போற்றிக் குறிப்பிடப்படும் அளவுக்கு அவ்வூர் சாஸ்தா பெரும் புகழ் பெற்று விளங்குகிறார்.சபரி மலையில் மகர ஜோதியன்று, மலையின் மீது கருடன் வட்டமிட்டால், ‘‘நூறணியில் சாஸ்தா பூஜை முடிந்து ஐயப்பன் சபரிமலைக்கு வந்து விட்டதாக அர்த்தம்’’ என்ற ஆழ்ந்த நம்பிக்கையும் கேரள மக்களிடையே இருந்து வருகிறது. நூறணி சாஸ்தா ப்ரீதி உற்சவம், சுமார் ஏழு வாரங்கள் நடைபெறுகிறது.

அதாவது, கார்த்திகை மாதம் முதல் தேதி தொடங்கி, மார்கழி மாதம் மூன்றாவது வாரம் வரை. நூறணி ஆலயத்தில் ஒரே மதிற்சுவருக்குள் ஸ்ரீ சுந்தர ராஜப் பெருமாள் வடக்கேயும், தர்மசாஸ்தா தென்புறமும் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர். ஸ்ரீ சுந்தர ராஜப் பெருமாள் ஆலயத்தின் கருவறை மண்டபத்தைச் சுற்றியும் தசாவதாரக் காட்சிகள் காணப்படுகின்றன. இந்த மண்டல காலம் முழுவதும், தினந்தோறும் காலையில் ஸ்ரீ சாஸ்தாவுக்கும், சுந்தரராஜப் பெருமாளுக்கும் அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறுகின்றன.

தினமும் மாலையில் வேத பாராயணம் நடைபெறுகிறது. இது பக்தர்கள் ஒவ்வொருவரின் உபயமாக அமைகிறது. பின்னர், அர்த்த ஜாம பூஜை நடைபெறும் போது, நூறணி தலத்திற்கே உரிய பாணியில் பஜனைகள் தொடர்கின்றன. முதல் நாள் துளசி பூஜையன்று துளசியம்மனுக்கு ‘புருஷஸூக்தம்’ மந்திர ஜபத்துடன் பதினாறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, திவ்விய அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர், சாஸ்தா ப்ரீதி நாளன்று போலவே சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது அம்மன் அமர்த்தப்பட்டு, செண்டை மேளம், பஜனை கோஷ்டி, நாதஸ்வர இசை மற்றும் பாரம்பரிய இசைக்கருவி மற்றும் நாட்டியங்களுடன் ஊர்வலம் சென்று, சுமார் மதியம் ஒரு மணிக்கு மேல் கோயிலுக்குத் திரும்புகிறது.

அப்போது பெரிய பெரிய பாத்திரங்களில் ‘சதசயம்’ எனப்படும் விசேஷமான பாயசம் தயாரிக்கப்பட்டு, துளசியம்மன் சந்நதியில் வைத்து நிவேதனம் செய்யப்படுகிறது. மாலை நான்கு மணிக்கு, திறந்த வெளியில் பஞ்ச வாத்திய மேளத்துடன் அலங்காரம் செய்யப்பட்ட யானை மீதான சீவேலி ஆரம்பித்து, இரவு எட்டு மணிக்கு மேல் கோயிலுக்குத் திரும்பும். அச்சமயம் பிரபலங்களின் பாட்டுக் கச்சேரியும் நடைபெறும். கண்டும் கேட்டும் மகிழ அங்கு ஆயிரக் கணக்காண பக்தர்கள் கூடியிருப்பதைக் காணலாம்.

மறுநாள், சாஸ்தா ப்ரீதியன்று ஐயப்ப சுவாமிக்கும், சுந்தரராஜப் பெருமாளுக்கும் பூர்ணாபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் முடிவுற்றதும் மிகப் பெரிய அளவில் ‘சமாராதனை’ நடைபெறுகிறது. இதில் ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடின்றி அனைவரும் பங்கு கொள்கின்றனர். சாஸ்தா ப்ரீதியன்று, எங்கும் இல்லாத வகையில் ஐந்தாயிரம் - ஆறாயிரம் என்ற எண்ணிக்கையில் முற்றின தேங்காய்களைக் கொண்டு ‘‘சூனறிக்காய்’’கள் போடுவது நூறணி கிராமம் பூராவும் எதிரொலிக்கும். நடு இரவில், ஊர் மக்களோடு நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறும். அச்சமயம் அவர்கள் தங்கள் திருப்தியையும், நன்றியையும் ‘‘இளைய பகவதி’’ என்றழைக்கும் வௌிப்பாடு மூலம் தெரிவித்துக்

கொள்கிறார்கள்.

நூறணி கிராமத்தில், ‘‘ஸ்ரீ விற்றூணியார் விநாயகப் பெருமானை’’ மூலவராகக் கொண்ட மற்றொரு கோயிலும் இருக்கிறது. அதே கோயிலில் சிவன், அம்பாள், சுப்பிரமணியர் சந்நதிகளும் இருக்கின்றன. அதிசயமாக இங்கு சனீச்சுவர பகவான் தனிச் சந்நதி கொண்டு அருள்பாலிக்கிறார். கேரளத்தில் இது ஓர் அபூர்வமாகும். விழாக்காலங்களில் இந்தத் தெய்வங்களுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இவ்வாறு நூறணி கிராமத்தில் நடைபெறும் ‘சாஸ்தா ப்ரீதி’ மிகவும் புகழ் பெற்ற விழாவாகும்!

ஆர்.சந்திரிகா