Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெய்வத் திருவருள் பொங்கும் திருக்கார்த்திகை தீபம்

1. முன்னுரை

நாம் மாலையில் நம் வீட்டில் விளக்கேற்றுகிறோம். ஆனால் ஊர் முழுக்க ஒவ்வொரு வாசலிலும் தோரணமாக நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றினால் எப்படி இருக்கும்? ஊரே ஜெக ஜோதியாக இருக்கும் அல்லவா. அப்படி ஊரெல்லாம் விளக்கேற்றி விழாக் கோலம் கொள்ளும் நாள் தான் திருக்கார்த்திகை திருநாள். திருக்கார்த்திகை திருநாளில் எல்லா ஆலயங்களிலும் விளக்கு ஏற்றப்பட்டாலும் அக்னித் தலமான திருவண்ணாமலை ஆலயத்தில் ஏற்றப்படும் பரணி தீபமும் மலை உச்சியில் அண்ணாமலைக்கு அரோகரா என்ற கோஷத்துடன் ஏற்றப்படும் மகா தீபமும் உலகப் பிரசித்தி பெற்றவை. இந்த முத்துக்கள் முப்பது பகுதியில் திருக்கார்த்திகை தீப உற்சவத்தின் பல்வேறு சிறப்புகளைப் பற்றி நாம் காண இருக்கின்றோம்.

2. கார்த்திகை மாதம்

கார்த்திகை மாதம் மிகவும் சிறப்பு பெற்றது. கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு உரிய நாளாகக் கருதப்பட்டு கார்த்திகை சோம விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. அன்று பெரும்பாலான சிவாலயங்களில் சங்கு அபிஷேகம் விசேஷமாக நடைபெறும். பல மகான்களும் சித்தர்களும் அவதரித்த இந்த மாதத்தில் தான் திருவண்ணாமலை தீபம் எனும் உலக பிரசித்தி பெற்ற தீபத் திருவிழா நடை பெறுகிறது. 64 நாயன்மார்களில் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்கநாயனார், கணம்புல்ல நாயனார், சிறப்புலி நாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பாம்பாட்டி சித்தர், கோரக்கர் சித்தர் முதலிய சித்தர்களின் குருபூஜை தினங்களும் இந்த கார்த்திகை மாதத்தில் வருகின்றது.

3. எந்த நாளில் கார்த்திகைத் தீபம்?

இந்த ஆண்டு திருவண்ணாமலையில் கார்த்திகை தீப உற்சவம் நவம்பர் மாதம் 21ம் தேதி அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவத்தோடு தொடங்கியது. அதற்குப் பிறகு அருள்மிகு பிடாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகருக்கும் சந்திரசேகருக்கும் உற்சவம் நடைபெற, அசல் உற்சவமானது டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்தோடு தொடங்கியது. இந்த உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதி உலா கண்ருள்வார் சிம்ம வாகனம், சூரிய பிரபை வாகனம், இந்திர வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், ரிஷப வாகனம், மகாரதம் என்று ஒவ்வொரு நாளும் கண் கொள்ளாக் காட்சியாக உற்சவர் வீதி உலா கண்டருள்வார்.

இத்தனை நாள் உற்சவத்தின் மகுடமாக விளங்கும் உற்சவம் தான் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி காலையில் திருக்கோயிலில் ஏற்றப்படும் பரணி தீபமும் அன்று மாலை அண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபமும் ஆகும். திரு வண்ணாமலையில் தீபம் எந்த நேரத்தில் ஏற்றப்படுகிறதோ, அதை அனுசரித்துத்தான் ஒவ்வொருவர் இல்லத்திலும் திருக்கார்த்திகை விளக்குகளை ஏற்றி, தீபக் சுடராக விளங் குகின்ற சிவபெருமானை வணங்குவார்கள். அப்பொழுதுதான் அவர்கள் கார்த்திகை விரதத்தையும் முடித்துக் கொள்வார்கள்.

4. இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு

கைலாயத்தில் ஒருமுறை உமாதேவியார் சிவனின் கண்களை விளையாட்டாக மறைக்க பிரபஞ்சமே இருட்டில் தவித்தது. உயிர்கள் அனைத்தும் துயரத்தில் இருந்தன. அகில மாதாவாகிய தானே இப்படிப்பட்ட தவறு செய்து விட்டோமே என்று உமாதேவி வருந்தினார். தான் பாவம் செய்து விட்டதாகக் கருதி அதற்கு பிராயசித்தத்தைத் தேடி காஞ்சிபுரத்தில் சிவபெருமானை நோக்கி தவத்தில் இருந்தார். இறைவன் தேவிக்கு காட்சி அளித்தார்.

உமாதேவியாரை திருவண்ணாமலைக்கு வரும்படியாக அருள்புரிந்தார். உமாதேவியாரும் அண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலையில் கௌதம மகரிஷியின் ஆசிரமத்தில் தவம் செய்தார். விருச்சிக மாதம் திருக்கார்த்திகை பௌர்ணமி நாள் அன்று இறைவன் தேவிக்கு காட்சியளித்து இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார். அந்த தினமே திருக்கார்த்திகை தினமாகக் கொண்டாடப்படுகிறது. சிவனுக்கு உமையொருபாகன் என்று பெயர். ‘‘மாமலை மங்கை ஓர் பால் குறியுடையன்’’ என்று அர்த்தநாரீஸ்வரர் திருமேனியைத் தனது திருப்பூந்துருத்தி முதலாம் பதிகத்தில் பாடுகிறார் அப்பர் ஸ்வாமிகள்.

5. மங்கலத்தைக் குறிக்கும் தீபம்

தீபம் என்பது மங்கலத்தைக் குறிக்கும். தீபம் ஏற்றாமல் நாம் எந்தக் காரியத்தையும் தொடங்குவதில்லை. கார்த்திகை மாதத்தில் தீபம் என்பது ஒரு அடையாளம் தானே தவிர, எல்லா நாள்களும் எல்லா மாதங்களும் நமக்கு திருக்கார்த்திகை தினம் தான். கார்த்திகை என்பது சுடர் ஒளி விஞ்சிய நட்சத்திரம். அந்த நட்சத்திரத்தில் சந்திரன் பிரகாசிக்கும் நிறைமதி நாள் தான் மாதத்தின் பெயராக அமைந்திருக்கிறது. ஜோதிடத்தில் கார்த்திகை என்பது சூரியனுக்குரிய நட்சத்திரம். சூரியன் தான் இந்த பூமியில் சுடர்விடும் ஒரே தீபம். அந்த தீபத்திலிருந்து தான் மற்ற தீபங்கள் (கிரகங்கள்)ஒளி பெறுகின்றன. சூரியனின் எழுச்சியை நினைவு கூறும் விழா தான் கார்த்திகை தீபம்.

6. திருத்தேர் உற்சவம்

கார்த்திகை தீபத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் அதாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்ற அண்ணாமலையார் திருத்தேர் உற்சவம் மிகச் சிறப்பாக உற்சவமாகும். பொதுவாக திருத்தேர் உற்சவம் என்பது தத்துவத்தின் பின்னணியில் நடைபெறுகிறது. கோயில் உற்சவ மூர்த்தி தேரிலேறி வீதியில் வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவது தான் திருத்தேர் உற்சவத்தின் சிறப்பு. திருக்கோயிலுக்கு வர இயலாதோர், மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியோர், முதியோர், நோயுற்றோர் போன்ற அனை வரும் இறைவனின் திருவருளைப் பெற வேண்டும் என்பதே தேர்த் திருவிழாவின் முக்கிய நோக்கம். இறைவன் பக்தர்களை நோக்கி வருவதாக கருதப்படும், தேர் திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்வது ஒற்றுமையையும், ஆன்மிகப் பற்றையும் வளர்க்கிறது.

7. தேர் எதைக் குறிக்கிறது?

தேரின் எட்டு அடுக்குகள் பிரபஞ்சத்தின் எட்டுத் திசைகளைக் குறிக்கிறது. தேரின் உச்சியில் உள்ள சோடசாந்தம், துவாதசாந்தம் போன்ற பகுதிகள் உடலில் உள்ள முக்கியமான ஆன்மிக மையங்களைக் குறிக்கின்றன. தேரின் கால்கள் தத்துவங்களையும், முன் மூன்று துறைகள் கண்களையும், தேரின் நடுவில் தாங்கும் குத்துக்கால்கள் புருவ மத்தியஸ்தானத்தையும் குறிக்கின்றன. கடோபநிஷதத்தில் மனிதனின் உடலைத் தேராகவும் உயிரைத் தேர்த்தலைவனாகவும் புலன்களைக் குதிரைகளாகவும் புத்தியைத் தேர்ப் பாகனாகவும் புலன் சார் விடயங்களைத் தேரோடும் வீதியாகும் உவமித்திருக்கும் முற்றுருவகம் ஒன்றைக் காணலாம்.

8. தேரும் திருக்கோயிலும்

தேரானது, நகரும் திருக்கோயில் என்றும், திருக்கோயில் என்பது நிலையான தேர் என்றும் கருதப்படுகிறது. இரண்டும் ஒரே அமைப்பையே கொண்டுள்ளன. சைவ சித்தாந்தத்தில் தேரானது சிவ சொரூபமாகவே கருதப்படுகிறது.

மந்திர கேசரி மலைகள் அச்சு,

சூரிய சந்திரர் தேர் சக்கரங்கள் (சில்லுகள்), ஷட்ருதுக்கள் சந்திகள்

பதினான்கு உலகங்கள் தட்டுகள்

ஆகாச ஆசனம்

நதிகள் கொடிகள்

மோட்ச உலகம் மேல்விரிவு

யாகங்கள் சட்டங்கள்

நாள் திதி நட்சத்திரம் போன்றன குறுக்கு மரங்கள்:

அஷ்ட பர்வதங்கள் தூண்கள்

அஷ்ட திக்கஜங்கள் தாங்கும் ஆதாரங்கள்

ஏழு கடல்கள் திரைச் சீலைகள்

உபவேதங்கள் மணிகள்

வாயுக்கள் படிகள்

நால்வேதங்கள் குதிரைகள்

உச்சிக்குடை பிரம்மரந்திரம்

கலசம் சோடஷாந்தத்தானம்

ஆக தேரானது ‘‘சிவரூபம்’’ என்கிறது சைவ சித்தாந்தம். திருவண்ணாமலை தேர் விழா ஏழாம் நாள் நடைபெறும். பஞ்ச மூர்த்திகள் ஐந்து தேர்களில் வலம் வருவார்கள்.

9. பிரமாண்டமாக நடைபெறும்

இத்தேர்த்திருவிழா நகரத்தில் பிரமாண்டமாக நடைபெறும். இதை காண லட்சகணக்கான மக்கள் வருவர். தேர் வடம் பிடித்து இழுப்பர். காலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி மகாரதத்தில் எழுந்தருள்வர். தேர் ஓடும் போது சங்கிலி பிடித்து திரும்ப வசதியாக ஒவ்வொரு வீதி முனையிலும் ஒரு சந்து விடப்பட்டே இந்த நகரம் அமைந்துள்ளது. அண்ணாமலையார் தேர் புறப்படுவதற்கு முன்பு தேரடி வீதியில் உள்ள முனிசுவரனுக்கு சிறப்பு வழிபாடு, தேர்காலில் தேங்காய் உடைத்தல், பூசணிக்காய், எலுமிச்சை பலியிடுதல் போன்றவை நடைபெறும். பின்பு தேர் புறப்படும். இத்தேர் இழுக்கும் நிகழ்வில் வெளியூர் மக்களும் வேண்டுதல் உடையோரும் தேர் இழுப்பர். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்திக் கடனாக பக்தர்கள் கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தைகளை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள்.

10. பரணி நட்சத்திரத்தில் பரணி தீபம்

மகா ரதத்திற்கு அடுத்த நாள் திங்கட்கிழமை (1.12.2025) பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறும். மாலையில் குதிரை வாகனத்தில் வீதிஉலாவும், அடுத்த நாள் செவ்வாய்க் கிழமை (2.12.2025) கைலாச வாகனத்திலும் காமதேனு வாகனத்திலும் உற்சவமூர்த்தி வீதி உலா கண்டருள்வார். இதற்கு அடுத்த நாள் தான் (3.12.2025 புதன்) திருக்கார்த்திகை தீபம். புதன்கிழமை. அன்று மாலை 4:30 மணி வரை பரணி நட்சத்திரம் இருப்பதால் காலையில் பரணி தீபம் ஏற்றுவார்கள். சந்திரன் நீசம் பெறும் விருச்சிகத்தில் சூரியன் இருக்க, அவரிடமிருந்து ஒளி பெறும் சந்திரன் ரிஷப சுக்கிரனுக்குரிய பரணி நட்சத்திரத்தில் இருக்கும் வேளையில் பரணி தீபம் ஏற்றுகிறோம்.

11. பரணி தீபம் தத்துவம்

மணிவாசகப் பெருமான் நமது சிவபுராணத்தில் சிவனை வாழ்க வாழ்க வாழ்த்துகின்றார்.

நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!

இதில் ‘‘ஏகன் அநேகன் இறைவன்’’ என்ற தத்துவத்தை உணர்த்துவதுதான் பரணி தீபம். பரணி தீபம் என்பது கார்த்திகை தீபத் திருநாளன்று அதிகாலையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஏற்றப்படும் ஒரு சிறப்பு தீபம் ஆகும். ஒரு விளக்கை ஏற்றி, அதிலிருந்து ஐந்து விளக்குகளை ஏற்றி, அந்த ஐந்து விளக்குகளையும் மீண்டும் ஒன்றாக்கி ஒரே தீபமாக மாற்றுவதே பரணி தீபம் ஆகும். இது ‘ஏகன் அநேகன்’ என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

12. அக்னியே பரம்பொருள்

பரம்பொருளின் சக்தி வடிவாக அக்னி விளங்குகிறது, நெருப்பு என்பது ஒரு அடிப்படை சக்தி. இந்த சக்தி அனைத்தையும் உருவாக்குவதற்கும், அழிப்பதற்கும், மாற்றுவதற்கும் காரணமாகிறது. இந்தப் பார்வையில், அக்னி பரம்பொருளின் சக்தியின் வெளிப்பாடாகக் கருதப்படுகிறது. அனைத்து சக்திகளும் அக்னியின் சுடர்விட்டு பிரகாசிக்கும் வடிவில் பரம்பொருள் அக்னி ரூபமாகவே இருக்கிறான். எங்கும் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறான். நம் ஆன்மாவில் ஒளிவிடும் ஜோதியாக இருக்கின்றான். அந்த ஜோதியை உணர்வதே ஞானம். உணர முடியாததே இருட்டு எனும் அஞ்ஞானம். அந்த இருட்டை மாய்த்து பரம்பொருளை உணர வைப்பதே தீபம். ஒரு தீபம் ஏற்றினால் அது எல்லா திசையிலும் ஒளி பரவி நிற்கும். பரம்பொருளும் அப்படித்தான். அவன் கருணையும், ஆற்றலும் எல்லாத் திசையிலும் பரவி நிற்கும்.

13. கார்த்திகை விரதம்

கார்த்திகை தீப விரதத்தைப் பரணி நட்சத்திர நாளில் துவங்க வேண்டும். பரணி நட்சத்திரத்தன்று ஒருவேளை மட்டுமே உணவு உண்ணலாம். பக்கத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று விரதத்தைத் தொடங்கலாம். இரவு உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால் பழம் அரை வயிறு எடுத்துக் கொள்ளலாம். கார்த்திகை திருநாளில் அதிகாலை எழுந்து, நீராடி இறைவனை வணங்க வேண்டும். தெய்வத் துதிகளையும் பாமாலைகளையும் ஜெபிக்க வேண்டும். காலையில் வீட்டை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். பூஜையறையில் உள்ள தூசு களையும் அழுக்குகளையும் அகற்றி, பூஜையறையின் விளக்குகளைத் தேய்த்து, அலம்பி வைத்துக் கொள்ளவேண்டும்.

மாலையில் வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி மாக்கோலமிட்டு, அகல் விளக்குகளில் எண்ணெய் விட்டு, திரிவைத்து விளக்கேற்ற வேண்டும். மாலை திருவண்ணாமலை தீபம் ஏற்றியவுடன் நம் பூஜை அறையில் பூஜை முடித்து தீபாராதனை காட்டி விரதத்தை முடிக்க வேண்டும். ஆனால் அன்று அரிசி உணவு உண்ணக்கூடாது. பால், ஜவ்வரிசி கஞ்சி, பயத்தம்பருப்பு கஞ்சி, நிவேதனங்கள் சாப்பிடலாம்.

14. விளக்கின் தத்துவம் இதுதான்

விளக்கின் தத்துவம் என்பது அறிவின், நன்மையின், மற்றும் ஆன்மிகத்தின் குறியீடாகும். இது, அறியாமையாகிய இருளை நீக்கி, ஞானத்தைப் பெற்றுத்தரும் ஒரு வழிபாட்டு முறையாகும். விளக்கு ஏற்றும்போது, பொருட்கள் தெளிவாகத் தெரிவது போல, நம் மனதில் உள்ள அறியாமையாகிய இருளை நீக்கி, எல்லாவற்றையும் அறிந்திடும் அருள் உணர்வுகளைப் பெற வேண்டும் என்பதே இதன் தத்துவமாகும். விளக்கு ஏற்றும் போது நம் எண்ணங்கள் செயல்கள் எல்லாமே மேல் நோக்கியதாக இருக்க வேண்டும்.

பொதுவாக இந்த இந்த திசையில் விளக்கு ஏற்றினால் என்னென்ன பலன்கள் உண்டு என்றெல்லாம் சொல்கிறார்கள். ஒரு விஷயம்: விளக்கு ஏற்றும் திசை என்பது விளக்கின் முகம் பற்றியதுதான். ஆனால் விளக்கின் சுடர் எல்லா திசைகளிலும் பிரகாசிக்கும். நமக்கு அந்த சுடர் தான் முக்கியம். விளக்கு ஏற்றும் பொழுது கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். அந்தச் ஸ்லோகம் இது.

கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:

ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா

பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:

‘‘புழுக்களோ, பறவைகளோ, அல்லது ஒரு கொசுவோ, மரமோ, இன்னும் நீரிலும், பூமியிலும் உள்ள ஜீவராசிகள் எதுவானாலும், மனிதர்கள் பேதமின்றி யாரானாலும் இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் தீர்ந்து, இன்னொரு பிறவி எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்” என்று இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம்.

15. அண்ணாமலை என்னும் அருட்பெருஞ்சோதி

மணிவாசகப் பெருமான் இறைவன் நெருப்புப் பிழம்பாய் எழுந்ததை, தம்முடைய திருவெம்பாவையின் முதல் பாடல் முதல் வரியிலேயே சொல்லி விடுகின்றார். கார்த்திகை மாதத்தில் தீபச் சுடராய் எழுந்த திவ்ய மங்களப் பரம்பொருளை, திருவெம்பாவையின் முதல் பாடலாக, அவர் பதிவு செய்கின்றார்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்

சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

இதில் முக்கியமான வார்த்தை

‘‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி’’

16. கார்த்திகை பௌர்ணமி

திருக்கார்த்திகை தீபம் என்பது எட்டாவது மாதமாகிய கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி தினத்தில் நடைபெறும் உற்சவமாகும். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வரும். ஆனால் கார்த்திகை பௌர்ணமிக்கு மட்டும் என்ன சிறப்பு.? 12 ராசிகளின் கார்த்திகை மாத ராசியான விருச்சிக ராசியில் தான் சந்திரன் நீசம் பெறுகிறார். அதாவது பலம் இழக்கிறார். அந்த ராசியில் ஐப்பசியில் நீசம் பெற்ற சூரியன்.

ஆரோகண கதியாக விருச்சிகத்தில் நுழைய, நேர் எதிர் ராசியில் (ரிஷப ராசியில்) சந்திரன் உச்சம் பெறுகின்றார். சந்திரன் உச்சம் பெற்ற பௌர்ணமி என்பது வருடத்தில் ஒரே ஒரு பௌர்ணமி தான். அதுதான் கார்த்திகை பௌர்ணமி. அதனால் மற்ற பௌர்ணமியை விட கார்த்திகை பௌர்ணமியில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திற்கு மிகப்பெரிய சிறப்பு. சந்திரனின் நீச தோஷத்தை, நீக்க விருச்சிக மாதமாகிய கார்த்திகையில் தீபம் ஏற்ற வேண்டும்.

17. பரணி தீபமும், கார்த்திகை தீபமும்

பரணி, கார்த்திகை, ரோகிணி மூன்றும் அடுத்தடுத்த நட்சத்திரங்கள். பரணி நட்சத்திரம் சுக்கிரனுக்கு உரியது. கார்த்திகை நட்சத்திரம் சூரியனுக்கு உரியது. ரோகிணி நட்சத்திரம் சந்திரனுக்கு உரியது. இந்த மூன்று நட்சத்திரங்களிலும் சந்திரன் பிரயாணப்படும் நாட்களில் முறையே பரணி தீபம், கார்த்திகை தீபம், பாஞ்சராத்ர தீபம் ஏற்றப்படுகிறது. அதனால் திருக் கார்த்திகை தீபம் என்பது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தீபம் ஏற்றப்படும் விழாவாகும்.

1. குமாராலய தீபம்: கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தை முருகனுக்கு உரியதாக கருதி அந்நாளில் முருகன் ஆலயங்களில் தீபமேற்றி வழிபடுகின்றனர். இது குமாராலய தீபம் ஆகும்.

2. விஷ்ணுவாலய தீபம்: கார்த்திகை மாதத்தில் வரும் ரோகிணி நட்சத்திரம் கிருஷ்ணருக்கு உரியதாகும். இந்நாளில் பெருமாள் ஆலயங்களில் தீபமேற்றி கொண்டாடுவதை விஷ்ணு வாலய தீபம் என்று அழைக்கிறார்கள்.

3 .சர்வாலய தீபம்: கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று வீடுகளிலும், ஆலயங்களிலும் விளக்கேற்றி கொண்டாடுவதற்கு சர்வாலய தீபம் என்று பெயர்.

18. பாஞ்சராத்திர தீபம்,வைகானச தீபம்

திருமால் ஆலயங்களிலும், சிவாலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும் கார்த்திகை தீபம் என்பது பொது விஷேசமாகவே இருக்கிறது. சிவாலயங்களில் சந்திர உதயமான வேளையில் பௌர்ணமி இருக்கும் காலத்தில் தீபம் ஏற்றுகின்றனர். வைணவத்தில் சூரிய வேளையில் கார்த்திகை நட்சத்திரமும் பவுர்ணமியும் இருக்க வேண்டும். இதிலும் இரண்டு அமைப்புகள் உண்டு. பாஞ்சராத்திர தீபம், வைகானச தீபம் என்று சொல்லுவார்கள்.

பாஞ்சராத் திரிகளுக்கு சூரியன் இருக்கும்பொழுது பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் இருக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் சூரிய உதய காலத்தில் ரோகிணி நட்சத்திரமும் பௌர்ணமியும் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் கார்த்திகை நட்சத்திரமும் பிரதமையும் இருக்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு அமைப்பு இருக்கும்போது பாஞ்சராத்ர தீபத் திருநாளை அனுஷ்டிக்கிறார்கள். பாஞ்சராத்ர தீபம் இந்த ஆண்டு 4.12.2025 வியாழன் அன்று வருகிறது. அன்று ரங்கம் முதலிய பாஞ்சராத்ரம் பின்பற்றப்படும் ஆலயங்களில் கார்த்திகை தீப விழா நடைபெறும்.

19. பரணி தீபம் எப்படி ஏற்றுவார்கள்?

டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறை முன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிநதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இதுவே பரணிதீபம்.

(அன்று மாலை 4.28 மணி வரை பரணி நட்சத்திரம்). பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சந்நதியில் வைக்கின்றனர். பரணி நட்சத்திரம் வரக்கூடிய நாளில் நாம் ஏற்றக்கூடிய ஒரே ஒரு தீபம் நம்முடைய முன்னோர்களின் அருளையும் ஆசியையும் பெற உதவும். மேலும் நம் வீட்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் உடல்நலம் சீராவதற்கு இந்த தீபம் உதவி செய்யும். எமதர்ம ராஜனின் அருளையும் பரிபூரணமாக பெறுவதற்கு உதவி செய்யும்.

20. கார்த்திகை மகா தீபம்

3.12.2025 அன்று மாலை ஆறு மணிக்கு அருணாசலேஸ்வரர் திருக்கார்த்திகை மகா தீப தரிசனம் நடைபெறும். 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இதற்காகவே உள்ள பிரதியேகமான தீபக்கொப்பரையை மலைக்கு கொண்டு செல்வார்கள். பொதுவாக தீபம் ஏற்றுவதற்காக ஆயிரம் மீட்டர் திரி, 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும். மாலை நேரத்தில் பஞ்ச மூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அன்று இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் வீதி உலா வருவார்கள்.

21. அருணாசல புராணம்

‘திருவண்ணாமலை தலத்தில் தீப தரிசனம் செய்பவர்கள் முக்தியடைவர்’ என்று அருணாசல புராணம் கூறுகிறது. ‘‘இந்த ஜோதி தரிசனத்தைக் கண்டவர்களின் பசிப்பிணி விலகும், துன்பங்கள் பனிபோல் விலகும். குலத்திலுள்ள இருபத்தியோரு தலைமுறையினருக்கு நான் முக்தியை அளிப்பேன்’ என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்து அருளியதாக பாடல் உள்ளது. அந்தப் பாடல்:

கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு ஜோதி

மலைநுனியிற் காட்ட நிற்போம்….

வாய்த்த அந்தச் சுடர் காணில் பசிபிணியில்

லாது உலகின் மன்னி வாழ்வார்

பார்த்ததிவர்க்கும் அருந்தவர்க்கும் கண்டோர்

தவிரும் அது பணிந்தோர் கண்டோர்

கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு

முத்திவரம் கொடுப்போம்’

22. தமிழர்கள் திருவிழா

பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருமந்திரத்தில், திருமூலர் அக்னி வடிவமாக விளங்கும் சிவபெருமானின் வழிபாட்டையும், அதனால் பெறப்படும் பயனையும் விரிவாகக் கூறுகின்றார். அது மட்டுமில்லை அவனை ஜோதியாக காண்பதே வழிப்பாடு என்கிறார். ‘‘உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை நச்சியே இன்பம் கொள்வார்க்கு நமன் இல்லை’’ விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்குத் தச்சும் அவனே அமைக்க வல்லானே என்பது அவர் வாக்கு. தலை உச்சியில் ஓங்கி நாதமாகவும் ஒளியாகவும் விளங்குவதை விரும்பி இன்பம் அடைந்த வர்க்கு யமபயம் இல்லை. ஆக்வநீயம், காருக பத்தியம், தட்சிணாக்னி ஆகிய அக்னிகள் சூரிய சந்திர அக்னி என்ற மூன்று நெருப்புகளுடன் உடம்பில் அமையச் செய்பவன் இறைவன்.

23. வைணவத்தில் கார்த்திகை சிறப்பு

இனி வைணவ மரபில் கார்த்திகை தீபத்தைப் பற்றிய சிறப்பு காண்போம். வைஷ்ணவ ஆகமத்தில் திருக்கார்த்திகை மாதத்தை தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் ஆகமங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. மரபு வழியாகவும் பின்பற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி லோக திவாகரமாய் விளங்கி இறைவனுக்கு பாசுரங்களால் விளக்கேற்றி வெளிச்சம் தந்த திருமங்கையாழ்வாரின் நட்சத்திரம் கார்த்திகையில் கார்த்திகையில் வருகிறது.

இவர் கலி இருள் அகற்ற வந்தவர் என்பதால், இவரை ஒரு விளக்காக வைணவத்தில் (கவிம் லோக திவாகரம்) என்று சொல்வார்கள். இவருடைய அற்புதமான தமிழ் பாசுரங்கள் நெஞ்சில் உள்ள இருட்டை விலக்கும் என்பதால் நெஞ்சுக்கு இருள் கடி தீபம் என்றார்கள். இவருடைய அவதார தினத்தை, கார்த்திகை பௌர்ண மியில் விளக்கு ஏற்றி கொண்டாடுவார்கள். அந்த நாளில் ஆழ்வார் அவதரித்த திருவாலி திருநகரியில் ஆழ்வாருக்கு விசேஷமான திருமஞ்சனம் நடை பெறும். அதுமட்டுமல்ல 10 நாட்கள் அவருடைய அவதார உற்சவம் உற்சாகமாக நடைபெறும். இன்னுமொரு சிறப்பு பெருமாளுக்கு இருப்பதுபோலவே ஆழ்வாருக்கும் தனியாக கொடிமரம் இந்த ஆலயத்தில் உண்டு.

24. விளக்கொளி பெருமாள்

காரணம், பெருமாள் தீபப் பிரகாசராக அவதரித்தார் என்று சொல்வார்கள். காஞ்சியில் திருதண்கா பெருமாளுக்கு விளக்கொளி பெருமாள் என்று பெயர். ‘‘என்னை ஆளுடை ஈசனை எம்பிரான் தன்னை யாம் சென்று காண்டும் தண்காவிலே” என்பது ஆழ்வார் பாசுரம். திருத்தண்கா என்பது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அருகிலேயே உள்ள ஒரு பகுதி. அந்தப் பகுதியில் தான் வேதாந்த தேசிகர் அவதரித்தார்.

அவருக்கு அங்கே தனியாக ஆலயம் உண்டு. ஒருமுறை பிரம்மா யாகம் செய்யும்போது, அசுரர்கள், மாயா சக்தியினால் யாகம் செய்ய முடியாத அளவுக்கு இருட்டை ஏற்படுத்தினார்கள். ஆகையினால் யாகம் நிறைவேறாமல் தடங்கல் ஏற்பட்டது. அப்பொழுது பிரம்மன் பிரார்த்திக்க, யாகம் நிறைவேறும் படியாக பெருமாள் தீபப்பிரகாசராகத் தோன்றினார். தாயாருக்கு மரகதவல்லி என்று பெயர். இது நடந்தது கார்த்திகை மாதம் கார்த்திகையில் என்பதால் அந்தத் தாயாருக்கும் பெருமாளுக்கும் தீபம் ஏற்றி கொண்டாடு வார்கள் இதனை அனுசரித்து வைணவர்கள் தங்கள் வீட்டில் தீபம் ஏற்றுவார்கள்.

25. திருமஞ்சனமும் தீபமும்

அன்றைக்கு எல்லா பெருமாள் கோயில்களிலும் பெருமாள் தாயாருக்கு சிறப்பான திருமஞ்சனம் நடைபெறும். காலையில் சிறப்பு திருவாராதனம் நடைபெறும். மாலையில் திருவாராதனம் முடிந்து, பெரிய அகல் விளக்கு ஏற்றப்படும். பிறகு புண்ணியாகவாசனம் செய்து கார்த்திகை தீப பிரதிஷ்டை செய்யப்படும். அந்த தீபத்துக்கு தீபாராதனையும் நடந்து தீபம் புறப்படும். பிரகாரத்தை வலம் வந்து, ராஜ கோபுரத்திலும் பெருமாள் சன்னதியிலும் தீபங்கள் வைக்கப்படும். பிறகு அந்த தீபம் தாயார் சன்ன திக்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்படும். தாயாருக்கு வேத மந்திரங்களோடு தீபம் சமர்ப்பிக்கப்படும். பின்பு தாயார் விமானத்திலும் மடைப்பள்ளி நாச்சியார் முன்பும் தீபம் வைக்கப்படும்.

26. சொக்கப்பனை

கார்த்திகை தீபத்தன்று சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி எல்லா தேவாலயங்களிலும் நடைபெறும். பனைமரத்தினை வெட்டிச் சிவாலயத்தின் முன்முற்றத்தில் நடுவார்கள். அதில் சில அடி உயரத்திற்குப் பனையோலைகளைக் கூம்பு போன்று கட்டி அமைக்கின்றார்கள். இவ்வமைப்பு சொக்கப்பனை என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று சிவாலயக் கோபுர உச்சியில் தீபம் ஏற்றி, பஞ்ச மூர்த்திகளுக்கு வழிபாடு நடத்தப்படும்.

அதன் பின் பஞ்ச மூர்த்திகளைச் சொக்கப்பனை வைத் திருக்கும் இடத்திற்கு அழைத்து வருகிறார்கள். பின்னர் பஞ்ச மூர்த்திகளுக்குத் தீபாராதனை காட்டப்பெற்று, அந்தத் தீபச்சுடரால் சொக்கப் பனையைக் கொளுத்துகின்றார்கள். எரிகின்ற சொக்கப்பனை அக்கினி மய லிங்கமாகப் பக்தர்களால் வணங்கப்படுகிறது. தூய்மைக்கு ‘‘சொக்க’’ என்று பெயர். தூய்மையான தங்கத்தை சொக்கத்தங்கம் என்று சொல்கிறோம். தூய்மையானது அக்னி. எந்தப்பொருளை போட்டாலும் அக்னி தூய்மை கெடாது. தூய்மையுள்ள இறைவனை அமலன் என்கிறோம். அவர்தான் சொக்கப்பனை. சொக்கப்பனையில் எரிதழலாக சொக்கப்பனை தரிசனம் செய்கிறோம்.

27. சொக்கப்பனை திருநீரு

பனை மரத்தின் சுடரை இறைவனாகக் காணுவதால் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு எல்லா கிராமங்களிலும் நடைபெறுகிறது அப்படிச் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு கிடைக்கும் கரியை திருநீறாக மக்கள் உடலில் பூசிக்கொள்வது உண்டு. இதனால் உடல் நோய்கள் தீர்ந்து ஆரோக்கியம் கிடைக்கும். அந்தச் சாம்பலை கடவுளுடைய அனுக்கிரகமாகக் கருதி வீடுகளுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள் தங்களுடைய வயல்களுக்கும் காடுகளுக்கும் அதைத் தூவுவார்கள் இதனால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு.

28. வாமன அவதாரமும் சொக்கப்பனையும்

திருவரங்கத்திலும் திருமலையிலும் இன்னும் பல முக்கியமான திருத்தலங்களிலும் கர்ப்பகிரகத்தில் விளக்கு ஏற்றிய பிறகு தீபத்தோடு உற்சவமூர்த்தி வெளியே வந்து தீப ஆராதனை நடந்து, அந்த தீபத்தை சொக்கப்பனை கொளுத்துவதற்கு பயன்படுத்துவார்கள். இது வாமன அவதாரதோடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியாக வைணவத்தில் சொல்லப்படுகிறது. மகாபலி யாகம் செய்தார். அப்பொழுது வாமன மூர்த்தி அவரிடம் மூன்றடி மண் கேட்டார். அதுமட்டுமில்லை மகாபலியின் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகத்திற்கு அனுப்பி விட்டார். அந்த யாகம் தடைப்பட்டு விட்டது. ஒரு யாகம் தடைபடக் கூடாது அல்லவா கார்த்திகை தீபத்தின் போது சொக்கப்பனை கொளுத்துதல் மூலமாக பூர்ணாகுதி நடந்து மகாபலியின் யாகத்தை மஹா விஷ்ணுவின் முன்னிலையில் நிறைவேற்றி வைப்பதாகக் கூறப்படுகிறது.

29. அகல் விளக்கு

விளக்கு மூன்று செயல்களை செய்யும். முதலில் அது தன்னையும் காட்டும். நாம் எங்கு இருக்கிறோம் என்று நம்மையும் காட்டும் நம்மை சுற்றி உள்ள பொருள்களையும் காட்டும். இவை எல்லாவற்றையும் விளக்குவதால் தான் அதற்கு விளக்கு என்று பெயர். அந்த விளக்கைத் தான் கார்த்திகை தீபம் அன்று ஏற்றுகிறோம் மண்ணால் செய்யப்பட்ட விளக்கை அகல் விளக்கு என்று சொல்லுகின்றோம். அந்த மண் விளக்குகளைத் தான் நிறைய ஏற்றுகிறோம்.

இந்த விளக்கு ஏற்றுவதன் மூலமாக இருட்டு அகல்கிறது. மாயை அகல்கிறது. கவலைகள் அகல்கின்றன. இப்படி இருட்டையும் துன்பத்தையும் கவலை யையும் அகலச் செய்கின்ற விளக்கு என்பதால் இதனை “அகல் விளக்கு” என்று சொல்கின்றோம். இறைவனை வணங்கி ஒரு விளக் கேற்றி வைத்தால், எப்பேர்பட்ட துன்பங்களும் விலகி ஒரு நல்ல வெளிச்சம் மனதிற்கு கிடைக்கும் என்பதுதான் அகல் விளக்கின் தத்துவம். ‘‘ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன்’’ என்றும், ‘‘பொய் இருள் அகல நெய்விளக்கு ஏற்றி’’ என்றும், என்றும் பாடி வைத்தார்கள். இடராழி நீங்கவே சுடர் ஆழி ஏற்றினேன் என்பது ஆழ்வார் வாக்கு.

30. எங்கெங்கே விளக்கு ஏற்ற வேண்டும்?

கார்த்திகை தீபத்தன்று எங்கெங்கே விளக்கு ஏற்ற வேண்டும்? எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்? என்று பலருக்கு சந்தேகம் வரும். எங்கெல்லாம் இருட்டு இருக்கிறதோ, எங்கெல்லாம் வெளிச்சம் தேவைப்படுகிறதோ, எங்கெல்லாம் ஏற்றினால் உங்கள் மனதிற்கு நிம்மதி கிடைக்கின்றதோ, எங்கெல்லாம் ஏற்றினால் வீட்டின் அமைப்பும், அழகும் கூடுமோ அங்கெல்லாம் ஏற்றலாம்.

குறிப்பாக வாசலில், சமையல் அறையில், பூஜை அறையில், கூடத்தில், உங்களால் எத்தனை விளக்குகள் ஏற்ற முடியுமோ, அத்தனை விளக்குகள் ஏற்றலாம். பூஜையறையில் குத்து விளக்குகளும் அல்லது காமாட்சி மகாலட்சுமி விளக்குகளும், மற்ற இடங்களில் அகல் விளக்குகளும் ஏற்றலாம். அதோடு கார்த்திகைத் தீபத்தன்று விரதம் இருந்து, பிரத்தியேகமான நிவேதனமாக அவல்பொரி, நெல்பொரி, வெல்ல அடை, கார வடை முதலிய நிவேதனம் செய்து படைக்கலாம். திருக்கார்த்திகை தீபத்தின் போது (3.12.2025) எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கவும் துன்பம் என்னும் இருள் அகலவும், புதுவழி பிறக்கவும் தீபம் ஏற்றுவோம்.

எஸ். கோகுலாச்சாரி